பவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்

பவளப் பாறைகள் கடலின் அடிப்பரப்பில் காணப்படும் அழகான சூழலமைப்பு ஆகும். இவை கடலடித் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பல்வகை உயிர்சூழல் உருவாகவும், அவை பாதுகாப்பாக இருக்கவும் இவை மிகவும் அவசியமானவை.

இவை மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு உள்ளிட்ட கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்களில், தேன்கூடு, மரம், மாபெரும் விசிறிகள், மூளை, மான் கொம்புகள் போன்ற வடிவங்களில் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

பவளப்பாறை என்பது பாறை அல்ல. இது பார்ப்பதற்கு தாவரம் போன்று தோன்றினாலும் உண்மையில் இது தாவரமும் அல்ல. விலங்கினத்தைச் சார்ந்தது. ஆனால் இவ்விலங்கினத்தால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர முடியாது.

கடலுக்கு அடியில் பரந்து விரிந்து கூட்டமாக காணப்படும் பவளப்பாறைகளின் உருவாக்கத்திற்கு, பாலிப் எனப்படும் பவளப்பூச்சிகளே காரணம் ஆகும்.

பவளப்பூச்சிகளின் இளம் உயிரியான லார்வாக்கள் கடலில் உள்ள பாறைகளைத் தேடி இறுகப் பற்றிக் கொள்ளும்.

லார்வாக்கள் வளர்ந்து பாலிப் என்னும் நிலையை அடையும் போது, கடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி கால்சியம் கார்பனேட்டை வெளியேற்றுகிறது.

கால்சியம் கார்பனேட் படிந்த பாறைகளில் மேலும் பல பாலிப்புகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. இவைகள் கூட்டாக தொகுப்புயிரியாக வளர்கின்றன. இவற்றை பவளக்கொடிகள் என்றழைப்பர்.

இளம்சந்ததிகள் தொடர்ந்து பவளக்கொடிகளில் சேர்ந்து பவளப்பாறையாகி பின்னர் பவளத்தீவுகளாக மாறுகின்றன.

கடலில் இருக்கும் இறந்த உயிரினங்களின் எச்சங்கள் இவற்றில் படியும்போது இவை வலுப் பெறுகின்றன. காலப்போக்கில் கால்சியம் கார்பனேட் இறுக்கமடைந்து சுண்ணாம்பாக மாறிவிடும்.

பவளப்பூச்சிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்தவை. இவை ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை. இவை பெரும்பாலும் வெப்பநீர் கடலில்தான் காணப்படுகின்றன.

அதற்கும் காரணம் இருக்கிறது. விலங்கினத்தைச் சார்ந்த இதனால் தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க இயலாது.

ஆனால் பவளப்பூச்சிகளின் செரிமானக்குழி செல்களின் உள்ளே காணப்படும் மைக்ரோஸ்கோபிக் ஆல்கா அல்லது ஜூக்ஸாந்தெல்லா தயாரிக்கும் உணவை இவைகள் உட்கொள்கின்றன.

மாறாக பவளப்பூச்சிகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் போன்றவற்றை ஆல்காக்கள் உணவு தயாரிக்கவும், செழித்து வளரவும் பயன்படுத்திக் கொள்கின்றன.

இவ்வாறு பளவப்பூச்சிகளும், ஆல்காக்களும் ஒன்றுகொன்று பயனளித்து இணைதிற உறவுக்காரர்களாகச் செயல்படுகின்றன.

ஆல்காக்கள் உணவு தயாரிக்கத் தேவையான சூரியஒளியைப் பெறும் பொருட்டு, ஆழமற்ற வெப்பக்கடலில் பவளப்பாறைகள் வளர்கின்றன.

பவளப் பாறைகள் தங்களுக்குத் தேவையான ஆற்றலின் 90 சதவீதத்தை ஆல்காக்களின் உணவின் மூலமும், 10 சதவீதத்தை நீரில் அசையும் தன்னுடைய இழைகளால் சிறுஉயிரிகளை வேட்டையாடியும் பெறுகின்றன.

பவளப் பாறைகளின் கண்ணைக் கவரும் பலவண்ணங்களுக்கு காரணம் அதில் உள்ள ஆல்காவும், புரதங்களும் ஆகும்.

ஜூக்ஸாந்தெல்லா ஆல்கா மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. ஏனைய வண்ணங்கள் பவளப்பாறைகளின் புரதங்களிலிருந்து தோன்றுகின்றன.

சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து ஆல்காவைக் காப்பாற்றவே பவளப்பாறைகள் பல வண்ணங்களைக் கொண்டுள்ளன.

பவளப் பாறைகள் உலகின் எல்லா கடல் பகுதிகளிலும் காணப்படுவதில்லை. அவை வாழ்வதற்கென்று சில பிரத்யோக சூழ்நிலைகள் தேவைப்படுகின்றன.

கடல் நீரின் வெப்பநிலை 20-24 டிகிரி செல்சியஸ்யாகவும், ஈரப்பதம் 30-35 சதவீதமாகவும், அலைகள் குறைவாகவும், சூரியஒளி ஆழ்கடல் வரை ஊடுருவியும் செல்லும் சுத்தமான கடல் பகுதிகளில் இவை செழித்து வளரும்.

