பலூன் டாக்டர் குறும்படம் விமர்சனம்

பலூன் டாக்டர்

பலூன் டாக்டர் குறும்படம் வறுமையின் வலி உணர்த்தும் உலகியல் படம்.

வறுமை, வாழ்வின் பல அம்சங்களை வாழ விடாமல் செய்துவிடும் கோரமான முகங்களை உடையது. தீராத பயணங்களும் முழுமை பெறாத இன்பங்களும் இதன் வடிவங்கள் ஆகி நிற்கும்.

வாழ வேண்டியவற்றை வாழாமல், ஏதோ ஒன்றை வாழ்ந்து விடுவதையே ஏழ்மை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது.

இதனை மிகத் தெளிவாக இப்படம் விளக்கிச் சொல்கிறது.

ஏழை- பணக்காரன் வித்தியாசம், வாழ்வின் நிகழ்வுகளை அனுபவிப்பது கொண்டே அறிந்து கொண்டு விடலாம்.

எவ்வித நெருக்கமும் மனதின் முழு ஈடுபாடும் அற்ற வெறுமைகளைச் சுமந்து கொண்டு வாழ்க்கையைக் கடத்துவது தான் பணம் இல்லாதவர்களின் இயல்பாகும்.

ஏழையும் பணக்காரரும் ஓரிடத்தில் சந்திக்கும் பொழுது, ஏற்படும் நெருடல்களை உலகம் தினமும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறது.

அந்த இடம் படைப்பாளர்களின் கண்களில் படும்பொழுது, இது போன்ற படங்கள் மென்மைத் தன்மையோடு உருவாகின்றன.

வறுமை நிலை கண்டு உதவுபவர்கள், மனிதர்களில் கடவுளாக மாறிப் போய் இருக்கின்றார்கள்.

அந்த மனநிலையை மகத்தான உன்னதத்தை இனம் காட்டுகிறது இந்தப் படம். அதுபோல் உதவும் கதாபாத்திரம்தான் பலூன் டாக்டர்.

குறும்படத்தின் கதை

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயியின் மகன் நண்பர்களுடன் புது மழையில் நனைந்து விளையாடுகிறான். அதனால் காய்ச்சல் வருகிறது.

பையனைப் பள்ளிக்கு அனுப்ப எழுப்பும் அப்பா, காய்ச்சலுடன் இருப்பதைக் கண்டு, உள்ளூர் நாட்டு வைத்தியரிடம், மருந்து வாங்கிக் கொடுத்து வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறார்.

இது தெரிந்த தாய், ”வெளியூர் பெரிய டாக்டரிடம் சென்று மருந்து வாங்கிக் கொடு. அதுதான் சிறப்பானது” எனத் தன் கணவனிடம் வற்புறுத்துகிறாள்.

பணம் இல்லாத அவர், தன் நண்பரிடம் கடன் கேட்கிறார்.

கோயில் உண்டியலில் போட இருந்த பணத்தை நண்பர் கொடுக்கிறார்.

வெளியூர் பெரிய டாக்டரிடம் பையனை அழைத்துச் செல்கிறார் ஏழை விவசாயியான அப்பா.

இங்கு மருத்துவமனை முன்பு, பலூன் கடைக்காரர் நிற்கிறார். மருத்துவமனையில், மனிதாபிமானம் இல்லாமல், வைத்தியம் செய்வதற்கு அதிகமான பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

கையில் இருக்கும் பணத்தில் வாங்கிய ஊசியும் உடைந்து போக, பலூன் மட்டுமே பையனின் மகிழ்ச்சியாகிக் காய்ச்சல் சரியாகிவிடுகிறது. பலூன் கடைக்காரரின் உதவும் மனத்தால் தான் இச்சூழ்நிலை சரியாகிறது.

200 ரூபாய் செலவழித்துப் போட்டு இருக்க வேண்டியது ஊசியும் மாத்திரையும்; அதனால் போக வேண்டிய காய்ச்சல், பத்து ரூபாய் பலூனில் பறந்தோடி விட்டது.

