“அம்மா! அழுவாதம்மா! அம்மா! அழுவாதம்மா!” என்று அழுதபடி பதினோரு வயது மகனும் ஒன்பது வயது மகளும் இருபுறமும் அமர்ந்திருக்க, குடிகாரப் புருஷனிடம் வாங்கிய அடியும் உதையும் முப்பத்தேழு வயது முத்துப்பேச்சியைச் சுருண்டு படுக்க வைத்திருந்தது.
முதுகும் வலது கன்னமும் பற்றி எரிந்தது. எட்டி உதைத்த உதையில் இடுப்பு வலி தாங்க முடியவில்லை. மல்லாந்து படுத்து இரு கால்களையும் நீட்டினாலே ‘பளீரெ’ன்று இடுப்பை வெட்டியது வலி.
தினம்தினம் அடியும் உதையும் வாங்கி வாங்கி அழுதழுது, ‘எதுக்குதான் வாழுறது? பேசாம அரளி விதையன்னா அரச்சு குடிச்சிட்டு செத்துடலாமா? இல்லாட்டி மொழக் கயுத்துலன்னா தொங்கிடலாமா?’ என அடி வாங்கி அடி வாங்கி மனதும் உடம்பும் வேதனைப்படும் நேரத்திலெல்லாம் பேச்சிக்கு சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
“அம்மா! அழுவாதம்மா! அம்மா! அழுவாதம்மா!” என்று தன்னைத் தேற்றியபடி தன் இருபுறமும் அழுதபடி அமர்ந்திருக்கும் மகனுக்காகவும் மகளுக்காகவும் சாகும் நினைப்பைக் கைவிடுவதும் பேச்சிக்கு வழக்கமாகிப் போன ஒன்று.
பேச்சியையும் பிள்ளைகளையும் சுற்றி ரேஷன் அரிசியும், சீனியும், கோதுமையுமாய்ச் சிதறிக் கிடந்தன.
முதல்நாள் இரவு குடித்து விட்டு வந்த மாரியப்பன் “ராவுக்கு சாப்புட ஏண்டி கருவாட்டுக் கொழம்பு வெக்கில” என்று அலம்பல் பண்ணி அட்ராசிடி பண்ணி, சோற்றுப் பானையைக் காலால் எட்டி உதைக்க சோறு பானையிலிருந்து முழுதுமாய் வெளியே வர, பக்கத்தில் சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்து சோற்றின் மீது கொட்டிவிட்டு, வேட்டி அவிழ்ந்து கீழே விழ பட்டாபட்டி ட்ரவுசர் தெரிய கால்களை விரித்துப் போட்டபடி படுத்து உறங்கிப் போனான்.
ஆக்கி வைத்த சோறு வீணாகிப் போக பேச்சியும் குழந்தைகளும் தண்ணியைக் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டார்கள்.
விபரம் தெரிய வந்த நாளிலிருந்து குடிகாரத் தந்தையின் அடாவடித்தனத்தைப் பார்த்துப் பார்த்து வளர்ந்து வரும் இரு பிள்ளைகளுமே தந்தை மாரியப்பனை மனதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுத்தார்கள்.
பேச்சியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மொத்தமாய் குடிகாரக் கணவனை வெறுத்திருந்தாள்.
வேட்டி அகல ட்ரவுசரோடு காலை அகட்டி படுத்துக் கிடந்தவன் காலை எழுந்தவுடனேயே கத்தினான்.
“பசிக்குது.. பசிக்குது..”
முதல்நாள் இரவு அவனால் வீணாக்கப்பட்ட சோற்றை அள்ளி எடுத்து வைத்திருந்தாள் பேச்சி. அதையும் பச்சை மிளகாயையும் உப்பையும் அவனெதிரே கொண்டு வைத்தாள்.
“ஏய்! என்ன இது? பழைய சோறு!”
“ம்… நேத்து நீ எட்டி ஒதச்சி வீணாக்கின சோறு. பசிக்கிதுன்றல்ல துண்ணு!”
“ஏய்! என்னாடி பழைய சோத்த கொண்டு வெக்கிற. பூரி கெழங்கு, இட்டிலி எதும் இல்ல. எவண்டி பழய சோத்த துண்றது?”
“ஆமா! நெதமு நீ சம்பாரிச்சு சம்பாரிச்சி கொண்டாந்து குடுக்குறது பாழாப் போவுது. விதவிதமா ஒனக்கு ஆக்கிப் போடுறே. த்தூ! நீயெல்லா ஒரு மனுஷனு பழய சோறே ஒனக்கு அதிகம்”
“என்னா சொன்ன… என்னா சொன்ன.. எனக்கு பழைய சோறே அதிகமா?” அடுத்து அவன் வாயிலிருந்து வண்டி வண்டியாய் கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்தன.
