பள்ளி செல்லும் செல்லமே!

புத்தம் புது வகுப்பு போகும் செல்லமே! – நீ
புன்னகையை ஏந்திக் கொண்டே போடி செல்லமே!

சத்தமிடும் கடல் அலை போல ஓடு செல்லமே! – நீ
கற்றுக் கொள்ள வித்தைகள் தேடு செல்லமே!

புத்தன் காந்தி வாழ்ந்த நம் தேசமே! – அதன்
பெருமைகளை நித்தம் நீயும் போற்ற வேணுமே!

சேத்துக்குள்ளே பூத்திருக்கும் பூவைப் போலவே! – நீ
சிந்தனையால் மின்னிட வேணும் செல்லமே!

எத்தனையோ ஞானிகள் வாழ்ந்த மண்ணிலே! – நீ
இன்று வாழ்வதிலே உனக்கு உண்டு பெருமையே!

வாத்தியார்கள் சொல்லித்தரும் பாடம் அனைத்துமே! – உன்
வளர்ச்சிக்கு துணையாக மாறும் உண்மையே!

சுத்தம் செய்யும் நீரின் முறை அறிய‌ வேணுமே! – நீ
சுற்றும் காற்றின் வலிமை பெற வேணுமே!

அத்தனையும் சுட்டு நிற்கும் நெருப்பெனவே! – நீ
ஆற்றலிலே உயர்ந்தே வாழ வேணுமே!

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.