பழி தீர்ப்பு – சிறுகதை

ஆற்காடு சாலையின் வழியே குன்றத்தூரிலிருந்து வடபழனி வரை செல்லும் M88 பேருந்து பாய்க்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஸ்ருதி அதே பேருந்தில் கடைசி சீட்டில் அமர்ந்து யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

வடபழனி செல்வதற்காக முன் படிக்கட்டுகளின் வழியே ஏறிய சுரேஷின் பார்வையில் காலி இருக்கை ஒன்று தென்பட இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் பயணச்சீட்டை வாங்காமலே வேகமாக சென்று இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

அந்த தடத்தில் ஓடும் பேருந்துகளில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். மாறாக அன்று அந்த பேருந்தில் நெரிசல் அதிகம் இல்லாதிருந்தது.

சென்னை நகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

அதாவது நடத்துனர்கள் பயணிகளின் இருப்பிடங்களுக்கு சென்று அவர்கள் பயணிக்கின்ற இடத்தை தெரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு பயணச் சீட்டையும் கொடுத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பயணிகள்தான் நடத்துனரின் இருப்பிடத்திற்கு சென்று அதுவும் சரியான சில்லரையைக் கொடுத்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லாதிருந்ததால், பயணச்சீட்டை தர நடத்துனர் வருகிறாரா என்று சுரேஷ், அவர் அமர்ந்திருக்கும் இருக்கையை திரும்பி பார்த்தான்.

நடத்துனர் பயணச்சீட்டு கட்டுகளை புரட்டிப் புரட்டி பார்த்து ஒரு கட்டம் போட்ட தாளில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

எழுந்து நடத்துனரை பார்த்து விட்டு திரும்பு போதுதான் சுரேஷ், ஸ்ருதியை கவனித்தான்.

இருக்கையின் மறைவில் இருந்து யாருடைய சீண்டலுக்கோ விலகி நகர்வதைப் போல நகர்ந்து நடைபாதைக்கு நேராக வந்து அமர்ந்தாள். ஸ்ருதியை பார்த்ததும் சுரேஷின் மனது பெருமழையில் கொட்டிய அருவியை போல் ஆர்ப்பரித்தது.

ஒரு அருவியின் துள்ளலுடன் எழுந்து அவள் அருகில் செல்லலாமா என்று நினைக்கும் போது, இருக்கை மறைவில் இருந்து ஒருவனின் முகம் அவளின் முகத்திற்கு நேராக வந்து போனது.

சுரேஷ் அவனைப் பார்த்ததும் நீளமான கயிற்றில் கட்டப்பட்டுள்ள இளம் கன்றுக்குட்டி பருவ மழையில் துளிர்த்த பசும் புல்லை மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த இடத்தை கடந்து சென்ற நாயைப் பார்த்து பயந்து கயிற்றில் கட்டப்பட்டுள்ளதை அறியாது ஓடி செல்கிற போது கயிற்றின் நீளம் முடிந்ததுமே கயிற்றை சுண்டி இழுத்ததை போல எவ்வாறு இடறி விழுமோ! அவ்வாறு இருக்கையில் விழுந்து கிடந்தான்.

பின்னர் சுரேஷ் இருந்த இடத்திலிருந்தே இருவரது நடவடிக்கைகளையும் கவனித்தான்.

ஸ்ருதியோடு இருந்தவன் ஒருவித காமமேறிய மனநிலையில் மானை பிடித்து விழுங்க முயற்சிக்கும் சிங்கத்தை போல அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.

ஸ்ருதி அவனோடு ஒரு விதமான நாணத்துடன் சிங்கத்திடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் மானைப் போல பேசிக் கொண்டிருந்தாள். அந்த கடைசி சீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

அப்போது பேருந்து வேகத்தடையின் மேல் ஏறி விழ அதையே சாக்காக்கி அவன், அவளின் கன்னத்தில் ஒரு முத்தத்தையும் பதித்துவிட்டான். அதை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷுக்கு அடிவயிற்றில் பற்றி எரிந்தது.

அப்படியே சென்று இருவரையும் போட்டு ‘பளார் பளார்’ என்று அறைந்து பேருந்தில் இருந்து தூக்கி எறிந்து விடலாம் போல இருந்தது.