முதல்நாள் கட்டிடவேலை முடிந்து திரும்பும்போது ரேஷன் கடையில் வாங்கி வந்திருந்த அரிசி, ஜீனி, பருப்பு, பாமாயில் அனைத்தையும் வைத்திருந்த பையை சுவரில் சாய்த்து வைத்திருந்தாள் பேச்சி.
பேச்சியைக் கெட்ட வார்த்தைகளால் கழுவி ஊற்றிக் கொண்டிருந்த மாரியப்பன் ஒவ்வொரு பையாய் எடுத்து விசிறியடிக்க, அந்த சின்னஞ்சிறு கூடம் முழுதும் அரிசியும் பருப்பும், ஜீனியும், கோதுமையும் தாறுமாறாய்ப் பரவி விரவின.
பாமாயில் பாக்கெட் வீசிய வேகத்தில் சுவற்றில் பட்டு உடைந்து சுவற்றில் கோலமிட்டு தரையில் இறங்கிப் பரவி வாய்க்கால் போல் ஓடியது.
“அடப்பாவி! அடப்பாவி! நீ நல்லா இருப்பியா?” கத்திக் கொண்டே அவனைத் தடுக்க ஓடினாள் பேச்சி.
“வாடி வா! வந்து வசமா மாட்டிகினியாடி” கொத்தாய்த் தலைமுடியைப் பற்றி உலுக்கினான்; பளீரென்று கன்னத்தில் அறைந்தான்.’தொபீர் தொபீரெ’ன்று முதுகில் அடி வைத்தான்; முழு பலத்தோடு இடுப்பில் எட்டி உதைத்தான்.
“ஐயோ! ஐயோ! அம்மாவ அடிக்காத! அம்மாவ அடிக்காத! என்று கத்திக் கொண்டே தடுக்க வந்த பிள்ளைகளை நெட்டித் தள்ளினான்.
மறக்காமல் கீழே உருண்டு கிடந்த பித்தளைச் செம்பை எடுத்துக் கொண்டு
வெளியேறினான்.
‘அப்பா! இன்னிக்கு சரக்கடிக்க சொம்ப வித்தா காசு கெடைச்சுடும்’ மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.
“பேச்சி! அடி, பேச்சீ! நேரமாவுது கெளம்பிட்டியா? லேட்டானா சிடுமூஞ்சி மேஸ்திரி திட்டும்.” வாசலிலிருந்து குரல் கொடுத்தாள் பொம்மியக்கா.
பேச்சியின் பாவப்பட்டநிலை பார்த்து தான் பார்க்கும் கட்டிடவேலையில் சித்தாளாக வேலை வாங்கிக் கொடுத்தவள்.
பதில் இல்லாமல் போகவே, ‘வாச தொறந்து கெடக்கு. என்னா செய்யிறா பேச்சி?’ என்று நினைத்தபடி உள்ளே வந்தாள்.
கூடம் முழுதும் அரிசி, ஜீனி, கோதுமை, பருப்பு இறைந்து கிடக்க, பாமாயில் தரையில் ஓடிக் கொண்டிருக்க, பேச்சி தரையில் அழுதபடி படுத்துக் கிடக்க பிள்ளைகள் இருவரும் பேச்சியின் பக்கத்தில் முகம் வீங்கும் அளவுக்கு அழுதபடி இருப்பதைப் பார்த்தவுடனேயே என்ன நடந்திருக்குமென்று புரிந்து போனது பொம்மியக்காவுக்கு.
“பேச்சி! ரொம்ப அடியா? வேலைக்கு வர முடியுமா?”
“இடுப்பு வுட்டுப் போவுதக்கா! முடியல”
“இன்னைய அறுநூறு சம்பளம் போயிடுமே. வேலையே மாசம் நாலு நாள்தா இருக்கு. என்னவோ போ! தானும் சம்பாரிச்சி பொண்டாட்டி, புள்ளைவள காப்பாத்த மாட்டா. சம்பாரிக்கிற ஒன்னையும் இப்புடி கண்ணு, மண்ணு தெரியாம அடிச்சிப் போட்டா, குடும்பத்த யாரு பாக்குறது? திருந்தாத ஜன்மங்க. நா வாரேன். லேட்டாயிடுச்சினா அந்த மேஸ்திரி கத்துமில்ல” வாசலை நோக்கி நடந்தாள் பொம்மியக்கா.
“பாரு! ஆக்கித் துண்ணுற பொருளுங்கள இப்பிடியா வாரியடிச்சு வாட்டபுலி காணுவான் குடிகாரப்பய, பொண்டாட்டிய கைநீட்டி அடிக்கிற இவுனுங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.” சொல்லிக் கொண்டே தெரு வாசலில் கால் வைத்தாள்.
“அம்மா! நீ சரீன்னு சொல்லும்மா. இந்த குடிகார அப்பனை, இல்ல.. இல்ல.. ஒங்குடிகார புருஷன உருட்டுக் கட்டையால பின் மண்டேல அடிச்சே சாவடிச்சிடறேன்” என்றான் பதினோரு வயது மகன். குரலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது.
