பழங்கால இந்திய விளையாட்டுக்கள்

பழங்கால இந்திய விளையாட்டுக்கள் தனிப்பட்ட மனிதருக்கான உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பதை அதனை அணுகி ஆராயும் பொழுது, நம்மால் காண முடிகிறது.

இந்திய விளையாட்டுத்துறையை ஆராயப் புகும்பொழுது, அது இதிகாச காலம், புராண காலம், பழங் காலம், முகமதியர் காலம், மராத்தியர் காலம் மற்றும் நவீன காலம் எனப் பிரிந்து நிற்கின்றது.

பழங்கால இந்திய விளையாட்டுக்கள், பயிற்சி முறைகள் எவ்வாறு அவர்களிடையே இடம் பெற்றன; மாறி வந்தன; மலர்ந்து நின்றன என்பவையெல்லாம் நம்மால் காண முடிகின்றது.

வேத காலம்

வேதகாலம் என்பது ரிக்வேத காலத்தியது. ரிக்வேதத்திலிருந்து, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை நன்கு புரிகிறது.

அவர்கள் வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாக இருந்ததாலும், அவர்கள் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தாலும், உடற்பயிற்சி என்ற ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தது.

வேதகாலத்து மக்கள் வேட்டையாடுவதை விரும்பிச் செய்தார்கள். வாழ்க்கைக்காக இடம் விட்டு இடம் செல்லும்பொழுது தாண்டல், மலை ஏறுதல், மண் தோண்டுதல்,  வெறுங்கையால் சண்டை போடுதல், வில் அம்பு விடுதல், நீந்துதல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

மேலும் குதிரை சவாரி செய்தல்,  நடனமாடுதல் போன்ற செயல்களையும் செய்தனர். இதனால் அவர்களுக்கு இயற்கையாகவே உடல் வலிமை, வீரம், தைரியம், நெஞ்சுரம் முதலியவை தேவைக்கதிகமாகவே இருந்தன.

இதிகாச காலம்

இதிகாச காலம் என்றால் இராமாயணம் மகாபாரத காலத்தையே குறிக்கிறது. இராமாயணத்தில் அனுமனைப் பார்க்கிறோம். ஆண்மைமிகு ஆற்றலுக்கும் உடல் வலிமைக்கும் அவன் ஓர் எடுத்துக்காட்டு.

இராமன், இலட்சுமணன் வில் வித்தையில் விற்பன்னர்களாக விளங்கினார்கள். இராமன் சீதை திருமணமே வில் வித்தையில் தானே விளைகிறது.

மல்யுத்தப் போட்டிகள் அந்நாட்களில் அதிகமாக இடம் பெற்றிருந்தன. வாலி, சுக்ரீவன் மல்யுத்தப் போட்டி பரபரப்பான மல்யுத்தத்திற்கு ஓர் உதாரணமாகும்.

அது போலவே, மகாபாரதத்தின் மல்யுத்தப் போட்டிகள் இன்னும் அதிகம். பீமன், கீசகன், கிருஷ்ணன், கம்சன், பலராமன், சூரியோதனன் போன்றவர்கள் சிறந்த மல்யுத்த வீரர்களாக விளக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அக்காலத்தில் ஆண்மையை பரிசோதிக்க, பாராங்கல் தூக்குவது, எறிவது போன்ற செயல்கள் உதவின. தாண்டும் போட்டிகளும் அதிகம் இடம் பெற்றுள்ளன.

அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கியது, கடலைத் தாண்டியது போன்ற சாகசச் செயல்கள் அனைத்தும், அவர்கள் உடலை வலிமையுடையவர்களாக வைத்திருந்தார்கள் என்பதனை எடுத்துக்காட்டுவதாகும்.

இதிகாசங்களில், உடல் வலிமையில் சிறந்தவர்களையே கதாநாயகர்களாகவும், கதாபாத்திரங்களாகவும் காண முடிகிறது.

அவர்கள் அனைவரும் அக்கால மக்களின் பிரதிநிதிகளாக அன்றோ நமக்குத் தெரிகின்றார்கள்!

துவந்த யுத்தங்களும், வில் வித்தைகளும், கத்திச் சண்டைகளும், கதை யுத்தங்களும், தேரோட்டப் போட்டிகளும் இதிகாச காலத்தில் அதிகமாக இடம் பெற்றவையாகும்.

கில்லித் தண்டு விளையாடுவதில், பீமன் புகழ் பெற்றவன் என்ற குறிப்பும், மகாபாரதத்தில் காணப்படுகின்றது.

புராண காலம்

புராணகால மக்கள் மூச்சிழுப்பதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பிராணாயாமம் என்று கூறி, அதை அதிகமாகப் பயிற்சி செய்தார்கள். இது அவர்களுக்கு அளப்பரிய ஆற்றலைக் கொடுத்தது.