கோபம் என்பது இயலாத் தன்மையின் வெளிப்பாடு என்பதை அவன் ஒரளவு உணர்ந்திருந்தான். அதுவுமில்லாமல் ஸ்ருதியுடன் இருப்பவனை அவனுக்கு யாரென்றே தெரியாது. அவன் மீது பகைமை கொள்வதில் எந்த விதமான நியாமும் இல்லை.

ஆனால், ஸ்ருதியை நன்றாக தெரியும். மூன்று வருஷமாக சுரேஷோடு பழகியவள்; அவன் உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்தவள்.

சுரேஷ் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கிறான். ஸ்ருதி, கல்லூரியில் Bsc இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு படத்தின் பட பிடிப்புக்காக அந்தக் கல்லூரிக்கு சுரேஷ் சென்றிருந்தான்.

அங்கேதான் இருவரும் பார்த்திருக்கிறார்கள். அப்போதிலிருந்து இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து விட்டது. ஸ்ருதி படித்து முடித்து விட்டு ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில வரவேற்பாளராக வேலை செய்கிறாள்.

இப்போது சுரேஷ் ஸ்ருதியை பார்த்து மூன்று மாதத்திற்கும் மேல் ஆகிறது. இந்த மூன்று மாதமும் சுரேஷ், ஸ்ருதியை பற்றி நினைக்காத நாள் இல்லை. அவளுக்கு போன் பண்ணாத நாளும் இல்லை.

ஆனால் அவளது போன் மட்டும் மூன்று மாதத்திற்கு முன் அணைத்து வைத்தது வைத்த படியேதான் இருந்தது. போன் நம்பரைக் கூட மாற்றி விட்டாள்.

போன் நம்பரை மட்டுமா?

சுரேஷைக் கூட மாற்றி விட்டாள். இருவரும் கடைசியாக சந்தித்தது நேரு பூங்காவில் தான். அந்த பூங்காவில் தான் இருவரும் நாட்கள் தவறாமல் சந்தித்து அவர்களது காதலை வளர்த்து வந்தார்கள்.

சுரேஷும் ஸ்ருதியும் கடைசியாக சந்தித்த அந்த நாளுக்கு முந்தைய நாள் இருவரும் பூங்காவில் அமர்ந்திருந்த போது சுரேஷ், ஸ்ருதியிடம் “நாளைக்கு நிலாங்கரையில என் நண்பன் ஒருத்தனுக்கு கல்யாணம். நான் போறேன். போற இடத்துல முன்ன பின்ன நேரம் ஆகலாம். அதனால நாளைக்கு என்னை எதிர்பார்க்காத. நீ எப்போதும் போல வர்றதா இருந்தா வா” என்றான்.

“நான் இந்த பூங்காவுக்கு வர்றதே உன்னை சந்திக்கிறதுக்காகதான். நீ இல்லாம நான் மட்டும் வந்து என்ன பண்ண போறேன். நாளைக்காவது வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரமாவே போறேன். துணி எல்லாம் கொஞ்சம் துவைக்க வேண்டியதிருக்கு”

“சரி உன் விருப்பம்” என்று பேச்சை முடித்துக்கொண்டான் சுரேஷ்.

மறுநாள் அவர்கள் இருவருமே சொன்னது போல பூங்காவிற்கு வரவில்லை.

அடுத்த நாள் ஸ்ருதி வழக்கத்தைவிட சீக்கிரமாக வந்து இருவரும் வழக்கமாக அமருகின்ற இடத்தில் அமர்ந்திருந்தாள்.

சுரேஷ் அன்று பூங்காவிற்கு சற்றுநேரம் தாமதமாகவே வந்தான். சுரேஷின் வருகைக்காக பூங்காவின் வழி மீது விழி வைத்து காத்திருந்தவள், அவன் வந்ததும் முகத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டு “நேத்து எங்க போன?” என்றாள்.

“ஏய் லூசு, நேத்து கல்யாணத்துக்கு போறேன்னு, உங்கிட்ட சொல்லிட்டு தான போனேன். அப்பறம், இன்னைக்கு வந்ததும் வராததுமாக, எங்கே போனேன்னு கேட்கற? கோமா patient” என்றதும்.