“ஆமாம்மா! எனக்குகூட ஒம்புருச குடிச்சிட்டு கீழ விழுந்து கெடக்கும் போது அப்டியே நச்சுனு அம்மிக் கொளவிய தூக்கி மண்டேல போட்டு சாவடிக்கனும் போல இருக்கு. ஒருநாளு இவுரு கடத்தெருவுல ஜெட்டி தெரிய வுளுந்து கெடந்தப்ப எ பள்ளியொடத்து ப்ரெண்டெல்லாம் பாத்து சிரிச்சாங்க தெரியுமா? எனக்கு ரொம்ப அசிங்கமாயிடுச்சி. அழுகையே வந்திடிச்சி தெரியுமா?” ஒன்பது வயதுப் பெண் நறுக்குத் தெரித்தாற்போல் பேசினாள். வெறுப்பு தெறித்தது வார்த்தைகளில்.
படுத்திருந்த பேச்சி இரு கைகளையும் வளைத்து பிள்ளைகளைத் தன்னோடு கட்டிக் கொண்டாள்.
“தோ, பாருங்க! எங்கண்ணுங்களா! நீங்க ரெண்டு பேரும் இப்பிடீல்லாம் இனிமே யோசிக்கக் கூடாது. நீங்க ரெண்டு பேரும் ஜெயிலுக்குப் போய்ட்டா இந்த அம்மாவ யாரு பாத்துப்பா. மொதல்ல நா உயிரோட இருப்பேனா ஒங்களப் பிரிஞ்சு. தப்பு செய்யுறவங்கள ஆண்டவன் தண்டிப்பான். விடுங்க!”
இரு பிள்ளைகளும் தாயின் மீது சாய்ந்து தூங்கிப் போயினர்.
பேச்சிக்கு சுய பச்சாதாபத்தில் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அம்மா வூட்ல இருந்த வர தான் சந்தோஷம். கல்யாணம் ஆனப்புறம் ஒரு மூணுமாசம் பொய் சந்தோஷத்தில் வாழ்ந்தது நினைவுக்கு வந்தது.
அந்த மூணுமாசமும் புருஷன் மாரியப்பன் எப்படியெல்லாம் தன்னை ஏமாற்றியிருக்கிறான்.
கண்களின் இரு ஓரங்களிலிருந்தும் கண்ணீர் கோடு போட்டபடி கீழிறங்கி தரையை நனைத்தது.
இருபத்தியிரண்டு வயது முத்துப் பேச்சி மாரியப்பனிடம் தாலி கட்டிக் கொண்டு புருஷன் வீடு வந்தபோது எல்லாப் பெண்களையும் போல நெஞ்சு முழுவதுமாய்க் கனவுகளைச் சுமந்து கொண்டுதான் வந்தாள்.
அவள் ஆசைப்பட்டது போலவே மாரியப்பன் முதல் மூன்று மாதங்கள் முத்துப் பேச்சிக்கு சொர்க்கத்தைக் காட்டினான்.
டூரிங் டாக்கீஸில் வாரம் ஒரு சினிமா என்ன! ஹோட்டல் என்ன! மல்லிப்பூ என்ன! அல்வா என்ன! என்று பேச்சியை திக்குமுக்காட வைத்தான். எல்லாம் கல்யாணத்தில் வந்த மொய்ப் பணம் தீரும் வரைதான்.
பெயர் பெற்ற காய்கறி மார்க்கெட்டில் லாரியிலிருந்து காய்கறி மூட்டைகளை இறக்கும் வேலை என்று சொல்லித்தான் பேச்சியைத் திருமணம் செய்து கொண்டான்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வப்போது வேலைக்குப் போவான். வேலை பார்க்குமிடத்தில் திருமணத்தைக் காரணம் காட்டி அட்வான்ஸாய் பணம் வாங்கியதால் அதைக் கழிப்பதற்காக சம்பளமின்றி வேலை செய்ய வேண்டியிருந்தது.
மதியம் இரண்டு மணியோடு வேலை முடிந்து விடும். இவனுக்கு வேலை தந்த முதலாளி அன்றாடம் பாவப்பட்டுத் தரும் சில பத்து ரூபாய்களுக்கு வேலை முடிந்ததும் மார்க்கெட்டுக்கு அருகிலிருக்கும் டாஸ்மாக்கில் குவார்ட்டர் வாங்கிக் குடித்துவிட்டு எங்காவது விழுந்து கிடந்து விட்டு, போதை தெளிந்ததும் பஸ்டாண்ட் கட்டணக் குளியலறையில் குளித்துவிட்டு வாயில் சூயிங்கம் மேன்று துப்பிவிட்டு வீட்டுக்கு வருவான்.
கணவன் உழைத்துச் சலித்து வருவதாய் நம்பி அவனுக்கு நண்டு ரசமும் குடல் கறியும் ஆட்டுக்கால் சூப்புமாய் பார்த்துப் பார்த்து அக்கறையோடு ஆக்கிப் போடுவாள் பேச்சி.