வேதம் ஓதுகின்றவர்கள், சண்டையிடுபவர்கள், வியாபாரிகள், வேலைக்காரர்கள் என்று இனம் பிரிந்து நின்று வாழ்ந்தாலும், எல்லோரும் உடலை வலிமையுடனும் வனப்புடனும் வைத்துக் கொள்வதில், ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றார்கள்.

மூச்சிழுத்து விடும் பிராணாயாமப் பயிற்சி, நுரையீரலை விரிவுபடுத்தி வலிமைப்படுத்தி, வாழ்க்கையை நீண்டநாள் வாழவும், நிம்மதி தரவும் பயன்தருகிறது என்பதை உணர்ந்து, செய்து, பயன் பெற்றிருக்கின்றார்கள்.

உடலை செட்டாகவும் சீராகவும் வைத்திருக்க இந்தப் பயிற்சியை செய்திருக்கின்றார்கள். அத்துடன், அவர்கள் வில்வித்தை, கத்திச் சண்டை, ஆயுதங்களை வைத்துக் கொண்டு சண்டை செய்தல் முதலியவற்றில் தேர்ந்தவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள்.

பழங்காலம்

மிகப்பழங்காலத்தில், நாளந்தா பல்கலைக்கழகம் என்று வங்காளத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அங்கே புத்த பிக்குகள் நடத்திவந்த பல்கலைக்கழகத்தில் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் இன்றைய விளையாட்டுக்களுக்கு முன்னோடியாக திகழ்கின்றன.

அதிகாலையில் ஏரி குளங்களில் சென்று நீராடுதல்,

ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டங்களில் தாண்டிக் குதித்தல்,

குவித்து வைத்திருக்கும் பொருட்களில் குவியலைக் கலைக்காது, ஒவ்வொன்றாக எடுத்து வைத்தல் (உருளைக் கிழங்கு பொறுக்கும் போட்டிபோல),

வலையில் விழும் பந்தாட்டங்கள்,

மேலாடும் பந்தாட்டங்கள்,

கொம்பு ஊதுதல்,

உழுவது போல நடிக்கும் போட்டிகள்,

வில் வித்தையில் போட்டிகள்,

கோலிக்குண்டு விளையாட்டுப் போட்டிகள்,

அடுத்தவர் நினைவைக் கூறும் சோதனைப் போட்டிகள்,

தேரோட்டப் போட்டிகள்,

பிறர் செயலை நடித்துக் காட்டும் போட்டிகள்,

யானை ஓட்டும் போட்டிகள்,

கத்திச் சண்டை,

குதிரைகளுக்கு முன்னேயும் தேர்களுக்கு முன்னேயும் ஓடுதல்,

பிறர் கையை முறுக்கிப் போராடும் போட்டிகள்,

மல்யுத்தப் போட்டிகள்,

வெறுங்கையால் குத்துச் சண்டை போடுகின்ற போட்டிகள் போன்றவை அங்கே நடைபெற்றன.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளை நாம் பார்க்கும்பொழுது, தனி மனிதன் திறமைக்கே முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, வந்த அரசர்களும் அவ்வாறே தனிமனிதன் திறமையையே பாராட்டிப் பரிசளித்தும் இருக்கின்றார்கள்.

காந்தார மன்னர்கள் ஆண்ட காலத்தில், மல்யுத்த வீரர்களுக்கு அரண்மனையில் மிகவும் மரியாதை இருந்த காலம் உண்டு. அரசர்கள் அவர்களைப் போற்றினார்கள். பயிற்சி செய்ய இடம் தந்ததுடன், எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

 

மல்யுத்தம்
மல்யுத்தம்

 

மல்யுத்த வீரர்கள் அதிகாலையிலேயே பயிற்சி செய்தார்கள். அவர்கள் பயிற்சி முறையில் அதிகமாக இடம் பெற்றவை எடை தூக்குதல், மணல் மூட்டைகள் எடைகளாகப் பயன்படுத்தப்பட்டன. அவைகளை காலால் உதைத்தும் தள்ளியும் தங்கள் கால்களுக்கு வலுவைத் தேடிக் கொண்டனர்.

கைகளுக்கு கரளா கட்டைகள் சுற்றுவதின் மூலம் பலம் பெற்றனர்.

 

கரளாக் கட்டை சுற்றுதல்
கரளாக் கட்டை சுற்றுதல்

 

பின்னர் மல்லர் கம்பம் என்று ஒன்றைச் செய்து, அதை எதிரி என்று எண்ணி, பிடிபோட்டுப் பழகி பயிற்சி செய்தனர்.

தனிமனிதன் பலத்திற்கே முக்கியத்துவம் என்ற கொள்கை பழங்காலத்திலேயே உருவாகி விட்டது என்பதையே நம்மால் உணரமுடிகிறது.