சுரேஷின் முகத்தை நேருக்கு நேர் சந்திக்காமலே “நீ எங்கேயும் போ. எவளோடயும் சுத்து, நான் கேட்க போறதில்ல. ஆனா, என்னை விட்டுரு.” கோபமாக சொல்லிவிட்டு எழுந்து கடகடவென சென்றவளை பார்த்து காரணம் புரியாமல் நின்றான்.

சிறிது யோசனைக்கு பிறகு ‘ஏதோ தவறான புரிதல் ஏற்பட்டிருக்கு’ என்பதை உணர்ந்தவன், ‘அவளிடமே விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் தெளிவுபடுத்தலாம்’ என்று நினைத்து நடக்க போகும் விபரீதத்தை உணராதவனாய், அவளை பின் தொடர்ந்து சென்றான்.

“ஏய் ஸ்ருதி” என்றவாறு ஸ்ருதியின் கையை பிடித்து இழுத்து நிறுத்த முயன்றான்.

அவனது முயற்சியில் இருந்து அவளது கை விலகிக் கொள்ள அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்து விட்டான். துப்பட்டா தோளிலிருந்து சுரேஷின் கையோடு வந்துவிட்டது.

பூங்காவில் இருக்கும் எல்லோரின் பார்வையும் ஒரு நிமிஷம் இவர்களையே கவனித்தது.

அதை அவமானமாக நினைத்து விட்டு சீண்டப்பட்ட நாகம் தீண்டுவதற்கு நிற்பதை போல நின்று சுரேஷை பார்த்து “உன் சினிமா பொறுக்கித்தனத்த வேற யாருகிட்டயாவது வச்சிக்க. எங்கிட்ட வச்சிக்கிட்டேனா செருப்பு பிஞ்சிடும்.” என்ற சொல்லிவிட்டு அங்கேயிருந்து வேகமாக சென்றாள்.

அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் நின்ற சுரேஷ். அங்கே இருந்தவர்களின் பார்வையில் ‘துச்சாதவனாகரம்’ பண்ணியவனை போல தெரிந்தான்.

அவள் விறு விறுவென நடந்து சுரேஷின் பார்வையில் இருந்து மறைந்தாள். அதன் பிறகு இன்றைக்கு தான் மாற்றானின் காதலியாக சுரேஷின் முன்னால் காட்சி தந்திருக்கிறாள்.

சுரேஷ் பூங்காவிற்கு வந்ததும் வராததுமாய் அவனிடம் ஸ்ருதி கோபித்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை யென்றாலும், அதன் பிறகு அவன், ‘பத்து பேர் வந்து போற ஒரு பொது இடத்துல வைத்து அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்ததினால்தான், தன் மீது கடுஞ்சொற்களை வீசியெறிந்து விட்டாள்.

தானும் அதை வேண்டுமென்று செய்யவில்லை. எதுவானாலும் உண்மை நிலையை எடுத்து சொன்னால் புரிந்து கொள்ளுவாள். காலமெல்லாம் என்னோடவே வாழப் போறவ. அவகிட்ட மன்னிப்பு கேட்கறதுல, எனக்கு என்ன குறைந்து விடப்போகிறது’ என்று நினைத்து அவனே, அவளுக்கு முதலில் போன் செய்தான்.

‘போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது’ என்று பதில் வந்தது. அன்று இரவு அது பற்றி யோசனையில் அவன் ஆழ்ந்திருந்ததால் தூக்கம் அவனை விட்டு கொஞ்சம் விலகிச் சென்றது.

மறுநாள் படப்பிடிப்பு விஷயமாக மும்பைக்கு சென்றுவிட்டான். அதன் பிறகு எதைப்பற்றியும் நினைக்க முடியாத அளவுக்கு முன்று மாதம் நெருக்கடியான வேலை இருந்தது.

இருந்தும் அவளுக்கு சுரேஷ் போன் செய்யாத நாள் இல்லை. மூன்று மாதமும் அவளது ‘போன் அணைத்து வைக்கப் பட்டுள்ளது’ என்றே பதில் வந்தது.

மூன்று மாதத்திற்கு அப்பறம் இப்போதுதான் சென்னைக்கு திரும்பியிருக்கிறான். சென்னைக்கு திரும்பி வந்து மூன்று நாட்கள் ஆகிறது. இந்த மூன்று நாட்களில் ஒருநாள் அவளால போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வேற போயிட்டு வந்துட்டான்.