இதற்கிடையே ஐம்பத்தி ரெண்டு நாளில் கருச்சிதைவு ஏற்பட்டது பேச்சிக்கு. விக்கி விக்கி அழுத மனைவியை மாரியப்பன் கட்டியணைத்து ஆறுதல் கூறிவிட்டு வருத்தமான முகத்தோடு வீட்டிலிருந்து வெளியே சென்றவன் திரும்பி வந்தபோது முழு போதையில் வந்து பேச்சியை அதிர வைத்தான்.
“ஐயோ! இதென்னங்க புதுப்பழக்கம். குடிச்சிட்டு வந்துருக்கீங்க?” என்னவோ புருஷன்காரன் இன்றுதான் முதன் முதலாய் குடிப்பதை ஆரம்பித்திருப்பதாக நம்பி மாரியப்பனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“பேச்சி! மனசு தாங்கல பேச்சி! மனசு தாங்கல! நம்ம புள்ள.. நம்ம புள்ள.. அநியாயமா கலஞ்சு போய்ட்டே” தலையில் அடித்துக் கொண்டான்.
“துக்கம் தாங்க முடியல பேச்சி. அதா அதமறக்க குடிச்சே. தப்பா பேச்சி தப்பா?” அழுது நடித்தான்.
“குடிக்கிறது ஒனக்கு புடிக்காதுன்னு தெரியும். இனிமே குடிக்க மாட்டேன் பேச்சி. இதா மொத மொற, இதா கடைசி மொறொயும் பேச்சி” சொல்லிக் கொண்டே தடுமாறினான். ‘கொட கொடவெ’ன்று வாந்தி எடுத்தான். அப்படியே எடுத்த வாந்தியின் அருகேயே மடங்கி விழுந்தான்.
திருமணமாகி முழுதாய் மூன்றுமாதம் முடிந்து போனது. மொய்யில் வந்த பணமும் தீர்ந்து போனபோது புதுக்கல்யாண ஃபீலிங்ஸ் கொஞ்சம் குறைந்துதான் போயிருந்தது மாரியப்பனுக்கு.
பொண்டாட்டியை விட டாஸ்மாக் சரக்குதான் முதல் தேவவையாக இருந்தது. இனி சரக்கடிக்க காசுக்கு என்ன செய்வதென்ற கவலை மாரியப்பனின் மனதுக்குள் மெல்ல எட்டிப் பார்த்தது.
பேச்சியோடு சினிவுக்குப் போவது ஹோட்டலுக்குப் போவதெல்லாம் நின்று போனது.
ஒருநாள் “ஏங்க, புதுசா விஜய் படம் வந்திருக்காமில்ல! போவலாமா?” என்று பேச்சி கேட்டபோது ‘சள்’ளென்று எரிந்து விழுந்தான் மாரி.
“நானே நாளெல்லாம் மூட்டதூக்கி, மூட்டதூக்கி சளைச்சு களைச்சுப் போய் வாரேன். வூட்டுலியே குந்திக் கெடக்குற ஒனக்கென்ன தெரியும் எங்கஷ்டம். சினிமாவாம் சினிமா”
முதன் முதலாய் அவன் எரிந்து விழுந்தது பேச்சியை நடுங்க வைத்தது.
“ஏங்க.. ஏங்க.. இப்பிடி சள்ளுபுள்ளுன்னு எரிஞ்சு வுழுறீங்க. நீங்க முன்ன மாதிரி
இல்லீங்க. கல்யாணமாகி முழுசா மூணு மாசந்தாங்க ஆயிருக்கு. அதுக்குள்ள நா அலுத்துட்டேனா! இப்பிடி கடுகடு சிடுசிடுன்னு பேசுறீங்க. வேல ரொம்ப கஷ்டமா இருக்குதா? அப்பாவியாய்க் கேட்டாள் பேச்சி.
“ஆமா, நானே ஒடம்பு வலி தாங்க முடியலயே! மருந்து வாங்கி ஊத்திக்கலாமுன்னா கையில காசு இல்லியேன்னு தவிச்சிக்கிட்டு இருக்குறேன். ஒனக்கு சினிமா கேக்குதோ?” சீறினான்.
‘மருந்து வாங்கி ஊத்திக்க’ என்ற புருஷனின் வார்த்தைக்கு அர்த்தம் புரியாத பேச்சி, “ஏங்க இன்னைய வேலைக்கு சம்பளம் வல்ல?” என்று கேட்டாள் அப்பாவித்தனமாய்.
நடிக்க ஆரம்பித்தான் மாரி.
“பேச்சி எனக்கு ஒடம்பு மட்டுமில்ல நெஞ்சும் வலிக்கிது. வேலைக்குப் போவுல”
பயந்து போனாள் பேச்சி. “என்னாது நெஞ்சு வலிக்குதா? வாங்க, வாங்க ஆஸ்பத்திரிக்கி போவலாம்” பரபரத்தாள்.
