பாகற்காய்

பாகற்காய் கசப்பு சுவைக்கு உதாரணமாக சிறுவயது குழந்தைக்கு இன்றைக்கும் சொல்லித் தரப்படுகிறது. இக்காய் கசப்பு சுவையினைப் பெற்றிருந்தாலும் அன்று முதல் இன்று வரை சமையலிலும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆசிய நாடுகள் பலவற்றில் இக்காய் பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இக்காயானது வீட்டுத் தோட்டம் முதல் வயல்வெளி வரை பயிர் செய்யப்படுகிறது.

பாகற்காய் குக்குர்பிட்டேசியே என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்த கொடி வகைத் தாவரம் ஆகும். தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்றவை குக்குர்பிட்டேசியே தாவர குடும்பத்தைச் சார்ந்த பாகற்காயின் உறவினர்கள் ஆவார்.

இக்காயின் அறிவியல் பெயர் அம்மார்டிகா சார்ந்தியா என்பதாகும்.

பாகற்காயின் தாயகம் இந்தியாவாகும். பதிநான்காம் நூற்றாண்டில் இக்காய் சீனாவில் பிரபலமடைந்தது.

தற்போது பாகற்காயானது சீனா, தைவான், வியட்நாம், தாய்லாந்து, இந்தியா, பிலிபைன்ஸ், மலேசியா, தென்ஆப்பிரிக்கா, கரீபியன் போன்ற நாடுகளில் பணப்பயிராகப் பயிர் செய்யப்படுகிறது.

பாகல் வெப்பமண்டல மற்றும் துணைவெப்ப மண்டல இடங்களில் நன்கு செழித்து வளருகிறது. குக்குர்பிட்டேசியே குடும்பத்தில் உள்ள ஏனைய தாவரங்களைவிட இது வேகமாக வளரும் தன்மையினை உடையது.

பாகல் தரையிலோ அல்லது பந்தலிலோ படந்து வளரும் கொடி வகைத் தாவரம் ஆகும். ஒவ்வொரு பாகற்கொடியும் ஆண் மற்றும் பெண் பூக்களைக் கொண்டிருக்கும். பெண்பூக்களிலிருந்தே பாகற்காய் கிடைக்கிறது.

பாகற்காய் ஆண் பூ
பாகற்காய் ஆண் பூ

 

பாகற்காய் பெண் பூ
பாகற்காய் பெண் பூ

 

பாகற்காயில் மிதிபாகல், பழுபாகல், நாய்பாகல், கொம்புபாகல், நரிப்பாகல், பேய்பாகல் எனப் பல வகைகள் உண்டு. எனினும் நம்நாட்டில் மிதிபாகல், கொம்புபாகல் என இரு வகைகள் மட்டுமே பயிர் செய்யப்படுகின்றன.

மிதி பாகல்
மிதி பாகல்

 

கொம்பு பாகல்
கொம்பு பாகல்

 

கொம்புபாகல் 20 செமீ நீளத்துடன் நீள்வட்ட வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். மிதிபாகல் 10 செமீ நீளத்துடன் நீள்வட்ட‌ வடிவத்தில் அடர் பச்சை நிறத்தில் காணப்படும்.

பொதுவாக பாகற்காயின் மேற்பரப்பு சொரசொரவென ஆங்காங்கே முகடுகளுடன் காணப்படும். உட்புறத்தில் வெள்ளை நிற சதைப்பகுதியையும், கடினமான கொட்டைப் பகுதியையும் கொண்டிருக்கும்.

பாகலானது பழுக்கும்போது மஞ்சள் கலந்து ஆரஞ்சு நிற கடினமான மேல் தோலையும், சிவப்பு நிற விதைகளையும் கொண்டிருக்கும். சமையலில் மென்மையான மேற்பரப்பினை உடைய பச்சைநிறக் காய் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

 

பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பாகற்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகின்றன. ஏனைய விட்டமின்களான பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவையும் காணப்படுகின்றன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

குறைந்த அளவு எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரோடீன், நார்சத்து, பைட்டோ நியூட்ரியன்களான ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன், லுடீன் ஸீக்ஸாத்தைன் ஆகியவற்றையும் பாகல் கொண்டுள்ளது.

 

பாகற்காயின் மருத்துவப் பண்புகள்

நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற

பாகற்காயில் பீனாலிக் சேர்மங்களான கேலிச் அமிலம், கேட்சீன் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகளாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகின்றன.