அவர்களுக்குள் பிரச்சனை நடந்த மறுநாளே ஸ்ருதி அவளது தொலைபேசி எண்ணை இரத்து செய்திருக்கிறாள். அது தெரியாமல் சுரேஷ், அவளை மூன்று மாத காலமாக அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறான்.

இந்த மூன்று மாத காலத்தில் அவன் மட்டுமே அவளை நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான். அவன் சென்னைக்கு திரும்பி வந்த அன்றும் யதேச்சையாக அவளது எண்ணுக்கு போன் செய்தான்.

அன்று எதிர்பாரத விதமாக அழைப்பு சென்றது.

மறுமுனையில் அழைப்பை ஏற்ற நபர் “ஹலோ” என்று சொல்ல, அவன் மூன்று மாதமாக பேச வேண்டும் என்று தனக்குள் தேக்கி வைத்திருந்ததை யெல்லாம் ‘மளமள’வென மடை திறந்த வெள்ளம் போல ஒப்புவித்து விட்டான்.

அவள் இடை இடையே எதோ சொல்ல முயற்சித்து அவனிடம் தோற்று போனாள். அவன் சொல்லி முடித்து, மூச்சி வாங்க, அவளின் பதிலுக்காக காத்திருந்தான்.

அவள் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் “Wrong number” என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டாள்.

அதன்பிறகு திரும்ப திரும்ப போன் பண்ணி பார்த்தும் அவள் போனை எடுக்கவில்லை. சுரேஷ் விடாது போன் செய்து கொண்டு இருக்கவே, போனையும் அணைத்து வைத்துவிட்டாள்.

சுரேஷ் மறுநாள் காலையில் அவளது எண்ணுக்கு அழைத்தான். அப்போது அழைப்பு சென்றது. அந்த பக்கம் அழைப்பை ஏற்றுவிட்டு, யாரோ ஒருவன் சரமாரியாக சுரேஷை திட்டிவிட்டு போனை வைத்து விட்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் சுரேஷின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. குறிப்பிட்ட காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக சொல்லி சுரேஷை அந்த காவல் நிலையத்திற்கு வர சொன்னார்கள்.

சுரேஷ் காவல் நிலையத்திற்கு சென்றான். அங்கே யாரோ ஒரு பெண்ணும் அவளது கணவனும் நின்று கொண்டிருந்தார்கள்.

காவல்துறை ஆய்வாளர் சுரேஷிடம் அந்த பெண்ணையும் அவள் கணவனையும் காட்டி “இவங்கள உனக்கு தெரியும்மா?” என்றார்.

“தெரியாது” என்றான்.

“டேய், பொய் பேசுனேன்னு தெரிஞ்சது. ஈவ் டிசிங்ன்னு கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ளிடுவேன்”

“சத்தியமா தெரியாது மேடம்?”

“தெரியாத பொண்ணுக்கு போன் பண்ணி எப்படிடா லவ் டார்ச்சர் பண்ணுவ?”

“மேடம், தயவு செய்து என்னை நம்புங்க. இவங்கள முன்ன பின்ன நான் பார்த்ததே இல்ல. யாருன்னே தெரியாது.”

“அப்படின்னா, இவங்களோட போன் நம்பர் எப்படிடா உனக்கு கெடைச்சது?” கேட்டுவிட்டு கணவன், மனைவி இருவரையும் பார்த்து “நீங்க அந்த நம்பருக்கு போன் பண்ணுங்க”

கணவன் அவரது மனைவியின் நம்பரிலிருந்து சந்தேகத்திற்கு உரிய நம்பருக்கு அழைக்க, சுரேஷின் போன் ஒலித்தது.

போனை எடுத்து பார்த்த சுரேஷுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “மேடம், இது என் லவ்வரோட நம்பர். இவங்க கிட்ட எப்படி வந்ததுன்னு தெரியல? மூனு மாசத்துக்கு முன்னால எங்கிட்ட காரணமே சொல்லாம, ஏதோ தவறான புரிதலால கோவிச்சிக்கிட்டு போயிட்டாள். அதுக்கப்பறம் அவகிட்ட இருந்து போன் வரல. நான் தினமும் போன் பண்ணி பார்க்கிறேன்; போகமாட்டேங்குது. என்னன்னு இவங்கள கொஞ்சம் விசாரிங்க மேடம்”

“பாருப்பா தம்பி, நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். இவங்க இந்த நம்பர வாங்கி மூனு நாளுதான் ஆகுது. இதுக்கு முன்ன இந்த நம்பர வச்சிருந்தவங்க பேரு என்னன்னு எனக்குத் தெரியும். உன்னோட காதலி பேரு என்ன?”