“வேணாம் பேச்சி. மெடிகலு ஷாப்புல சொல்லி மருந்து வாங்கி ஊத்தி கிட்டா சரியாயிடும்”
“இருங்க” உள்ளே போய் நூறு ரூபாய்த் தாளைக் கொண்டு வந்து நீட்டினாள்.
“அம்மா கைச்செலவுக்கு வெச்சுக்கன்னு குடுத்திச்சி. நானே போய் மருந்து வாங்கிட்டு வரேன். வலியோடு நீங்க போவாதிங்க”
அவசர அவசரமாய் மறுத்தான் மாரி.
“நானே போவுறேன்! நானே போவுறேன்! எனக்கு என்னா பண்ணுதுன்னு நா சொல்லி மருந்து வாங்கினா தானே நல்லது” சொல்லிக் கொண்டே வெளியே ஓடினான்.
மாரியாத்தா படத்தின்முன் போய் நின்று கணவனின் ஆயுளுக்காக மனமுருக வேண்டிக் கொண்டாள் பேச்சி.
அரைமணி நேரத்தில் திரும்பி வந்தவன் ஃபுல் போதையோடும் கையில் திறக்கப்படாத பாட்டிலோடும் வந்தான்.
அதிர்ச்சியில் தலையில் இடி விழுந்தவளைப் போல நின்றாள் பேச்சி.
புருஷன் எந்த வேலையும் இல்லாத முழு நேர குடிகாரன் என்பதும், கடந்த மூணுமாதமாக மொய்ப் பணத்தில்தான் அவளை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்ததையும் போதையில் அவன் உளறிய உளறல்கள் மூலம் அறிந்து கொண்டாள் பேச்சி.
அவளுக்கு உண்மை தெரிந்து விட்டது ஒருவிதத்தில் மாரியப்பனுக்கு நல்லதாகவே பட்டது. எதையும் மூடிமூடி வைத்தால்தான் தெரிந்தால் என்னநடக்குமோ என்று பயமாய் இருக்கும். தெரிந்துவிட்டால் சமாளிக்க தைரியம் வந்துவிடும் என்பதுபோல் தெனாவட்டாகிப் போனான் மாரி.
குடிக்க வீட்டிலேயே திருட ஆரம்பித்தான். நகைகளும் பாத்திரங்களும் வீட்டிலிருந்து மறைய ஆரம்பித்தன.
பேச்சிக்கும் மாரியப்பனும் எலியும் பூனையுமானார்கள். தினம் தினம் குடித்து விட்டுவந்து பொண்டாட்டி பேச்சியைக் கைநீட்டி அடிக்க ஆரம்பித்தான்.
இதனிடையே வரமோ சாபமோ ஆண்டவன் விருப்பமோ ஆண் பெண்னென இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள் பேச்சி. குழந்தைகள் பிறந்தும் மாரியப்பன் திருந்தவில்லை; குடியை மறக்கவில்லை.
குழந்தைகள் வளரும் போதே பெற்றவன் மீது தமக்குள் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டே வளர்ந்தார்கள். மாரியப்பனுக்கும் முத்துப் பேச்சிக்கும் கல்யாணமாகி பதினைந்து வருடம் ஓடி விட்டது.
மாரியப்பன் திருந்தாத குடிகாரனாகவே இருக்க பேச்சி கட்டிட வேலைக்குச் சென்று சித்தாள் வேலை பார்த்து கிடைக்கும் வருமானத்தில் மிகுந்த சிரமத்தோடு குடும்பத் தேர் நகர்ந்து கொண்டிருந்தது.
இதில் தினமும் குடிக்கக் காசு கேட்டு அடிப்பதும் குடித்து விட்டு வந்து அடிப்பதுமாய் மனைவி குழந்தைகளின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான் மாரியப்பன்.
கடந்து வந்த பதினைந்து ஆண்டுகால வாழ்க்கையை அசை போட்டுக் கொண்டிருந்தது மனது. அருகில் சித்தாளு வேலைக்குச் செல்லும்போது வாட்டர்பாட்டில், டிபன்பாக்ஸ் முதலியவற்றைப் போட்டு எடுத்துச் செல்லும் பைக்குள்ளிருந்து பட்டன் ஃபோன் அழைத்தது.
இருபுறமும் தன் மீது சாய்ந்தாற்போல் படுத்துத் தூங்கும் பிள்ளைகளை மெதுவாய் நகர்த்திவிட்டு எழுந்தாள் பேச்சி. ‘பளீரெ’ன்று இடுப்பில் வலித்தது. சமாளித்துக் கொண்டு பையில் கை விட்டு செல்லை எடுத்தாள் பேச்சி.
நான்குவீடு தள்ளி இருக்கும் புஷ்பா புருஷன் மாணிக்கம் அண்ணன்.
“அண்ணே! என்னண்ணே!”
“அம்மா பேச்சி! ஒடனடியா கெளம்பி கவுருமென்ட்டு ஆஸ்பத்திரிக்கு வா”
“ஐயோ! யாருக்கு என்னண்ணே?”
