பாகப்பிரிவினை – ‍சிறுகதை

“அண்ணே! மேல கெடக்கியா? கீழ கெடக்கியா?” என்று கும்மிருட்டுக்குள் கையில் வீச்ச அரிவாளை வைத்து கொண்டு கேட்டான் வேத முத்து.

அடுத்த நொடியே “கீழ கெடக்கேன் தம்பி” என்று ஈன முத்துவிடம் இருந்து பதில் வந்தது.

அடுத்த நொடியே கையில் இருந்த வீச்ச அரிவாளை இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி வெட்டினான் வேத முத்து.

அதற்கடுத்த நொடியில் ‘ஆ’ வென அலறினான் ஈன முத்து.

“அண்ணே! என்ன ஆச்சி?” என்றான் வேத முத்து.

உயிருக்கு போராடிய நிலையில் “என்னைய வெட்டிட்டயடா தம்பி” என்றான் ஈன முத்து.

ஈன முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வேத முத்து.

தன் உடன் பிறந்த அண்ணனையே வேதமுத்து வெட்டியதன் பின்னணி இதுதான்.

மச்ச காளையும் செவல காளையும் உடன் பிறந்த அண்ணன், தம்பிகள்.

மச்ச காளைக்கு ஒரே ஒரு மகன் சின்ன காளை.

செவல காளைக்கு ஈன முத்து, வேத முத்து என்று இரண்டு பிள்ளைகள்.

மச்ச காளை, செவல காளை இருவரின் அப்பாவிற்கு கிணற்று பாசனத்தோடு பன்னிரெண்டு ஏக்கர் நிலம் இருந்தது.

அவர் காலத்திற்கு பிறகு மச்ச காளையும், செவல காளையும் பாகம் பிரித்து கொள்ளாமல் தங்களால் இயன்ற அளவுக்கு தனித்தனியே பயிர் செய்து வந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாகவும் இருந்தார்கள்.

அவர்கள் காலத்திற்கு பிறகு சின்ன காளை, ஈன முத்து மற்றும் வேத முத்து மூவரும் கூட பாகம் பிரித்து கொள்ளாமலே பயிரிட்டு வந்தார்கள்.

சின்ன காளைக்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் இருந்தனர். ஈன முத்துக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் முடிந்திருந்தது; ஆனால் குழந்தை இல்லை.

வேத முத்துக்கு பெண் பார்த்து வந்தார்கள். நீண்ட நாட்களாய் தேடியும் பெண் கிடைக்கவில்லை.

அப்போது ஒரு நல்ல வரன் வந்தது. ஆனால், பெண் வீட்டார் வேத முத்துவின் சொத்து விவரம் பற்றி கேட்டனர்.

பன்னிரெண்டு ஏக்கர் நிலத்துல மூன்றில் ஒரு பாகம் வேத முத்துவுக்கு என்று சொல்லி சம்பந்தத்தை பேசி முடித்துவிட்டு வந்தார்கள்.

அன்று சம்பந்தம் பேசி முடிப்பதற்கு சின்ன காளை போகவில்லை. அவனுக்கு பதில் அவனது மனைவி புஷ்ப லதா சென்றிருந்தாள்.

புஷ்ப லதா வீட்டுக்கு வந்ததும் நடந்த விவரத்தை சின்ன காளையிடம் சொல்ல சின்ன காளை, ஈன முத்துவிடம் சென்று விஷயத்தை கேட்க, ஈன முத்துவும் சின்ன காளையிடம் நாம மூன்று பேரும் அண்ணன், தம்பிகள் தானே அதனால சொத்த முன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்றான்.

அதற்கு சின்ன காளை சம்மதிக்கவில்லை. இதனால் ஈன முத்துவும் வேத முத்துவும் சேர்ந்து கொண்டு சின்ன காளையிடம் பிரச்சனை செய்தனர். இதனால் உறவுகளுக்குள் விரிசல் வந்தது.

இறுதியில் பஞ்சாயத்து செய்து பாகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. மச்ச காளையின் பாகம் முழுவதும் சின்ன காளைக்கு வந்துவிட்டது.

செவ காளைக்கு இரண்டு பிள்ளைகள் ஆதலால் அவரின் பாகத்தை ஈன முத்துவும் வேத முத்துவும் இரண்டாக பிரிக்க வேண்டியதாகி விட்டது.

பாகம் பிரித்த அன்று முதல், ஈன முத்துவும் வேத முத்துவும் சின்ன காளையிடம் விரோதி போல நடந்து கொண்டு அடிக்கடி தகராறும் செய்து வந்தார்கள்.

ஒருநாள் இரவு ஈன முத்து தண்ணீர் பாய்ச்சுவதற்கு வயலுக்கு வந்தான். அன்று இரவு பத்து மணிக்கு பிறகு தண்ணீர் பாய்ச்சும் முறை சின்ன காளையோடது.

பத்து மணி முடிந்ததும் சின்ன காளைக்கு முறையை மாற்றி கொடுக்காமல், ஈன முத்து தானே தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.

பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமை இழந்த சின்ன காளை, தானே சென்று தண்ணீரை தனது வயலுக்கு மாற்றிவிட்டு பாய்ச்சினான்.

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த ஈன முத்து, தனது வயலுக்கு தண்ணீர் வருவது நின்று போனதை அறிந்து வந்து பார்த்தான்.

தண்ணீர் சின்ன காளையின் வயலுக்கு பாய்ந்து கொண்டிருக்க, கோபம் வந்து “ஏய் யாருகிட்ட கேட்டு தண்ணீரை நிறுத்தின?” என்றான் ஈன முத்து.