“ஸ்ருதி”

காவல்துறை ஆய்வாளர் உண்மையைப் புரிந்து கொண்டார்.

“ம்… உன் ஸ்ருதி, மூனு மாசத்துக்கு முன்னாலயே இந்த நம்பர ரத்து செய்துவிட்டாள். அதற்கப்புறம் தான், இந்த நம்பர் இவங்களுக்கு கெடைச்சிருக்கு. புரிஞ்சிதா?”

“…..”

“எனக்கு என்னமோ உன் காதலின்னு சொல்ற அந்த பொண்ணு உன் சித்திரவதை தாங்கமதான் போன் நம்பர மாத்திருப்பாளோன்னு நினைக்கறேன். எதிர் முனையில யாரு பேசுறாங்கன்னு தெரிஞ்சிக்காமலே காதல் ரசத்த பொழியுற. ம்… என்ன வேலை செய்யுற?”

“சினிமாவுல உதவி இயக்குநரா இருக்கறேன்.”

“இவங்க போனு ஆட்டோமெட்டிக் வாய்ஸ் ரெக்கார்டர்ல இருக்குது. நீ பேசுனதெல்லாம் ரெக்கார்டு ஆயிருக்கு. நானும் கேட்டேன். இப்படி பேசி பேசிதான பொண்ணுங்க வாழ்க்கைய நாசம் பண்ணிருதீங்க. ஒரு பொண்ணு பிடிக்கலேன்னு நாகரிகமா சொன்னா, நமக்கானவ இவ இல்லேன்னு விலகி போகனும். அதுதான் ஆம்பளைக்கு அழகு. அத விட்டுட்டு அவ முகத்துல திராவகம் வீசுறது. மாபிங் பண்ணி அவள அசிங்கப் படுத்துறது. இதெல்லாம் ஆம்பள தனம் இல்ல. கேடு கெட்ட பொட்ட தனம். ம்… உன்ன பார்த்தாவும் தப்பான பையனா தெரியல. சரி, நீ கிளம்பு. இனிமேல இந்த நம்பருக்கு போன் பண்ண கூடாது. புரிஞ்சிதா?

“சரிங்க மேடம்.”

“இந்த வசனத்தை யெல்லாம் உன் காதலிய பார்த்து பேசு. நீ என்ன பண்ணிருந்தாலும் மன்னிச்சிட்டு, பழைய மாதிரி பேசுவா?”

“சரிங்க மேடம்.”

“போ”

அடுத்த நிமிஷமே அந்த எண்ணை சுரேஷ் போனில் இருந்து எல்லோரின் முன்னிலையிலும் அழித்துவிட்டு சென்றான்.

ஒரே அழுத்தில் போனில் இருந்த ஸ்ருதியின் எண்ணை அழித்தது போல மனதிலிருந்து அவளது நினைவுகளையும் ஒரே அழுத்தில் அழித்துவிடும் பொத்தான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

தோற்று போனவனுக்கு நினைவுகள் தானே மிச்சம். அதுவும் இல்லேன்னா பைத்தியம்னு சொல்லி விடும் பைத்தியக்கார உலகம்.

நடந்தது என்ன?

சுரேஷ், ஸ்ருதியிடம் சொல்லி விட்டு மூன்று மாதத்திற்கு முன்பு திருமணத்திற்கு சென்ற அன்று, 9.30 லிருந்து 10.30 க்குள் முகூர்த்தம் என்பதால் அந்த சரியான நேரத்தில் திருமணம் முடிந்து விட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் முதல் பந்தியில் அமர்ந்து சாப்பாட்டையும் முடித்துவிட்ட சுரேஷ், மணமகன் கையில் மொய் கவரைத் திணித்து விட்டு விடை பெற்றான்.