“பேச நேரமில்ல, ஒடனே வா. ஒம் புருஷன இங்க சேத்துருக்கு”
“எங்கியாவது குடிச்சிட்டு விழுந்து கெடந்திருப்பானோ? பஸ், லாரினு எதுனாச்சும் மேல ஏறிருக்குமோ பாவி மனுஷ, உசிர எடுக்குறான்” கணவனை சபித்துக் கொண்டே பிள்ளைகளை இழுத்துக் கொண்டு, வெளியே வந்தவளை தெருவில் பல பேர் நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் ஓடும் காட்சி கதி கலங்க வைத்தது.
“ஜி.ஹெச்.சுக்கா? இருநூறு ரூவா ஆகும்” ஆட்டோக்காரரின் அதிரடி வார்த்தைகள் அதிர வைத்தது பேச்சியை.
“என்னாது வழக்கமா அறவது ரூவாதானே? அநியாயமா இருநூறுன்ற?”
“ஏ! நடப்பு தெரியாதா?
பாக்கெட்டு சாராயத்த குடிச்சிட்டு கொத்து கொத்தா ஆளுங்க சாவக் கெடக்கானுவ. அவ அவ கண்ணு தெரியாமயும் நெஞ்சு வலின்னும் வவுத்து வலின்னும் ரத்த வாந்தி எடுத்துகிட்டும் இப்பவோ அப்பவோன்னு உசிரு ஊசலாட கெடக்கானுவ.
அறிஞ்சவுங்க, தெரிஞ்சவுங்க, ஒறவுக்காரங்கனு சனங்க கூட்டங் கூட்டமா ஆஸ்பத்ரிக்கு ஓடுறாங்க. ஆட்டோவே கெடைக்காம அல்லாடுறாங்க. முன்னூறுக்கு கொறஞ்சு ஆட்டோ வராது. நாந்தா போனாப் போவுதுன்னு எறநூறு”
ஆஸ்பத்திரிக்குள் நுழையவே முடியாதபடி பெருங்கூட்டம் எங்கும் ஒலம்.
பேச்சியின் உறவுகளும் மாரியப்பனின் உறவுகளும் வந்தாயிற்று. பொம்மியக்கா பேச்சி கூடவே இருக்க மாரியப்பன் ஏழு மணிக்கு சிகிச்சை பலனின்றி செத்துப் போனான்.
அவனுக்குத் துணை போக மேலும் ஆறு பேரும் செத்து மடிய, மருத்துமனை அல்லோல கல்லோலப்பட்டது. எங்கும் கத்தலும் கதறலும்தான்.
உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மாரியப்பனின் உடல் பேச்சியிடம் அளிக்கப்பட்ட போது மணி விடிகாலை மூன்று.
சொட்டுக் கண்ணீர்கூட பேச்சியின் கண்களில் எட்டிப் பார்க்கவில்லை. முகம் பாறை போல் இறுகிக் கிடந்தது.
பொம்மியக்காதான், “பேச்சி! பாரு எத்தினி பேரு வீடியோ எடுக்குறானுவ? மைக்க கொணாந்து வாய்கிட்ட நீட்டி நீட்டி கேள்வி கேக்குறானுங்க. நீ புருஷஞ் செத்ததுக்கு நெசமா அழுவுறயோ இல்லியோ, கொஞ்சமாச்சும் அழுவுறது போல நடி. நீ இப்பிடி கல்லு மாரி இருந்தீன்னா ஒஞ்சொந்தமெல்லாம் என்னா நெனைக்கும்” என்று காதோடு கிசுகிசுத்த போதும் பேச்சி அழவில்லை.
விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலைக்கு பத்து லட்சமும் மாதம் ஐந்தாயிரம் உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டது.
பெற்றவர்களில் ஒருவர் பாக்கெட் சாராயம் குடித்து இறந்தால், அந்தக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு தலா மூன்று லட்சம் வைப்புத் தொகையும், பெற்றவர்கள் இருவருமே இறந்து விட்டால் வைப்புத் தொகை ஐந்து லட்சமும் தரப்படும் என்றும் குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்குமென்றும் அறிவிக்கப்பட போது பொம்மியக்காவைத் தவிர பேச்சியின் உறவுகளுக்கும் மற்றவர்களுக்கும் காதில் புகை வந்தது.
அதுவும் தேசியக் கட்சியொன்று தங்கள் பங்குக்கு இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் தருவதாகவும், ஆண்ட கட்சி மாதம் ஐந்தாயிரம் உதவித் தொகையையும் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாகவும் அறிவித்த போது, சில பெண்கள் தங்கள் கணவனை எரிச்சலோடு பார்த்தார்கள்.
‘பாவி மனுஷா, ஒனக்கு கெடைக்கிலயேடா அந்த சாராய பாக்கெட்’ என நினைத்துப் பார்ப்பது போல் தோன்றியது.
வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு அதனடியில் ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது மாரியப்பனின் உடல்.
கண்ணாடியின் மேல் பெரிய சைஸ் பூமாலைகள். பெட்டியைச் சுற்றி ‘கசகச’வென்று கூட்டம். கேமிராக்கள், மைக்குகள்.
தீடீரென ஒரே ஆரவாரம். பந்தலுக்குள்ளே நுழைந்தார் அந்த அரசியல்வாதி. கூடவந்த அல்லக்கை மாலையொன்றை அவரிடம் நீட்ட அதை வாங்கி கண்ணாடிப் பெட்டியின்மீது வைத்து சடலத்தைக் கைகூப்பி வணங்கினார்.
பேச்சியை நோக்கி நகர்ந்தார். நியூஸ் சேனல்களின் நிருபர்களும் கேமராமேன்களும் பரபரப்பாய் இயங்கினார்கள்.
பத்து லட்சத்திற்கான காசோலை அடங்கிய கவரை பேச்சியிடம் வெகு பவ்யமாக நீட்டினார்.
கேமராக்கள் போட்டி போட்டுக் க்ளிக்கின.
நீட்டப்பட்ட கவரைக் கைநீட்டி வாங்காமல் அந்த மிகமுக்கிய முக்கியஸ்தரைக் கை குவித்து வணங்கினாள் பேச்சி. முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.
“ஐயா! வணக்கம் ஐயா!” என்றாள். சட்டென சுற்றியிருந்த கூட்டம் அமைதியாக அசைவற்று நின்றது.
மயான அமைதி. அனைவரின் பார்வையும் பேச்சியின் மீது நிலைத்தது.
தொடர்ந்தாள் பேச்சி.
“ஐயா! மன்னிக்கனும். இந்தப் பணம் எனக்கு வேண்டாமையா!
இந்தப் பணம் என் கணவரின் சாவுக்காக கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையல்லவா?
ஐயா இறந்து போன என் கணவர் எல்லைப் பாதுகாப்புல ஈடுபட்டுருக்குற போது சண்ட நடந்து அதுல எதிரிப்படையால குண்டடிபட்டு இறக்கல; பயங்கரவாதிகளோட சண்ட போடற போது சாகல; மதக் கலவரமோ, இனக் கலவரமோ நடக்கையில கல்லால தாக்கப் பட்டோ கத்தியால குத்தப் பட்டோ சாகல;
நாட்டுக்காக எந்த தியாகமும் பண்ணி உயிர விடல; சாலை விதிகளைப் பின்பற்றி நடந்தும் எதிர்பாராது நடந்த விபத்துல அடிபட்டு இறக்கல; அப்படி இருக்கையிலே எதற்கையா கள்ளச் சாராயம் குடிச்சி செத்த இவுருக்குப் பத்து லெட்சம்?
இவரென்ன விடுதலைப் போராட்ட வீரரா? செத்தப்பறம் மாலையும் மரியாதையும் பணமுடிப்பும் அளிக்க. இவர் நாட்டுக்காக மட்டுமில்ல, வீட்டுக்காகவும் கூட எந்த கடமையையும் தியாகத்தையும் செஞ்சுடல.
கட்டின மனைவிக்கோ, பெற்ற பிள்ளைக்கோ இவர் செய்யவேண்டிய கடமைகள் எதையும் செய்யல. முழுநேரக் குடிகாரனா இருந்து என் உழைப்பின் ஊதியத்தை உறிஞ்சி எடுத்து, டாஸ்மா சரக்கையும் பாக்கெட் சாராயத்தையும் வாங்கி வாங்கிக் குடித்து, டாஸ்மாக்கோட சாராய வியாபாரியோட வருமானத்த உயர்த்தினாரே தவிர தன் குடும்பத்த இவர் எந்த விதத்திலும் காப்பாத்தல.
குடிக்க காசு கேட்டு அடிப்பதும், குடிச்சுட்டு வந்து குடிபோதையில அடிப்பதுமே தன் கடைமையா செஞ்சவர் இவர். உயிரோட இருந்தப்ப நேர்மயா ஒழச்சு சம்பாரிச்சு பத்து ரூவா காசு இவர் கொண்டு குடுத்துருந்தாருனா அந்த காச நா கோடி ரூவாயா நெனச்சு சந்தோஷப் பட்ருப்பேன்.
ஆனா கள்ளச் சாராயம் குடிச்சி செத்து, அதுனால பாவப்பட்டு அரசாங்கம் குடுக்குற பணம் எனக்கோ எம் புள்களுக்கோ தேவை இல்லை ஐயா. குடிச்சி செத்தவன் குடும்பத்துக்கு எதுக்குயா பணம் குடுக்கனும்?
இந்த பணம் மட்டுமில்ல வேற எந்தக் கட்சியுமோ, யாருமோ குடுக்குற எந்தப் பணமும் எனக்கு வேண்டாம்யா.