“யாருகிட்ட கேட்கணும். பத்து மணியோட உன் முறை முடிஞ்சது. இப்ப, மணி பன்னிரெண்டு ஆகுது. நீயா வந்து என்னை பாய்ச்ச சொல்லி முறைய மாத்தி விடுவேன்னு, நான் வந்து ரெண்டு மணி நேரமா காத்திருக்கேன். நீ கண்டுக்கவே மாட்டேங்கற?” என்றான் சின்ன காளை.

“எனக்கு பாய்ச்சல் முடிஞ்சா தரமாட்டேன்னா?”

“இது பேச்சுக்கு ஆகுமா? முறை முடிஞ்சா விட்டுட்டு போக வேண்டியது தானே? எனக்கும் பாய்ச்சல் கெடக்குதுல்ல. தண்ணீர் பாய்ச்சலுக்கு தகுந்த பருவம் செய்யணும். காட்டை இழுத்து போட்டு செஞ்சா இந்த கோடையில எப்படி தண்ணீர் சுத்தும்.”

“எனக்கு, நீ அறிவு சொல்ல வேணாம். எல்லாம் எங்களுக்கும் தெரியும்.”

“தெரியும்ன்னா, என் முறை தண்ணிய ஏன் பாய்ச்சிட்டு இருக்கற?”

“ஏன்? இதுக்கு முன்ன நீ பாய்ச்சுனது இல்லையாடா? மயிரு”

“மயிரு, தயிருன்னு பேசாத அப்பறம் நானும் பேசுவேன்.”

“பேசுடா, பேசி பாரு.”

“பேசுனா? பேசுனா என்ன பண்ணுவ? புடுங்கிருவியாக்கும்? ஊரான் பொருளுக்கு ஏண்டா தொங்க போட்டுட்டு அலையுறீங்க?” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்து இரண்டு அடி எடுத்து வைக்க, சட்டென அடி சின்ன காளையின் பிடறியில் விழுந்தது.

இந்த அடியை சிறிதும் எதிர்பார்க்காத சின்ன காளை பொத்தென்று கீழே போய் விழுந்தான். விழுந்தவன் எழுந்து கீழே கிடந்த தென்னை மட்டையை கையில் எடுத்துக்கொண்டு ஈன முத்துவை அடிக்க பாய்ந்து வந்தான்.

பதிலுக்கு ஈன முத்து மண் வெட்டியை கையில் தூக்கி மாற்றி பிடித்துக் கொண்டான்.

சின்ன காளை, ஈன முத்துவின் கையில் அடித்து மண் வெட்டியை கீழே போட வைத்தான். ஈன முத்து, சின்ன காளையின் கையில் இருந்த மட்டையை பிடிங்கி வீசினான்.

இப்படியாக இருவரும் இருட்டிற்குள் கட்டி புரண்டு கொண்டு சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.

பத்து மணிக்கு வீட்டுக்கு வரவேண்டிய அண்ணன் பன்னிரெண்டு மணி ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால், ஈன முத்துவை தேடிக்கொண்டு வேத முத்து தோட்டத்திற்கு வந்தான்.

வேத முத்துவின் ஒரு கையில் டார்ச் லைட்டும் மற்றொரு கையில் வீச்ச அரிவாளும் இருந்தது. பாதி வழியில் டார்ச் லைட்டில் மின்சாரம் தீர்ந்து விட, பழக்கப்பட்ட பாதை என்பதால் அமாவாசை இருட்டிலும் சர்வசாதாரணமாக நடந்து வந்தான்.

அமாவாசை இருட்டுக்குள் ஈன முத்துவும் சின்ன காளையும் கட்டி புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பதை சத்தத்தை வைத்து உணர்ந்த வேத முத்து பதற்றத்தில் ஒரு நிமிடம் செய்வதறியாது நின்றான்.

அவன் மனதில் ஒரு குரூர திட்டம் மின்னலென உருவானது.

பின் சண்டை நடக்கும் இடத்தின் அருகில் வந்து நின்றவன், சின்ன காளையை தீர்த்து கட்டிவிடலாம் என்று நினைத்து, தனது அண்ணனான ஈன முத்துவிடம் அவன் இருக்கும் இடத்தை, அவனிடமே கேட்டு தெரிந்து கொண்டு கையில் இருக்கும் அரிவாளால் வெட்டினான்.

வேத முத்துவின் தந்திரத்தை உணர்ந்து கொண்ட சின்ன காளை கீழே கிடந்த ஈன முத்துவை ஒரே புரட்டு புரட்டி தனக்கு மேல வைத்துவிட்டேன்.

வேத முத்து வெட்டுவதற்கும் சின்ன காளை, ஈன முத்துவை புரட்டுவதற்கும் நேரம் சரியாக இருக்க ஈன முத்துவின் கழுத்தில் வேத முத்து அரிவாளால் போட்டுவிட்டான்.

சின்ன காளைக்கு வைத்த குறி ஈன முத்துவின் உயிரையே குடித்து விட்டது. சற்று நேரத்தில் ஈன முத்து துடிதுடித்து இறந்தான். சின்ன காளை அங்கிருந்து ஓடிவிட்டான்.

முப்பதாவது நாளில் ஜாமீனில் வந்த வேத முத்து, தனது அண்ணன் ஈன முத்துவின் மனைவி பதுமையை திருமணம் செய்து கொண்டான்.

ஈன முத்துவின் பாகம் முழுவதும் வேத முத்துவுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் பதுமை, வேத முத்துவுடன் திருமணம் ஆன ஏழாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள்.

ரக்சன் கிருத்திக்
8122404791

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.