பலூன் டாக்டர் குறும்படம் சிறப்பியல்புகள்

நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் குறும்படம் வெளிவந்திருக்கிறது. நல்ல கதை, நல்ல நடிகர்கள், நல்ல கேமராமேன் எனச் சிறப்பான குறும்படங்களுக்கான அத்தனை தகுதிகளும் இப்படத்தில் இருப்பதால் ஐந்து திரைப்படவிருதுகளை இக்குறும்படம் பெற்றிருப்பது சிறப்பானதாகும்.

அதிகமான பார்வையாளர்களையும் விமர்சனங்களையும் இக்குறும்படம் பெற்றிருக்கிறது.

உலகியலை அப்படியே கதை ஆக்குவதும், அதை அழகுற காட்சிப்படுத்துவதும் சிறந்த படைப்பாக மாறுகிறது. அவ்வாறான சிறந்த படைப்பாக குறும்படம் விளங்குகிறது.

இரண்டு பலூன்காரர்கள் வருகிறார்கள். எப்படியும் குழந்தைகளிடம் பலூன்களை விற்றுவிட வேண்டும் என்று இருவரும் எண்ணுகிறார்கள்.

ஆனால், ஏழையான அப்பாவிற்குத் தான் வாங்கித் தருவதற்குப் பணம் இல்லை. எனவே, பலூன்காரர்கள் இருவரையும் அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார். 

ஒரு பொருள் மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும், பணம் இல்லாததால் அதன் மேல் வெறுப்பு வருகிறது என்பது உளவியல் உண்மை தானே?

இந்த உணர்வுகள் அப்படியே படத்தில் காட்சிகளாக வடிக்கப்பட்டுள்ளன. இது படத்தின் உண்மைத் தன்மையைக் காட்டுகிறது.

மனைவி, என்னதான் உள்ளூர் நாட்டு மருத்துவர் மருந்து கொடுத்தாலும் அதில் திருப்தி ஏற்படாமல், பக்கத்து வீட்டுக்காரர் வெளியூரில் தன் மகனுக்கு மருத்துவம் பார்த்ததை மனதில் கொண்டு, என் மகனுக்கும் வெளியூரில் சென்று வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறாள். பெண்களின் உள்ளுணர்வை இக்காட்சி அழகாகப் படம் பிடித்திருக்கிறது.

நண்பனின் நிலையறிந்து, முதலில் கடனுக்குக் காசு இல்லை என்றாலும், பிறகு வீட்டிற்குள் சென்று உண்டியலில் போட இருந்த காசை எடுத்து வந்து கொடுக்கிறார்.

ஏழ்மையின் நிலையை, இன்னொரு ஏழை மட்டுமே உணர்கிறான் என்ற கருத்தை இதன் மூலம் முன் வைக்கிறார் இயக்குனர்.

மருத்துவமனையில் பணம் மட்டுமே முதன்மை, அது இல்லை என்றால் மருத்துவம் இல்லை எனத் திருப்பி அனுப்புவது, பிறகு மருத்துவர் உதாசீனமாக நடந்து கொள்வது போன்ற காட்சிகள், மருத்துவமனைகள் இன்றைக்கு மனிதாபிமானம் இல்லாமல் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆகி நிற்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்துகின்றன. குறும்படம் சமூக அவலத்தைத் தோலுரிக்கின்றது இவ்விடத்தில்.

“குழந்தைகளின் சிரிப்பே கோடி ரூபாய் தரும். வெறும் பணம் வேண்டாம்” என்று கூறும் பலூன் கடைக்காரர் கதாபாத்திரம், சிறப்பான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

பாத்திரத்தில் நடித்த நடிகரும் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய சிரிப்பு, இதுவரை திரைப்படங்களில் காணாத ஒரு அற்புதமான அழகான சிரிப்பு.

குழந்தை விரும்பும் பொருள் அதற்குக் கிடைத்துவிட்டால் போதும்; எல்லா நோயும் போய்விடும்.

அதைப் பெற ஏங்கினால் நோய் பெருகும் எனப் பலூன்காரர் மூலமாக வெளிப்படுத்தப்படுவது மாபெரும் உளவியல் உண்மையாகும்.

நாட்டு மருத்துவத்தை உதாசீனப்படுத்திவிட்டு, இன்றைக்கு நாம் எல்லோரும் மேலைநாட்டு மருத்துவத்தைத் தேடி அலைகிறோம்.

