பவா செல்லதுரை உரை - விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது.

தமிழகத்தின் சிறந்த கதை சொல்லி பவா செல்லதுரை அவர்கள் கதை சொல்ல, அதனை நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டிய நாள் 21.11.2022.

இசை எழுதிய ‘அனாதை தனத்தின் தூக்கம்‘ எனும் கவிதை வரிகளில் இருந்து தனது உரையை துவங்கினார்.

பிரபஞ்சனின் ‘அபஸ்வரம்’ கதையினை அவர் சொல்லக் கேட்டு, தான் தனது குடும்பத்தினர் மீது போட்ட எட்டு வழக்குகளை, எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி வாபஸ் வாங்கிய கோயம்புத்தூர் அன்பரின் செயலை மேற்கோள் காட்டிய பவா, அபஸ்வரம் கதையினை எங்களுக்கும் சொன்னார்.

பின்னர்தான் கதைக்குள் இருக்கும் உயிர்ப்பு எல்லோருக்கும் புரிந்தது.

கு. அழகிரிசாமியின் ‘திரிபுரம்‘. அதுதாங்க ஆந்திர மாநிலத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க கரிசல் பூமிக்கு வந்து வாழ்வினை தரிசாக மாற்றிக் கொண்ட நரசம்மாள் மற்றும் அவள் மகள் வெங்கிடதம்மாள் கதை. அதை பவா சொல்லி அரங்கத்தில் உள்ள அனைவரையும் அழ வைத்து விட்டார்.

நான் B.Sc., வேதியியல் ஆழ்வார்குறிச்சி எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியில் 1983 – 1986-ல் படித்தேன்.

எங்களுக்கு தமிழ் துணைப் பாடமாக ‘வேர்கள்‘ எனும் நாவல் இருந்தது. அதனை எங்கள் பேராசிரியர் பழனிச்சாமி அய்யா அவர்கள் வகுப்பில் வாசித்து விளக்கிச் சொல்வார்.

அதில் மேரி என்று ஒரு கதாபாத்திரம் வரும். அது ஒரு தேரிக்காட்டு கதை. அதில் மேரி படும் கஷ்டங்களை வாசிக்கும் பொழுது பேராசிரியர் தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழுவார்.

நாங்கள் எல்லாம் அவருக்கு ஆறுதல் சொல்வோம். அப்போதே தெரியும் இலக்கியம் வாசிக்கும் போது நம்மை அழ வைத்துவிடும் என்று.

ஆனால் நேற்று அது போல இரண்டு பெண்கள் படும் கஷ்டத்தினை சொல்லி அரங்கத்தையே அழ வைத்து விட்டார் பவா.

அடுத்து நம்பிக்கை ஊட்டும் முகமாக படந்தால் லட்சுமணப் பெருமாள் எழுதிய ‘வயனம்‘ எனும் சிறுகதையினைக் கூறினார் பவா செல்லதுரை.

ஒரு பஞ்சு மிட்டாய் வியாபாரி. அவன் மனைவி அய்னா. அவர்களுக்கு அடுத்தடுத்து ஆறு பெண் குழந்தைகள்.

ஒரு வேளைதான் முழு வயிற்று சாப்பாடு. மிகவும் ஏழ்மையான குடும்பம். அவனது ஒரு நாள் வருமானம் 20 லிருந்து 50 ரூபாய்தான்.

ஆறாவது குழந்தையின் பெயர் ‘வேண்டாம்‘. எவ்வளவு வெறுப்பு இருந்தால் இப்படி ஓரு பெயர் வைத்திருப்பார்கள்?

அய்னா ரொம்ப கண்டிப்பான மனைவி. ஒரு நாள் பிள்ளைகளை குளிக்க வைக்கும் போது அய்னா பார்க்கிறார். ஆறு குழந்தைகளுக்கும் அம்மை போட்டு இருந்தது.

உடனே அவள் கணவனை “இன்று நீங்கள் மிட்டாய் விற்க செல்ல வேண்டாம். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு தீர்த்தம் கொண்டு வாருங்கள். பிள்ளைகளின் மேல் தீர்த்தம் தெளித்தால்தான் அம்மை இறங்கும். சீக்கிரம் சென்று வாருங்கள்” எனக் கூறினாள்.

அவனும் பஸ் ஏறி இருக்கன்குடி வந்து சாமி கும்பிட்டுவிட்டு தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்புவதற்காக பஸ் நிறுத்தம் வந்தான்.

பயங்கரமான கூட்டம். இவன் நெரிசலில் முண்டி அடித்து வந்து நின்ற பஸ்சில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து விட்டான்.

