பலாப்பழம் முக்கனிகள் எனப் போற்றப்படும் மா, பலா, வாழை என்பதில் இரண்டாவதாகக் கருதப்படுகிறது. இது கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கிறது.
இதன் தாயகம் இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடராகக் கருதப்படுகிறது. இப்பழம் சாம்ராட் அசோக மன்னரால் இனம் காணப்பட்டது. அவரால் ஊக்கப்படுத்தி வளர்த்த மரங்களில் இதுவும் ஒன்று.
இன்றைக்கு இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பிலிபைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் பலா பயிர் செய்யப்படுகிறது.
வங்காள தேசம் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு பலாப்பழம் தேசியப் பழமாகும்.
பலாப்பழம் வெப்பமண்டலத்தைச் சார்ந்த, மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய பழமாகும். இப்பழத்தின் மரமானது 30 மீ உயரம்வரை வளரும். இது வெப்பத்துடன் கூடிய மழைக் காடுகளில் நன்கு செழித்து வளரும்.
ஒரு பருவத்தில் ஒரு மரத்திலிருந்து 250 பழங்கள்வரை கிடைக்கும். பலாப்பழமானது 80 சதவீதம் நீர்சத்தினைக் கொண்டு இனிப்புச் சுவையுடன் பலரையும் கவர்ந்திழுக்கிறது.
பலாப்பழமானது உருண்டையாகவோ நீள்வட்ட வடிவிலோ காணப்படும். இது 3 முதல் 30 கிலோ எடையிலும், 10முதல்60 செமீ நீளத்திலும், 25முதல்75 செமீ விட்டத்திலும் இருக்கும்.
பழத்தின் வெளிப்புறமானது முட்களுடன் காணப்படும். பழத்தின் உட்புறம் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற சுளைகள் காணப்படுகின்றன. ஒரு பழத்தில் 50 முதல் 500 சுளைகள் காணப்படும்.
பழத்தின் உள்ளே கொட்டையானது மெல்லிய ஒளி ஊடுருவும் தோலால் மூடப்பட்டிருக்கும். கொட்டையானது 2முதல்4 செமீ உயரமும், 1முதல்3 செமீ தடிமனையும் பெற்றிருக்கும்.
பலாமரம் மற்றும் அதன் பழத்தினை வெட்டும்போது வெள்ளைநிற லேக்டெக்ஸ் என்ற பால் போன்ற திரவம் வெளிப்படுகிறது.
பலாப்பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
இப்பழத்தில் விட்டமின்கள் ஏ,சி,இ, தயாமின், நியாசின், ரிபோஃபுளோவின், பைரிடாக்ஸின் போன்றவையும் தாதுஉப்புக்களான கால்சியம், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, பாஸ்பரஸ், தாமிரம் போன்றவையும், பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட நுண்ஊட்டச்சத்துக்கள், ஃபோலிக் அமிலம், நார்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.
மருத்துவப்பண்புகள்
பலாப்பழத்தின் பட்டை, வேர்கள், பூக்கள், பழங்கள் மற்றும் விதைகள் மருத்துவப் பண்புகள் மிகுந்தவை.
ஆற்றல் கோபுரங்கள்
பலாப்பழத்தில் எளிய சர்க்கரைகளான சுக்ரோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் காணப்படுகின்றது. எனவே இப்பழத்தினை உண்டவுடன் அவை நமக்கு உடனடி சக்தியினை வழங்குகின்றன.
இப்பழத்தில் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் காணப்படுவதில்லை. மேலும் இது குறைந்த அளவு எரிசக்தியினை கொண்டுள்ளது. எனவே இவை உடல் எடையைக் கூட்டாமல் உடனடி சக்தியினை உண்பவர்களுக்கு வழங்குகிறது. இப்பழங்கள் ஆற்றல் கோபுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
புற்று நோயைத் தடுத்தல்
இப்பழத்தில் விட்டமின் சி, பைட்டோநியூட்ரியன்களான ஐசோஃப்ளவன்ஸ், விக்னாஸ், சபோனின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்புப் பெருளாகவும், வயதோதிகத்தினால் ஏற்படும் சருமச் சுருக்கங்களுக்கு எதிர்ப்புப் பொருளாகவும் செயல்படுகின்றன.
மேலும் புற்றுநோய்க்குக் காரணமானவற்றை தடைச் செய்கின்றன. இவை செல் சீரழிவையும், உறுப்புகளின் சிதைவுக் கோளாறுகளையும் சரிசெய்கின்றன. இவை நுரையீரல், மார்பகம், தோல், இரைப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்று நோயினை சரிசெய்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துதல்
பலாப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் உடலினை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கின்றன. இரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டினை துரிதப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை வலுப்படுத்துகின்றன.
ஒரு கப் பலாப்பழத்தினை உண்ணும்போது அவை உடலுக்கு அதிகமான ஆன்டிஆக்ஸிஜன்ட்களை வழங்குகின்றன.
செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் சரியாக
பலாப்பழமானது அல்சர் நோய் எதிர்ப்புப் பொருளைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது அவை அல்சர் மற்றும் செரிமான பிரச்சினைகளைச் சரிசெய்கிறது.
