பாகற்காய் பொரியல் அருமையான தொட்டுக் கறியாகும். கசப்பு சுவையை உடைய பாகற்காயை பெரும்பாலோர் விரும்புவது இல்லை.
பாகற்காய் சத்து நிறைந்தது. அதன் விபரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.
பாகற்காயை கசப்பு சுவை இல்லாமல் எல்லோரும் விரும்பும் வகையில் சமைக்கலாம்.
இனி சுவையாக எளிய முறையில் பாகற்காய் பொரியல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் – ¼ கிலோ கிராம்
மிளகாய் வற்றல் – 3 எண்ணம் (பெரியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
சின்ன வெங்காயம் – 3 எண்ணம் (நடுத்தர அளவு உடையது)
கடுகு – ½ டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
தேங்காய் எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
பாகற்காய் பொரியல் செய்முறை
முதலில் பாகற்காயை அலசி காம்பு நீக்கி படத்தில் காட்டியவாறு வட்ட வட்ட வில்லைகளாக வெட்டவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணை ஊற்றி காய விடவும்.
தேங்காய் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கிய பாகற்காய், தேவையான உப்பு சேர்த்து ஒரு சேரக் கிளறி மூடி வைத்து அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
அவ்வப்போது மூடியை நீக்கி கிளறி விடவும்.
பாகற்காய் நிறம் மாறி கிளறும் போது சலசல என கேட்டும் போது அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான பாகற்காய் பொரியல் தயார்.
இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
உளுந்தம் பருப்பு சேர்த்த இந்த பொரியல் மொறு மொறுவென இருப்பதால் எல்லோரும் இதனை விரும்பி உண்பர்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மஞ்சள் பொடி சேர்த்து பொரியல் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை நேராக நறுக்கி பாகற்காயுடன் வதக்கி பொரியல் தயார் செய்யலாம்.
பிஞ்சு பாகற்காயை பொரியலுக்குத் தேர்வு செய்வது சுவையை அதிகரிக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!