வீட்டுத் தோட்டத்தில் மா, சப்போட்டா, எலுமிச்சை, மாதுளை, கொய்யா போன்ற பழமரங்கள் வளர்க்கலாம்.
மாமரம், சப்போட்டா நடவுமுறை
பழமரங்கள் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். 1.5 x 1.5 x 3 அடிக்கு குழி தோண்ட வேண்டும்.
குழி தோண்டிய பின் முதலில் 2 முதல் 6 இன்ஞ் அளவிற்கு மணல் இட வேண்டும். பின்பு 5 இன்ஞ் அளவிற்கு இலை சருகுகளை நிரப்ப வேண்டும். பசுந்தழை உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும். பசுந்தாள் உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும். குழி நிறைந்த பின்பு நன்கு மக்கிய தொழு உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும்.
பின் குழியில் தண்ணீர் விட்டுவந்தால் ஒரு மாதத்தில் குழியின் அளவில் பாதியளவு 1 ½ அடி முதல் 2 அடி வரை நன்கு மக்கி குழி தயராகிவிடும். பின் நல்ல பழக்கன்றுகளை வாங்கி நடவேண்டும்.
பழக்கன்றுகளை ஒட்டுப்பகுதி குழியின் மட்டத்தில் இருந்து ½ அடி உயரத்திற்கு இருக்குமாறு நடவேண்டும். அதற்கு ஆதாரவாக குச்சி நட்டு தளர்வாக கட்டிவிட வேண்டும். மேலும் கன்றுகளை சுற்றி ¼ கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டு தண்ணீர் விடவேண்டும்.
எலுமிச்சை, மாதுளை, கொய்யா நடவுமுறை
முதலில் 1 ½ x 1 ½ x 1 ½ அடிக்கு குழி தோண்ட வேண்டும். பின்பு குழியில் 3 இன்ஞ் அளவிற்கு மணல் நிரப்ப வேண்டும். பின்பு 1:2:4 முறையில் செம்மண், மணல், தொழு உரம் ஆகியவற்றை நன்கு கலந்து குழியின் ¾ பாகம் வரை இட வேண்டும். இதன் மையப்பகுதியில் கன்றை நடவேண்டும்.
அவ்வாறு நடப்பட்ட கன்றை சுற்றிலும் நன்கு கால்களால் அழுத்தமாக மண் கலந்த குப்பையை (தொழு உரம்) அழுத்திவிட வேண்டும். பின் குழிக்கு 100 கிராம் வீதம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு இடுவதன் மூலம் வேர்பூச்சி விழுவது கட்டுப்படுத்தப்படும்.
கொய்யா மரத்திற்கு இரண்டு குழிகளுக்கு இடையே 5 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். எலுமிச்சை, மாதுளை மரங்களுக்கு இரண்டு குழிகளுக்கு இடையே 3 மீட்டர் இருக்க வேண்டும்.
இவ்வாறு வீட்டுத் தோட்டத்தில் பழமரங்கள் வளர்க்கலாம்.
– இரா.அறிவழகன்