அப்போது ஒரு பெண் பஸ்சின் வெளியில் இருந்து இருக்கை பிடிக்கும் விதமாக, அவள் கை குழந்தையினை ஜன்னல் வழியே கொடுத்து, “இந்தக் குழந்தையை ஓர் இருக்கையில் வைத்து பார்த்துக்கோ. நான் படிக்கட்டு வழியே ஏறி வருகிறேன்.” என்றாள்.

இவனும் குழந்தையை வாங்கி இவனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் வைத்து காத்திருந்தான்.

பஸ் கூட்டம் நிரம்பி விட்டது. அந்தப் பெண் பஸ் உள்ளே வரவில்லை. இவனும் தேடித் தேடிப் பார்த்தான். அவள் வரவில்லை.

பஸ் கிளம்பத் தயாராகி விட்டது. இவன் நடத்துனரிடம் கூறினான்.

அவர் “பிள்ளையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கித் தேடு” எனக்கூறி குழந்தையுடன் இவனை இறக்கி விட்டு விட்டு வண்டியைக் கிளப்பினார்.

இவன் மீண்டும் கோவில் வளாகத்துக்கு வந்து குழந்தையின் தாயைத் தேடினான். அவளை கண்டு பிடிக்க முடியவில்லை. நேரம் இருட்டத் தொடங்கி விட்டது.

கோவிலுக்கு சற்று மேற்கே இருந்த ஓரு புதரில் குழந்தையை விட்டுச் செல்வோமா என்று கூட முயற்சி செய்தான். அவனால் இயலவில்லை.

வேறு வழியின்றி குழந்தையுடன் வீடு வந்து சேர்ந்தான். ‘அய்னா என்ன சொல்லப்போகிறாளோ?’ என்று பயந்தான்.

ஏற்கனவே ஆறு பெண் குழந்தை இப்போது ஏழாவதாக ஒரு பெண் குழந்தையோடு வீடு சென்றால் மனைவி என்ன செய்யப் போகிறாளோ என்ற கலக்கத்துடனே கடைசி பஸ் ஏறி வீடு நோக்கி சென்றான்……’

நிற்க!

இந்தக் கதையினை இன்று காலையில் எங்கள் அம்மாவிடம் கைபேசியில் பேசும் போது பகிர்ந்து கொண்டேன்.

அவர்களும் “ம்… ம்…” என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

நான் இந்த ஏழாவது பெண் குழந்தையை நம்ம ஆளு வீட்டுக்கு கொண்டு போனால் அய்னா என்ன சொல்லப்போகிறாளோ? என்று சொன்னதும்,

எங்க அம்மா அவர்கள் பாணியில் ‘அவ என்ன சொல்லப் போறா? அவன் கொண்டு வாரது மாரியம்மைல்லா… வேணும்னா பாரு பெரியவன், அவா அந்தப் பிள்ளைய வாங்கி கொஞ்சுவா பாரு; ஏழாவது பிள்ளைனா அது மாரியம்மை’ என்றார்கள்.

நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். கதையோட முடிவும் அதுதான்.

அய்னா அந்த குழந்தையை வாங்கி கொஞ்சி ‘நமக்கு ஆறு பெண் குழந்தை கொடுத்த மாரியாத்தா, இப்போ ஏழாவதா இன்னோர் பிள்ளை கொடுத்து இருக்கா! பத்து பிள்ளை வேணுமானாலும் வரட்டும். அதனை காப்பாற்ற நல்ல ஆரோக்கியத்தை மட்டும் மாரியாத்தா நமக்குத் தரணும். நல்லா வேண்டிகோய்யா!’ என்று கணவனிடம் கூறுவது போல கதை முடிகிறது.

இந்த நம்பிக்கைதான் சாமி! கடவுள் எல்லாமே” என உயிர்ப்போடு கதையினை முடித்தார் பவா.

நம் வழக்கத்தில் இருக்கும் விசயங்கள் தான் மிகப்பெரிய இலக்கியங்கள் ஆகின்றன.

ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டார் பவா.

முதல் மரியாதை கேசட்ல பாடல்களுக்கு இடையே கவிப்பேரரசு வைரமுத்து பேசுவார்.

‘ அடிப்பெண்ணே நீ மட்டும் ஆறுதல் சொல்வதாய் இருந்தால், நான் அழுது கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே!’ என்று.

அது போல ‘பவா நீங்கள் மட்டும் சொல்வதாய் இருந்தால், என்ன கதை வேண்டுமானாலும், எவ்வளவு கதை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே!’

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.