புள்ளிகளான நம்மை சிறைப்படுத்திய கோடுகள் எவையோ?
போகிற போக்கில் அழகிய கோலங்கள் ஆக்கியது எதுவோ?
பள்ளங்கள் ஈர்த்திடும் நீர்போல் நம் பாதைகள் மாற்றியது எதுவோ?
பாறைகள் உடைத்திடும் வேர்போல் நம் பாவனை மாற்றியது எதுவோ?
இல்லங்கள் பலவாய் இருந்தும் நம்மை இணைத்திட்ட கரங்கள் எவையோ?
இன்றுள்ள வாழ்வில் இனிமையை உணரக் கற்றுக் கொடுத்ததும் எதுவோ?
மெல்லிய மலர்போல் மனதை வைத்திடச் சொன்னது எதுவோ?
மேகங்கள் இல்லா வானின் நிலவென மாற்றிக் காட்டியது எதுவோ?
பள்ளிகள் என்றே சொன்னால் பொருத்தம் தானே தோழா?
பசுமை நிறைந்த நினைவால் நன்றி பெருகிடும் தானே தோழா?
உள்ளத்தின் வலிமையை பெருக்கி நம்மை உயர்த்திய ஏணிகள் அவையே!
உனக்கும் எனக்கும் வரும்தலைமுறைக்கும் அறிவை ஊட்டிடும் தாயது தானே!
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)