இப்பழத்தில் உள்ள நார்சத்தானது மலச்சிக்கல் வராமல் தடுப்பதுடன் குடலினை சரிவர இயங்கச் செய்கிறது. இப்பழமானது பெருங்குடலில் நச்சுப் பொருட்கள் சேரவிடாமல் தடுத்து அதனை பாதுகாக்கிறது.
கண்கள் மற்றும் சருமப்பாதுகாப்பிற்கு
பலாப்பழத்தில் விட்டமின் ஏ சத்து உள்ளது. இது தெளிவான கண்பார்வையைத் தருவதுடன் கண்புரை நோய், கண்தசை அலர்ஜி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இப்பழம் சரும சுருக்கங்கள் ஏற்படாதவாறு தடுப்பதுடன் குறைபாடற்ற பளபளப்பான சருமத்தையும் தருகிறது.
இரத்தஅழுத்தத்தைக் குறைய
பலாப்பழத்தில் காணப்படும் பொட்டாசியமானது உயர் ரத்த அழுத்ததிற்கு தீர்வினை வழங்குகிறது. இப்பழத்தினை உண்ணும்போது உயர் ரத்த அழுத்தம் குறைந்து சீரான ரத்த ஓட்டத்தினை உண்டாக்குகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், இருதயச் சீர்கேடு ஆகியவை ஏற்படக்கூடிய வாய்ப்புகளை இப்பழம் குறைக்கிறது.
ஆஸ்துமாவினைக் குணப்படுத்த
பலாமரத்தின் வேரானது ஆஸ்துமாவினை குறைக்கப் பயன்படுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பலாவேரினை நீரில் காய்ச்சி அந்நீரினைக் குடித்துவர ஆஸ்துமா குணமாகும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எலும்புகளைப் பலப்படுத்த
பலாப்பழத்தில் காணப்படும் மெக்னீசியம் என்ற தாதுப்பொருள் உடல் கால்சியத்தை உட்கிரகிக்கும் அளவினை அதிகரிக்கிறது. மேலும் மெக்னீசியம் கால்சியத்துடன் இணைந்து எலும்புகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்டியோடீபாரோசிஸ் போன்ற எலும்பு நோய் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கிறது.
தைராய்டு சுரப்பி சரிவர செயல்பட
பலாப்பலத்தில் காணப்படும் முக்கிய நுண்ஊட்டச் சத்தான தாமிரச் சத்து வளர்ச்சிதை மாற்றம் மற்றும் தைராய்டு சுரபி சரிவர செயல்படச் செய்கிறது. மேலும் தாமிரச் சத்து ஜீரணம் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு சீராக்குகிறது.
இரத்த சோகைக்கு
இப்பழத்தில் காணப்படும் இரும்புச்சத்து இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்திக்கு காரணமாகி இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. உடலின் சீரான இரத்த ஓட்டத்திற்கு காரணமாகிறது.
இப்பழமானது ஜாம்கள், ஜெல்லிகள், இனிப்புகள், மிட்டாய்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. பலாக்காயானது சமைத்து உண்ணப்படுகிறது. பலாக்கொட்டையானது அவித்தோ, உணவுப் பொருட்களோடு சேர்த்து சமைத்தோ உண்ணப்படுகிறது.
பலாமரப் பலகையானது வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்க, இசைக்கருவிகள் தயார் செய்யப் பயன்படுகிறது.
பலாப்பழத்தினை தேர்வு செய்ய
நல்ல வாசனையுடனும் கையினால் அழுத்தினால் மெதுவாகவும், மேல்தோல் சற்று பழுப்பு கலந்த பச்சை நிறத்திலும், மேல்தோலில் உள்ள முட்கள் மெதுவாவும் உள்ள பழத்தினைப் பார்த்து வாங்க வேண்டும்.
பலா நன்கு பழுத்துவிட்டால் அறைவெப்பநிலையில் வைத்திருக்கும்போது ஓரிரு நாட்களில் பயன்படுத்திவிட வேண்டும்.
பலாப்பழத்தினை எடுக்கும் முறை
பலாப்பழத்தினை குறுக்குவாக்கில் வெட்டி பின் நீளவாக்கில் அரிந்து நடுவில் உள்ள தண்டுப்பகுதியினை நீக்கிவிட்டு உள்ளே உள்ள பலாச்சுளைகளை பிய்த்து எடுக்க வேண்டும்.
பலாப்பழத்தினை நறுக்கும்போது பால் வடிந்து கைகளில் ஒட்டும். இதனைத் தடுக்க கையில் எண்ணெய் தடவி அதன்பின் பழத்தினை நறுக்கலாம்.
பழம் நறுக்கும் கத்தியினை முதலில் தீயில் லேசாக காட்டி பின் பழத்தினை நறுக்கலாம்.
பலாப்பழத்தினை அளவுக்க அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலி வாந்தியை உண்டாக்கிவிடும். எனவே அளவோடு சாப்பிட வேண்டும்.
சத்துக்கள் நிறைந்த பலாப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
arumaiyana pathivu