அதைத் தொடர்ந்து, விஜய நகர சாம்ராஜ்யத்திலும், இது போன்ற முறை அமைந்திருந்தது. கிருஷ்ணதேவராயர் எனும் பேரரசர், தினந்தோறும் மல்யுத்தப் பயிற்சிக்கான அத்தனை கடுமையான பயிற்சிகளையும் செய்ததாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

முகமதியர் காலம்

முகமதிய பரம்பரை ஆட்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த பாபர், சிறந்த உடற்பயிற்சியாளராகத் திகழ்ந்திருக்கிறார். நீச்சலில் அவர் சிறந்த ஆற்றல் பெற்றவர். கங்கையில் எதிர்நீச்சல் அடிப்பது அவரது அன்றாடப் பொழுதுபோக்கு.

அக்பர் குதிரைப் பந்தாட்டம் ஆடுவதில் வல்லவர். முகமதியர் காலத்தில், உடலை வலிமையுடன் வைத்துக் காப்பாற்றுவதில் மன்னர்களும் மக்களும் மிக மிக ஆர்வமுடன் விளங்கியிருக்கின்றனர்.

தனிமனிதன் பலம், துவந்த யுத்தம் இவற்றிற்கே சிறப்பிடம் அளிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் பலத்தையே நம்ப வேண்டியிருக்கிறது.

ஆகவே, தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினர். மல்யுத்தமும், குத்துச் சண்டையும், கத்திச் சண்டையும், இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களே மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள்.

மராத்தியர் காலம்

வீரசிவாஜி காலம் என்றுகூட இதைக் கூறலாம். உடலியக்க முறையில் எழுச்சி நிறைந்த காலம்.

சிவாஜிக்கு வீரஎழுச்சியை உண்டு பண்ணியவர்களில் ஒருவர் ராமதாஸ் சுவாமி அவர்கள்.

அவர் பலத்திற்கும் வீரத்திற்கும் உருவமாக அமைந்த அனுமனுக்காக 1200 கோயில்களைக் கட்டினார்.

ஒவ்வொரு பயிற்சி அரங்குகளிலும் (Gymnasium) அனுமான் சிலை வைக்கப்பட்டு, வணங்கப்பட்டது. அங்கேதான் நமஸ்கார உடற்பயிற்சிகள் பிரபலப்படுத்தப்பட்டன.

ராமதாஸ் சுவாமிகள் இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்தபோது. அனுமன் கோயிலைக் கட்டுவித்தும், பயிற்சிக் கூடங்களை நிறுவியும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரே ஒரு நாளைக்கு 1200 நமஸ்கார் பயிற்சிகள் செய்வாராம்.

சூரிய நமஸ்காரம் என்பது தான் நமஸ்காரப் பயிற்சியாகும். அது மதக் கோட்பாட்டில் அமைந்தது. அவ்வாறு செய்வது உடலை வலுவாக்குகிறது. நீண்ட ஆயுளைத் தருகிறது என்பதை அவர் உணர்ந்ததால், மகராஷ்டிரம் முழுவதும் இதைச் செய்ய ராமதாஸ் சுவாமிகள் ஏற்பாடு செய்தார்.

பயிற்சிக் கூடங்களில் தண்டால், பஸ்கிகள் முதலியன இடம் பெறலாயிற்று. அத்துடன், கரளாகட்டை சுற்றுதல் மல்லர் கம்பப் பயிற்சிகள், கல் தூக்குதல், முதலியவையும் இடம் பெற்றன.

இவையே இந்திய உடற்பயிற்சித் துறையை புகழ் பெறத்தக்க அளவில் வளர்த்திடும் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பிரௌட்டன் என்பவர் எழுதுகிறார்.

‘இந்திய சிப்பாய்கள் பயிற்சிகள் செய்வதில் விருப்பமுள்ளவர்களாக இருந்தார்கள். அந்தப் பயிற்சிகள் அவர்களுக்கு, ஆனந்தத்தை அளித்தன. அவர்கள் உடற்பயிற்சியில் முதலிடம் பெற்றது தண்டால், பஸ்கி அடுத்தது மல்யுத்தம். மூன்றாவது கரளா கட்டை சுற்றுதல், லெசிம்.

இத்தனைப் பயிற்சிகளும், அகலமாக மார்பை விரிவுபடுத்துவதிலும், உடல் தசைகளை வலுப்படுத்துவதிலும், இளமை ததும்பும் தோற்றத்தைத் தருவதிலும் உதவின.

இவ்வாறு தண்டால் பஸ்கி பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பயிற்சிக்கூடங்களை உருவாக்கிய பெருமை மகாராஷ்டிர மாநிலத்திற்குக் கிடைத்திருக்கிறது.

அக்காலத்தில் வாழ்ந்த மக்கள். பயிற்சிக்கூட விதிகளுக்கு உண்மையாக அடிபணிந்து, பயிற்சி செய்து, திடகாத்திரமான மக்களாகவே வாழ்ந்து சிறந்தனர்.

பழங்கால இந்திய விளையாட்டுக்கள் பற்றி அறிந்து கொண்டீர்கள் அல்லவா. நவீன விளையாட்டுக்கள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.