நா படிக்காதவ தான். ஆனாலும் ஆண்டவன் எனக்கு தெம்பையும் ஆயுளையும் குடுத்தா போதும். உழைத்து சம்பாரித்து எப்புளைகள ஆளாக்குவேனய்யா. நன்றி ஐயா”
கூட்டம் மூச்சு விடவும் மறந்து போய் நின்றது. மௌனமாய் வெளியேறினார் அரசியல் முக்கியஸ்தர்.
அடுத்த பத்தாவது நிமிடம் பேச்சி அகில உலக கதாநாயகியாக ஆகிப் போனாள் செய்திச் சேனல்களால்.
சேனல்கள் வேறு செய்திகள் எதனையும் ஒளிபரப்பாமல் பேச்சியைக் காட்டிக் காட்டிக் அவளின் பேச்சினைப் போட்டுப் போட்டுப் போட்டுப் போட்டுக் காட்டினார்கள்.
ஹாலில் அமர்ந்து செய்திச் சேனலொன்றில் பேச்சியைக் காட்டி அவளின் பேச்சினை ஒளிபரப்பிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ராமனாதன், “பார்வதி! பத்தியா, பத்தியா இந்தப் பொண்ணு படிகாத பொண்ணுதா ஏழைப் பொண்ணுதா. ஆனா எவ்வளவு நியாயமான பேச்சு. நேர்மையான அனுகுமுறை, சத்தியமான வார்த்தைகள்” எழுந்து நின்று கைதட்டினார்.
“ஆமாங்க! ரொம்ப நேர்மையான தன்மானமுள்ள பொண்ணுங்க. இன்னொன்னுங்க, சிலபேரு என்ன பேசிக்குறாங்க தெரியுமா?”
“என்ன பேசிக்கிறாங்க பார்வதி?”
“எதனையோ பேரு தண்ணியடிக்காதவங்க இருக்காங்க நம்மப் போல. அவுங்கள்ல சிலபேரு சொல்றாங்க.
நா தண்ணியடிக்க மாட்டேன். டாஸ்மாக் போக மாட்டேன். பாக்கெட் சாராயம் குடிக்க மாட்டேன்.
வீட்டு வரி, ரோட்டு வரி, தண்ணி வரி நூலகவரின்னு எல்லா வரியும் கட்டுறேன்.
அரசாங்கத்துக்கு. என்னாட்டம் எல்லாருமே கட்டுற வரியாலதா அரசாங்கம் இயங்குது. நாமகட்டுற வரியால கெடைக்கிற பணத்தில மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யனுமே தவிர கொழுப்பெடுத்துப் போய் சாராயம் குடித்து சாவுறவனுக்கெல்லாம் பணத்த அள்ளிக் கொடுக்குறது எந்த விதத்துல நியாயம்?
அந்த குடிச்சு செத்தவனுங்களுக்கு குடுக்குற பணத்துல என் பணமும் சேந்திருக்கு. என் பணத்த குடிச்சு செத்தவனுக்குத் தூக்கிக் கொடுக்க யாரு அதிகாரம் குடுத்ததுன்னு பேசுறாங்கங்க.”
“ரொம்ப சரியான கேள்விதா பார்வதி”
“பார்வதி! ஒரு யோசன”
“சொல்லுங்க, என்ன யோசன?”
“நாம நடத்துற வீட்டு உபகரணங்கள் செய்யுற நிறுவனத்துல அந்த பொண்ணுக்கு ஏதாவதொரு வேல குடுத்து, அவ குடும்பத்துக்கு நல்ல வருவாய் கெடைக்கிற மாதிரி செய்வமா? இல்லாட்டி அந்த குடும்பத்த தத்து எடுத்துக்கலாமா?”
“அந்தப் பொண்ணு யாருடைய உதவியும் தேவயில்லனுனா சொல்லுறா!”
“அந்தப் பொண்ண நாம நேரா போய்ப் பாத்து, நாங்க செய்ய விரும்பறது உங்க கணவர் இறந்துட்டாரேங்ற அனுதாபத்தால இல்ல; உங்களோட நேர்மைக்காக. நீங்க சும்மா பணம் வாங்கிக்க வேண்டாம். எங்க நிறுவனத்துக்கு ஒங்க உழைப்பக் குடுங்க. அதற்கான ஊதியத்தைப் பெறுங்க அப்பிடீன்னு சொல்லுவமா?”
“ம், போவோங்க. நீங்க சொல்றா மாதிரி அந்தப் பொண்ணுக்கு நாம எதாவது
செய்யனுங்க. கெளம்புங்க; போவோம்” என்றார் பார்வதி.
பேச்சி இவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாளோ?
நேர்மையும் நல்ல மனமும் கொண்டவர்களை ஆண்டவன் என்றும் கைவிடுவதில்லை.
![](https://i0.wp.com/www.inidhu.com/wp-content/uploads/2024/03/KanjiThangamaniSwaminathan.webp?resize=525%2C622&ssl=1)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்