உலகில் இந்தோ-பசிபிக் கடல்பகுதி அதிகளவு பவளப்பாறைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், மன்னார் வளைகுடாப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்டவகை பவளப்பாறைகள் சுமார் 2000 அடி ஆழத்தில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ்கின்றன. இவை தனக்குத் தேவையான உணவினை சுற்றியுள்ள நீரில் வேட்டையாடிப் பெறுகின்றன.

பவளப் பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்ட பளவத்திட்டுக்கள் என மூன்று வகைகள் உள்ளன.

பவளப் பாறைகள் கடலின் பரப்பளவில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் இவை கடலில் உள்ள உயிரினங்களில் 25 சதவீத‌த்திற்கு வாழிடமாக விளங்குகின்றன. எனவே இவை கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை மிகவும் மெதுவாக வளரும் இயல்பினைக் கொண்டவை. இவற்றின் சராசரி வளர்ச்சி ஆண்டிற்கு இரண்டு செமீ என்ற அளவில் இருக்கிறது.

உலகில் உள்ள மிகப்பழமையான சூழல் அமைப்புகளில் பளவப்பாறைகளும் ஒன்று. பவளப் பாறைகள் சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு உள்ள பெரிய பவளப்பாறைகளின் வயது சுமார் 5000-10000 ஆண்டுகள் ஆகம்.

பவளப் பாறைகளின் முக்கியத்துவம்

பவளப் பாறைகள் சுற்றுசூழலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பரந்து விரிந்த கூட்டுயிரியான இவை, கடலின் பல்வேறு உயிரினங்களுக்கு வளமான உணவினை வழங்கி சிறந்த வாழிடமாக விளங்குகின்றன.

இவை கடல் பசு, கடல் பன்றி உள்ளிட்ட கடல் பாலூட்டிகள் மற்றும் பல்வேறு வகையான மீன் இனங்களுக்கு நர்சரிகளாக செயல்பட்டு அவற்றின் குட்டிகளை பாதுகாப்பாக வளர்க்கின்றன.

பளவப் பாறைகள் வளரும் இடங்களில் கடற்புற்கள் உள்ளிட்ட கடல்வாழ் தாவரங்கள் செழித்து வளருகின்றன. பவளப் பாறைகளால் பாதுகாக்கப்படும் தாவரங்கள் கடலின் அடித்தளத்தை நிலையானதாக மாற்றுகின்றன.

இதனால் புயல், சுனாமி, சூறாவளி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது உண்டாகும் கடல் அலைகளின் வேகத்தினை இத்தாவரங்கள் தடுத்து கடலினுள்ளும், கடற்கரைப் பகுதிகளிலும் அலைகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கின்றன.

மேலும் இத்தாவரங்கள் கடற்கரையோரங்களில் நீரின் ஆழத்தை குறைத்து, வெப்பநிலையை சீராக்குவதோடு கடற்கரையோர மண்ணரிப்பையும் தடுக்கிறது.

பவளப் பாறைகள் கடல்நீரில் உள்ள உப்புக்களைப் பெருமளவில் பிரித்தெடுத்து தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. இதனால் இவை இருக்கும் இடங்களின் கடல்நீரின் தரம் உயர்த்தப்படுகிறது. மேலும் இவை கடலில் மிதக்கும் பொருட்களை வடிகட்டி கடல்நீரினை தெளிவாக்குகிறது.

இவை நைட்ரஜன் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கி கடல் உணவுச் சங்கிலியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

மேலும் கடல் உணவுச்சங்கிலியின் ஊட்டச்சத்துகளின் மறுசுழற்சிக்கும் காரணமாகின்றன.

மனித பாக்டீரியா, வைரஸ் தொற்று, கீல்வாதம், புற்றுநோய், அல்சைமர், இதயநோய் உள்ளிட்டவைகளுக்கு இவை மருந்துப்பொருட்களாகத் திகழ்கின்றன.

பவளப் பாறைகள் உள்ள இடங்கள் மீன்பிடித்தல் மற்றும் சிறந்த சுற்றுலாத் தளங்களாகவும் திகழ்கின்றன. உலகில் பிடிக்கப்படும் மீன்களில் 10 சதவீதத்தை பவளப் பாறைகள் இருக்கும் கடல்கள் வழங்குகின்றன.

ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு பவளப்பாறைகளை அழித்தால் 25 ஆண்டுகளில் சுமார் 2000 மில்லியன் டாலர் மதிப்பு வரையிலான இழப்பு ஏற்படும் என்று உலக வள நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடல் நீரின் வெப்பநிலை உயர்வு, பொருளாதாரத் தேவைகளுக்காக பவளப் பாறைகளை அழித்தல், வெடி வைத்து மீன் பிடித்தல், கடல் நீர் மாசுபாடு, கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவை பவளப் பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்களாகத் திகழ்கின்றன.

மனித நடவடிக்கைகளால் அழிந்து வரும் பவளப் பாறைகளின் பாதுகாப்பு உயிர்ச்சூழலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுவோம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.