அன்று உச்ச நட்சத்திரம் ஒருவரின் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. சுரேஷ் சினிமா துறையில் இருப்பதால் பெரும்பாலும் ரிலீஸ் அன்றே படங்களை பார்த்து விடுவது வழக்கம்.

அன்று திருமணத்திற்கு செல்ல வேண்டியதிருந்ததால் படம் பார்ப்பதை பற்றி எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் இருந்தான். நீலாங்கரையில் இருந்து வடபழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

திருமணத்தில் நன்றாக உண்ட மயக்கத்தில் கண்கள் சொக்கிய படியே பேருந்தில் பயணித்தான். அப்போது நடத்துனர் “மாயாஜால் கேட்டவங்க இறங்கிக்காங்க” என்றதும், இன்று ரிலீஸ் ஆகிய படத்தை பார்க்கலாம் என்ற நினைப்பில் இறங்கிவிட்டான்.

தியேட்டரில் மூன்று ஸ்கிரீனில் திரையிட்டு இருந்தார்கள். மூன்றிலும் ஹவுஸ் புல் ஆகி இருந்தது. ஒரு பெண் இரண்டு டிக்கெட் பதிவு செய்து விட்டு யாரோ ஒருவருக்காக காத்திருந்தாள்.

அவர்கள் திடீரென்று போன் செய்து வரமுடியவில்லை என்று சொல்ல, அந்த ஒரு டிக்கெட்டை ரத்து செய்ய வந்த போது, அந்த டிக்கெட் சுரேஷுக்கு கிடைத்தது.

படம் பார்க்கும் போது அந்த பெண் செல்பி எடுத்து அவளது தோழிகளுக்கு அனுப்பினாள். அவளும், ஸ்ருதி வேலை செய்யுற அதே ஹாஸ்பிட்டலில் நர்ஸ்ஸாக வேலை செய்திருக்கிறாள்.

அவள் அனுப்பிய செல்பியில் சுரேஷின் முகமும் பதிவாகி இருந்திருக்கிறது. அவள் ஸ்ருதியுடன் வேலை செய்யுற இன்னொரு ரிசப்ஷனிஸ்டாக வேலை செய்யுற சுகன்யாவுக்கு அனுப்பியிருக்கிறாள்.

அவள் ஸ்ருதியிடம் “லீலா, தல படத்த முதல் நாள். முதல் காட்சிய பார்த்துட்டு செல்பி எடுத்து போட்டுருக்கறா பாரு” என்று காட்டியிருக்கிறாள்.

போட்டோவில் லீலாவின் அருகில் இருந்த சுரேஷை பார்த்துவிட்டு ஸ்ருதி, சுகன்யாவிடம் தெரியாதை போல ‘யாரென்று’ கேட்டிருக்கிறாள்.

சுகன்யா தெரியாமல் எல்லாம் தெரிந்ததை போல சுரேஷை லீலாவோட காதலன் என்று சொல்லிருக்கிறாள்.

மூன்று வருட காதல் முடிவுக்கு வந்து விட்டது.

சுரேஷ் நினைவிலிருந்து நிஜத்திற்கு வந்தான். வடபழனி பேருந்து நிறுத்தத்தை நோக்கி மெதுவாக பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது.

சுரேஷ் தன்னை ஸ்ருதி பார்த்துவிடக்கூடாது என்று பேருந்தின் சீட்டுக்குள் ஒடுக்கிக் கொண்டு இருவரையும் கண்காணித்தான்.

பேருந்து வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நின்றதும், இருவரும் இறங்கி குமரன் காலனி செல்லும் சாலையில் நடந்து சென்றனர். சுரேஷ், அவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே கண்காணித்தான்.

மறுநாள் இதே போல் அதே பேருந்தில் இருவரும் வந்தனர். சுரேஷும் அதே பேருந்தில் பயணித்தான். சுரேஷ், ஏ.வி.எம் ஸ்டியோ சிக்கனில் இறங்கி அருணாசலம் சாலை வழியாக SSR பங்கஜம் சாலையில் சென்று குமரன் காலனி சாலையும், SSR பங்கஜம் சாலையும் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

ஸ்ருதியும் அவளின் புது காதலன் இருவரும் சேர்ந்தே வந்தனர். சுரேஷ் இருவருக்கும் முன் சென்று வில்லன் போல நின்றான். அதை சற்றும் எதிர்பாராத ஸ்ருதி, சுரேஷை பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றாள்.

