பள்ளிக்குச் செல்லவில்லை!

அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. பள்ளிவாசலை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் கூட ஐந்து வேளை தொழுகையையும் தவறவே விட்டதில்லை பக்கீர்.

பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகையை முடித்துவிட்டு தெருவின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் அவர். அன்றாடம் அருகில் உள்ள கடையில் ரொட்டிகளை வாங்கிவிட்டு செல்வது அவரது வழக்கம்.

அவருடைய தெருவை நோக்கிச் செல்லும் பொழுது தெருக்களில் உள்ள நாய்கள் அனைத்தும் அவரை நோக்கி வந்து சூழ்ந்து கொண்டன. அந்த நாய்களுக்கு பரிவோடு தன் கையில் இருந்த ரொட்டிகளை எடுத்துக் கொடுத்தார் பக்கீர்.

அந்த தெருவின் வழியாக ரப்பானி ராவுத்தர் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய்களுக்கு ரொட்டிகளை கொடுத்துக் கொண்டிருந்த பக்கீரைப் பார்த்தார்.

“ஓ! அஸ்ஸலாமு அலைக்கும் பக்கீர் பாய்!”

“அலைக்கும் வஸ்ஸலாம் பாய்!”

“எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா!”

“நல்லா இருக்கேன் பாய்!”

“வியாபாரம் எல்லாம் எப்படி போகுது பாய்?”

“எங்க பாய் வியாபாரம் நடக்குது! எல்லாம் காலம் முன்னேறி போச்சு. முந்தி மாதிரி யாரும் துணியை தச்சு போடறது இல்ல பாய்! ஏதோ ஒன்னு ரெண்டு வருது! அதுல தைக்கிறதுல கொஞ்சம் காசு வருது! அதுல வயித்தக் கழுவிட்டு இருக்கோம். வறுமையில் தான் குடும்ப வாழ்க்கை ஓடுது”

“விடுங்க பாய். ஒன்னும் கவலைப்படாதீங்க. எல்லாம் அல்லா பாத்துக்குவான்”

“நம்ம ஹோட்டல் வியாபாரம் எப்படி இருக்கு?”

“நல்லா போகுது பாய்!”

“ஹஜ் பயணம் போறதுக்கு அரசாங்கத்திலிருந்து மானியம் கொடுக்குறாங்கலாமே அது உங்களுக்கு தெரியுமா?”

“ஆமா பாய் கேள்விப்பட்டேன். அதுக்கு அப்ளை பண்ணனும்”

“அப்ளை பண்ணும் போது நமக்கும் கொஞ்சம் சொல்லுங்க பாய். ஹஜ்ஜுக்கு போகணும்னு ரொம்ப நாளா ஆசை”

“கண்டிப்பா சொல்லுறேன். எங்க பாய் அரசாங்கத்தில் இருந்து கொடுக்கிற மானியம் பத்துது? நமக்கு இங்கிருந்து சவுதி போயி அங்க சாப்பிட தங்க இதுக்கெல்லாம் பணம் வேணும் பாய்.

அரசாங்கத்தில் இருந்து ஒரு லட்சம் தான் தராங்க. நமக்கும் கையில ஒரு ரெண்டு லட்சம் அதிகமா இருந்தா நல்லா இருக்கும். ஹஜ் பயணத்தை நல்லபடியா முடிச்சுட்டு வரலாம்”

பணம் அதிகமாகும் என்று சொன்னவுடன் பக்கீர் பாயின் முகம் பூ போல வாடிப் போனது.

“என்ன பாய் அமைதியா ஆயிட்டீங்க! கொஞ்ச நேரத்துலையே?”

“ஒன்னும் இல்ல பாய்!”

“சரி பக்கீர் பாய்! இன்ஷா அல்லா நாளைக்குப் பார்ப்போம்” என்று கூறிவிட்டு ரப்பானி ராவுத்தர் சென்று விட்டார்.

பிறகு வீட்டிற்கு வந்து விட்டார் பக்கீர். அஜ்மா உணவு சமைத்து வைத்திருந்தாள். அவர் வந்தவுடன் பக்கீருக்கு பரிமாறினாள்.