மேலும் வைரஸ் எதிர்ப்பு பொருள்கள் இக்காயில் உள்ளதால் உடலை நோய் தொற்றுலிருந்தும், பீரி ரேடிக்கல்களின் செயல்பாட்டின் காரணமாக செல்களில் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நம்மை பாகற்காய் பாதுகாக்கிறது. எனவே பாகற்காயினை உணவில் சேர்த்து நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறலாம்.

 

மூலநோய்க்கு நிவாரணம் பெற

பாகற்காயில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது மூலநோய்க்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பாகற்கொடியின் வேரினை அரைத்து மூலநோயால் பாதிக்கப்பட்ட இடத்தில் பூச எரிச்சல், வலி, இரத்தக்கசிவு ஆகியவை தீரும். பாகற்காய் சாற்றினை அருந்தினாலும் மூலநோய் குணமாகும்.

 

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க

இக்காயில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது உடலின் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் பீரி ரேடிக்கல்களினால் புற்றுநோய் ஏற்படுவதை தடை செய்கிறது.

மேலும் பாகற்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அவை கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், மார்பகம் ஆகிய இடங்களில் புற்றுகட்டிகள் ஏற்படுவதை தடை செய்வதாகவோ அல்லது புற்றுநோயின் வீரியத்தை குறைப்பதாகவோ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

சுவாசநோய்கள் நீங்க

சுவாசநோய்களான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ரினிடிஸ் போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த நிவாரணம் அளிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இக்காயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைரஸ் எதிர்ப்பு பண்புகள் ஆகியவை சுவாச நோய்களுக்கு எதிர்ப்பு ஊக்கியாக செயல்படுகின்றன.

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பாகற்காயினை உண்ண நல்ல தூக்கத்தினை நாம் பெறலாம்.

 

பூஞ்சை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற

பாகற்காயில் காணப்படும் பாக்டீயா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்பு காரணமாக பூஞ்சை தொற்று நோய்க்கு சரியான தீர்வாக இக்காய் கருதப்படுகிறது.

மேலும் இக்காயினை உண்ணும்போது இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நோய் தொற்று இரத்தத்தில் கலந்து கேடு விளைவிக்கும் முன்பே முறியடிக்கப்படுகிறது.

தடிப்பு தோல் அழற்சி உள்ளிட்ட தோல் நோய்களுக்கு பாகற்காய் சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இதனை உண்ணுவதால் பூஞ்சை தொற்றினால் தோலில் ஏற்படும் அரிப்பு, அழற்சி பண்பு ஆகியவை நீக்கப்படுகின்றன.

பூஞ்சை தொற்றினால் தோலின் பாதிக்கப்பட்ட இடத்தில் பாகல் இலையினை அரைத்துப் பூசி நிவாரணம் பெறலாம்.

 

டைப் 2 சர்க்கரை வியாதிக்கு

பாகற்காயில் பாலிபெப்டைட்-பி என்ற இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைக்கும் தாவர இன்சுலின் உள்ளது. மேலும் சாரன்டின் என்ற இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்கும் காரணி ஒன்றும் உள்ளது.

இவை இரண்டும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே பாகற்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து டைப் 2 சர்க்கரை வியாதிக்கு நிவாரணம் பெறலாம்.

 

பாகற்காயினைப் பற்றிய எச்சரிக்கை

கர்ப்பிணிகள் பாகற்காயின் பயன்பாட்டினை குறைத்து கொள்வது நல்லது. ஏனெனில் இக்காய் இரத்தப்போக்கைத் தூண்டி விடும்.

மேலும் இக்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைப்பதால் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் குறைந்த சர்க்கரை அளவினை உடையவர்கள் தவிர்ப்பது நலம்.

 

பாகற்காயினை வாங்கும் முறை

பாகற்காயினை வாங்கும்போது புதிதான அடர் பச்சைநிறத்தில் மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள் ஏதும் இல்லாதவற்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

பாகற்காயின் முனைகளைக் கிள்ளிவிட்டு தனிப்பையில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். பாகற்காயினை நன்கு தண்ணீரில் அலசி பின் வெட்டிப் பயன்படுத்தலாம்.

இக்காயானது பச்சையாகவோ, சமைத்தோ பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தி பொடியாக்கப்பட்ட பாகற்காயினை பாலிலோ, டீயிலோ கலந்து சில ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய் மற்றும் வத்தல் செய்யவும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.