சுரேஷ் தயாராக மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து ஸ்ருதியின் புது காதலினிடம் நீட்டி, “இந்தா இத வாங்கி அவ கழுத்துல கட்டு” என்றான்.

காதலன் எதுவும் புரியாமல் குழப்பத்தில் நின்றான். ஸ்ருதி தெனாவட்டாக சுரேஷை முன்ன பின்ன தெரியாததை போல் நின்றாள். காதலியின் முன் வீரத்தை காட்ட நினைத்த அவன் தீமிராக “ஏய் யாருடா, நீ?” என்றான்.

“யாரா இருந்தா என்னடா? நல்லது சொன்னா கேட்டுக்கனும். அத விட்டுட்டு தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டு வாழ்க்கைய தொலைச்சிட்டு நிற்காத.”

ஸ்ருதியை காட்டி “நீ, இவள காதலிக்கிறேல்ல.”

“…..”

“உன் நல்லதுக்கு தான்டா சொல்றேன். வாங்கி கட்டு”

“காதலிச்சா? யாரும் இல்லாத அனாதை மாதிரி, உன் பேச்ச கேட்டு, நடு வீதியில வச்சி தாலி கட்டனுமா? ஆமா, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாரு? மொதல்ல, உன்ன எனக்கு யாருன்னே தெரியாது. நீ, என் நல்லது கெட்டதை பற்றி யோசிக்கறாயா?”

“எல்லாம் தெரியும். மூடிட்டு கட்டுறா” என்றான்.

சுரேஷ் சொல்வதைக் கேட்காமல் அவன் தர்க்கம் பண்ணிக் கொண்டே இருந்தான். இதற்கு மேலும் இவனை பேசவிட்டால் காரியம் கை கூடாது என்பதை புரிந்து கொண்டான் சுரேஷ்.

முன் ஏற்பாடாக சினிமா சண்டைக் காட்சிகளுக்கு துப்பாக்கிகளை வாடகைக்கு விடும் ஒருவரிடம் குறும்படத்தின் பட பிடிப்புக்கு என்று சொல்லி துப்பாக்கி ஒன்றை வாங்கி, தனது பேண்டின் பின்புறமாக இடுப்பில் சொருகி வைத்திருந்திருந்தான்.

அந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து காட்டினான். இருவரும் டம்மி என்று நினைத்து சாதாரணமாக நின்றார்கள்.

சுரேஷ் ஒரு தோட்டாவை தரையை நோக்கி சுட்டான். சுட்டதுமே இருவருக்குள்ளேயும் பயம் தொற்றிக் கொண்டது.

“நான் பத்து எண்ணுறதுக்குள்ள அவ கழுத்துல தாலிய கட்டுற; இல்ல, முதல்ல அவள சுடுவேன். அப்பறம் உன்னை சுடுவேன்” என்று மிரட்டினான்.

சுரேஷின் மிரட்டலுக்கு பணிந்து அவள், அவனிடம் கட்டு என்பதை போல தலையாட்டினாள்.

அவளின் இசைவை ஏற்ற அவன், அவளது கழுத்தில் தாலியை கட்டினான். சுரேஷ் அந்த நிகழ்வை அவனுடைய அலைபேசியின் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் சென்றான்.

சுரேஷ், அவள் இனி யாரையும் ஏமாற்ற முடியாது, என்ற நினைப்பில் எதையோ சாதித்து விட்டதை போலவும், தன்னை ஏமாற்றிய அவளுக்கு சரியான தண்டணை கொடுத்து விட்டதாகவும் நினைத்து கொண்டு அந்த நீண்ட வீதியில் திமிராக நடந்தான்.

அப்போது மூன்று மாதமாக துரு பிடித்து கிடந்த அவனது மூளைக்குள் எதோ புது இரத்தம் பாய்வதை போல உணர்ந்தான்.

அது சினிமாக்காரர்கள் வாழும் ஏரியா என்பதாலோ, தற்போது மொபைல் கேமரா நாகரிகத்தினாலோ என்னவோ, நடந்ததை எல்லோரும் ஒரு சூட்டிங் என்று நினைத்து கொண்டு யாரும் தடுக்க முன் வரவில்லை.

ரக்சன் கிருத்திக்
8122404791

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.