பக்கீரும் சாப்பிட்டுவிட்டு பக்கீரும் இரவு ஈஷா தொழுகையை முடித்து விட்டு படுக்கையறைக்குச் சென்றார். அப்போது அஜ்மா அவருக்கு சுகர் மாத்திரைகளை கொண்டு வந்து கொடுத்தாள்.

அதனை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். அஜ்மா பக்கீரைப் பார்த்து “என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்றாள்.

“இன்னைக்கு வர்ற வழியில ரப்பானி ராவுத்தரை பார்த்தேன். ஹஜ் போறதுக்கு அரசாங்கத்திலிருந்து மானியம் கொடுக்குறாங்க. அதை பற்றி பேசிட்டு இருந்தோம்.

அவரு ஹஜ் போறதுக்கு அரசாங்கத்தில் இருந்து கொடுக்கிற காசு பத்தாது. மேற்கொண்டு ரெண்டு லட்சம் இருந்தால் நல்லா இருக்கும் அப்படின்னு சொன்னாரு அதான் யோசிச்சிட்டு இருக்கேன்”

“அவருக்கு என்னங்க ஹோட்டல் வச்சிருக்காரு நல்லா வியாபாரம் நடக்குது. அவங்க பிள்ளைகளும் நல்லா சம்பாதிக்கிறாங்க. அதனால அவர் போகலாம்,

நமக்கு எங்கங்க குடும்பத்துல வர்ற வருமானமும் ரொம்ப கம்மிதான். நம்ம எப்படிங்க போக முடியும்? நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான். எதையும் நினைக்காம நல்லா தூங்குங்க. எல்லாம் அல்லா பாத்துக்குவான்” என்று கூறிவிட்டு அஜ்மாவும் உறங்கச் சென்றாள்.

பக்கீரின் படுக்கை அறைக்கு முன்னால் கபா படம் போட்ட காலண்டர். எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர் காலையில் கண் விழிப்பார். பின்பு காலைக்கடனை முடித்துவிட்டு வழக்கம் போல ஃபஜர் தொழுகைக்குச்சென்று விடுவார்.

அதே போல் அன்றும் தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். காலை உணவை அஜ்மா பக்கீருக்கு பரிமாறினாள்.

பின்பு மதிய உணவை தயார் செய்து கூடையில் வைத்து கொடுத்து அனுப்பி விட்டாள். பக்கீரும் அவருடைய கடைக்குச் சென்று அங்கு இருந்த துணிகளை தைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது பக்கீரினுடைய கடைக்கு அம்பானி ராவுத்தர் வந்தார். ‘ஜமாத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறி பக்கீரை அழைத்துச் சென்றார்.

இருவரும் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக அப்ளிகேஷனை போட்டுவிட்டு வந்தார்கள். பிறகு ரப்பானி ராவுத்தர் அவருடைய கடைக்குச் சென்று விட்டார். பக்கீரும் பள்ளிவாசலுக்கு சென்று அஸர் தொழுகை செய்துவிட்டு வீடு திரும்பினார்.

“அஜ்மா, ஹஜ் பயணம் போறதுக்கு, நம்ம ஜமாத்துல போயி இன்னைக்கு நானும் ரப்பானி ராவுத்தரும் அப்ளிகேஷன் போட்டு வந்தோம்”

“ஓ அப்படியா! ரொம்ப நல்லதுங்க!”

“அரசாங்கத்தில் கொடுக்குற மானியத்தோட நம்ம கையில காசு இருந்தாலும் ஹஜ்ஜுக்கு போகலாம் நம்மட்ட காசு எதுவும் இல்லைங்க நம்ம என்ன பண்றது?”

“இன்ஷா அல்லா! நாம் போவோம் அஜ்மா!”

“அதுவும் சரிதான். வாங்க சாப்பிடலாம்” என்று அஜ்மா கூறினாள். பின்னர் இருவரும் சாப்பிட்

“அதுவும் சரிதான். வாங்க சாப்பிடலாம்” என்று அஜ்மா கூறினாள். பின்னர் இருவரும் சாப்பிட்டார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.

அஜ்மா பக்கீரை ஒரு குழந்தை போல நன்றாக பார்த்துக் கொள்வாள். அரவணைத்து அக்கறை காட்டுவாள். அதுபோல பக்கீரும் அஜ்மாவிடம் அக்கறையுடன் இருப்பார்.