அதனாலேயே நாம் அலைகழிக்கப்படுகிறோம் என்ற சமூகச் சூழ்நிலை இக்குறும்படம் மூலமாக மிகச்சரியாக விளக்கப்பட்டுள்ளது.

குறும்படத்தின் குறை

கிராமப்பாங்கான ஊர் விவசாயி பேசும் வசனம், சென்னைவாசி பேசும் வசனத்தை போல் உள்ளது. இது அந்த இடத்தில் முரணாக இருக்கிறது.

கிராமச்சூழலை வெளிப்படுத்த எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகம். அதைக் குறைத்திருக்கலாம்.

குழந்தைக்குக் காய்ச்சல், கையில் போதுமான காசு இல்லாமல் வரும் சோகக் காட்சியில், காட்சிக்கு ஒட்டாத இசை வெளிப்படுகிறது. இது அந்த உணர்வுகளை இவ்விடத்தில் தெரிவிப்பதில் தோல்வி அடைந்திருக்கிறது. இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சிறப்பான கதை, திரைக்கதை ஆக்கப் பட்டிருந்தாலும் ஒரு நாடகத் தன்மை காணப்படுகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. வசனம் காரணமாக இருக்கலாம்.

படக்குழு

நடிப்பு : பரி இளவழகன், மாஸ்டர் எஸ். யுவனீஸ்வரன், ரவிக்குமார், சுஹாசினி சஞ்சீவ், லிஷா

திரைக்கதை & இயக்குனர் : டாக்டர் வெங்கட் நாராயணன். ஜெ

ஒளிப்பதிவாளர் : பிரிதிவி ராஜேந்திரன்

இசை இயக்குனர் : தினகர் உதய சங்கீதன்

படக்கலவை : விக்னேஷ் ஆர்.எல்

வாசகர் விமர்சனம்

தடையற்ற திரைக்கதை. அனைத்து நடிகர்களின் அழகான முகபாவங்கள், கவிதை ஒளிப்பதிவு, பொருத்தமான பின்னணி இசை, சூப்பர் எடிட்டிங்.

நண்பர் அவருக்குக் கொடுக்கும் மனப்பான்மை; மனிதகுலத்திற்கு சேவை கடவுளுக்கு சேவை.

‘ கிளினிக்கில் காட்டப்பட்ட ‘அவசர பொருள் சார்’ நகர வாழ்க்கை …

நகரத்தில் நடிகர் சாலையைக் கடக்கும் விதம் …

மற்றும் நகர பலூன் விற்பனையாளரின் வெளிப்பாடுகள் …

முதல் பலூன் விற்பனையாளர் கூட செய்தார் ஒரு அருமையான வேலை …

அவர்களின் திறமைகள் அனைத்தையும் நீங்கள் வெளிக்கொணர்ந்தீர்கள்.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக வெங்கட் …

இது போன்ற அர்த்தமுள்ள படங்களைத் தொடருங்கள் …

நன்றாக இருந்தது …

பலூன் டாக்டர் குறும்படம் பாருங்கள்

குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

Visited 1 times, 1 visit(s) today

Comments

“பலூன் டாக்டர் குறும்படம் விமர்சனம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. க வீரமணி

    பலூன் டாக்டர் படம் பார்த்தேன் நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடக்கிறது …

    ஏற்றமும் தாழ்வும்

    நல்லதும் கெட்டதும்

    இந்த உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இல்லாமை இயலாமை கூட சில சமயம் ரசிக்கும்படியாக தான் இருக்கிறது.

    வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிறார்கள். ஒரு பலூன் தன்னுள் காற்றை நிரப்பிக் கொண்டு ஒரு வெற்றிடத்தை முழுமையாக்குகிறது.

    நல்ல படம்.

    நல்ல தேர்வு.

    நுணுக்கமான விமர்சனம்!

  2. பேரா.ச.கார்த்திக்

    இன்று அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது. மனிதநேயம் மரத்துப் போய்விட்டது.

    கல்வி, மருத்துவம், சட்டம், வேலை அனைத்தும் பணம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்கிற அவல‌ சூழ்நிலை இந்த நாட்டில் உருவாகிவிட்டது.

    சிறப்பான விமர்சனம் ஐயா; வாழ்த்துகள்!.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.