நான்கு மாதங்களுக்கு பிறகு, பக்கீர் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது.

‘ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வந்துள்ளது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு’ அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப்போல ரப்பானி ராவுத்தருக்கும் அதே கடிதம் வந்துள்ளது. இருவரும் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரிடம் அந்த ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை இருவரும் பெற்றுக் கொண்டு வந்தனர்.

பின்பு இருவரும் பள்ளிவாசலுக்கு சென்று லுஹர் தொழுகையை முடித்துவிட்டுச் சென்றனர்.

இரண்டு வாரங்கள் கழித்து ரப்பானி ராவுத்தரும் அவரது மனைவியும் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்காக மெக்கா சென்றனர்.

அஜ்மாவும் பக்கீரும், ஹஜ் பயணத்திற்கு போதிய பணம் இல்லாததால், அரசாங்கத்திடமிருந்து பெற்ற மானியம் ஒரு லட்ச ரூபாயை பள்ளிவாசல் கட்டிட பணிக்காக ஜமாத்தில் நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.

பக்கீருக்கு ரப்பானி ராவுத்தர் ஞாபகமாவே இருந்தது. அவரின் ஹஜ் பயணத்தை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தார்.

ஒரு வாரம் கழித்து ரப்பானி ராவுத்தருக்கு பக்கீர் போனில் அழைப்பு விடுத்தார்.

“ஹலோ! அஸ்ஸலாமு அலைக்கும் ரப்பானிபாய்!”

“வா அலைக்கும் அஸ்ஸலாம் பாய்!”

“ஹஜ் பயணம் எப்படி பாய் போகுது? நல்லா இருக்கா!”

“ரொம்ப நல்லா இருக்கு பாய் சொல்றேன். கேளுங்க!”

“சொல்லுங்க பாய்; கேட்போம்.”

“நாங்க மெக்கவுல இருக்க காபாவுக்கு போயி தொழுகைய முடிச்சுட்டு வந்தோம்.

நம்ம பள்ளியில் இத்தனை நாளா தொழுதுட்டு இருந்தோம். இங்கே ஹஜ்ஜுக்கு வந்து காபால தொழுகும்போது எனக்கு அப்படியே ரொம்ப சந்தோசமா இருந்துச்சு பாய்!

என்னுடைய வாழ்க்கையில் என்னால மறக்கவே முடியாத ஒரு விஷயம் ஹஜ் போய் காபால நான் தொழுகை பண்ணதுதான்.

அங்க ஜம்ஜம் தண்ணீர் இருந்தது. அதையும் நமக்கு தேவையான பாட்டில்ல வாங்கிக்கிட்டு அப்படி வந்தோம்.

அடுத்த மறுநாள் மதினா போனோம்.

மதினா போய் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடங்கி இருக்கிற இடத்தைப் பார்த்தோம்.

ஹஜ் பயணம் ரொம்ப நல்லா இருந்துச்சு பாய். இன்ஷா அல்லா! நீங்களும் ஒருநாள் வரணும்னு நான் அல்லாட்ட துவா பண்ணிக்கிறேன் பாய். நாளைக்கு பிளைட் இருக்கு. இந்தியா வந்துருவோம் பாய்.”

“மாஷா அல்லா! ரொம்ப சந்தோசம் பாய்!” என்று சொல்லிவிட்டு பக்கீர் படுக்கை அறைக்கு சென்று விட்டார்.

அங்கே அஜ்மாவிடம் ரப்பானி ராவுத்தரிடம் பேசிய விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார். அஜ்மாவும் பக்கீரும் மிகவும் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

நேரம் கடந்து விட்டது. பிறகு பக்கீர் துவா செய்துவிட்டு நிம்மதியாக உறங்கி விட்டார்.

அஜ்மா காலையில் எழுந்து எல்லா வேலையையும் முடித்து விட்டு காபியை கையில் ஏந்தியபடி பக்கீரை எழுப்ப ஆரம்பித்தார்.

பக்கீர் தூங்கிக் கொண்டே இருந்தார். அஜ்மா அவரை தட்டி தட்டி எழுப்பினார். ஆனால் அவர் எழவில்லை அஜ்மா கையில் காப்பியோடு கலங்கிப் போய் நின்றாள்.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com