ஷீலா. 27 வயது இளம் விதவை. தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை. பேரழகியாக இல்லாவிட்டாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. எல்.கே.ஜி படிக்கும் தன் மகன் விவேக்குடனும், ஸ்கூட்டரில் ஆபிஸ் சென்றபோது நடந்த விபத்தில் இறந்த தன் அன்புக் கணவன் நினைவுகளுடன் வாழ்ந்தாள்.
தன் பெற்றோர் மறுமணத்திற்கு வற்புறுத்தியும் கேளாமல் தன் அன்புக் கணவனுடன் மூன்று ஆண்டுகள் நடத்திய இனிய இல்லற நினைவுகளிலேயே காலம் கழிக்க முடிவெடுத்து தனித்து வாழ்ந்து வந்தாள்.
சோகம் மிகுந்த அவள் வாழ்க்கையில் தென்றலென நுழைந்தான் முகிலன். அவள் குடியிருந்த வாடகை வீட்டின் எதிர் வீட்டு சொந்தக்காரன். 25 வயது இளைஞன். கன்னியரை காதல் செய்யச் சொல்லும் கட்டான உடல். கல்லூரி படிப்பை முடித்த கையோடு கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதிர்ஷ்டக் கட்டை.
புன்னகையில் ஆரம்பித்த ஷீலா-முகிலன் நட்பு, நாளடைவில் ஆழ்ந்த உண்மையான நட்பாய் மாறியது. முகிலன் அடிக்கடி ஷீலாவின் வீட்டிற்கு வருவான். விவேக்குடன் விளையாடுவான். ஷீலாவுடன் உலக நடப்புகள் முதல் சினிமா வரை விவாதிப்பான்.
சகோதரர்களாய் பழகிய அவ்விருவர் உறவும் இச்சமூகத்தால் கொச்சைபடுத்தப்பட்டது. ஷீலா நடந்து செல்லும்போது சமூகம் ஜாடைமாடையாய் அவர்கள் உறவை கொச்சைபடுத்திய பொழுது அவள் இதயத்தில் அம்பு பாய்ந்தது போல் துடித்தாள். இது பற்றி முகிலனுடன் பேச முடிவு செய்தாள்.
அன்று மாலை. முகிலன் ஷீலாவின் வீட்டிற்கு வந்தான். விவேக்கை கொஞ்சினான். ஷீலா மௌனமாய் இருந்தாள். அவள் கலகலப்பு ஓடி ஒளிந்து கொண்டிருந்தது. முகிலன் தான் கேட்டான். “என்னக்கா! ஒருமாதிரியா இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?
அவ்வளவுதான். ஷீலாவால் தாங்க முடியவில்லை. மடைதிறந்த வெள்ளம்போல் கண்களில் நீர் பெருகியது. முகிலன் திடுக்கிட்டான். குலுங்கி அழும் அவளை தேற்றுவது அறியாது திகைத்தான்.
“அக்கா! என்னன்னு சொல்லுங்க? ஏன் இப்படி அழறீங்க?”
தன்னை அமைதிப்படுத்திக் கொண்ட ஷீலா மெல்லிய குரலில் “தம்பி! ஊர் வாய மூடமுடியுமா? என்னோட இந்த நிலமை இந்த சமூகத்துக்கு வெறும் வாய மெல்ல அவல் கிடைச்சது மாதிரி போச்சி. நம்ம உறவை கொச்சை படுத்திட்டாங்களே! என கூறி மீண்டும் கேவினாள். முகிலன் ஆறுதல் கூறினான்.
“அக்கா! இந்த சமூகத்துக்கு நீங்க பயப்பட வேண்டாம். நம்ம இரண்டு பேரோட மனசிலயும் கள்ளம் கபடமில்லை. அப்புறம் யாருக்கு பயப்படணும்?”
முகிலனின் தாய் ஷீலாவை சந்தித்தாள். அவளுக்கு ஆறுதல் கூறினாள். “அம்மா! ஷீலா! நீ எதுக்கும்மா வருத்தப்படுற? ஊர்ல உள்ளவங்க ஆயிரம் பேசுவாங்க. அதுக்கெல்லாம் நாம பயப்பட முடியுமா? சரி! அதவிடு. முகிலனுக்கு வர்ற வெள்ளிக்கிழமை சாயுங்காலம் பெண்பார்க்க போறோம். அவனுக்குன்னு கூடப்பிறந்தவங்க யாரும் இல்லை. அதனால நீயும் வர்ற. பெண் எம்.ஏ., படிச்சிருக்காளாம்.” என்றார் அறிவில் முதிர்ச்சி பெற்ற பர்வதம் அம்மாள்.
“அம்மா! நீங்க என்ன சொல்றீங்க? இந்த கோலத்தில் நான் எப்படிம்மா மங்கள காரியத்துக்கு வர்றது?” தடுமாறினாள் ஷீலா.
“இதென்னம்மா பெரிய கோலம்? நம்மளா ஏற்படுத்திக்கிட்டது இல்ல. ஆண்டவன் விட்ட வழி. நாம என்ன செய்ய முடியும்? நீ கண்டிப்பா வர்ற” கட்டளையிட்டு விட்டு சென்றுவிட்டாள்.
இவ்உலகத்திலேயே தான் ஒருத்திதான் மகிழ்ச்சியுள்ள ஜீவன் என இன்ப வெள்ளத்தில் மூழ்கினாள். தானே முன்னின்று முகிலனின் அனைத்து திருமண ஏற்பாடுகளையும் விடுமுறை எடுத்துக் கொண்டு செய்து முடித்தாள். திருமணம் இனிதே முடிந்தது.
அன்று மாலை ஷீலா முகிலனிடம் “தம்பி! நீ எனக்கொரு உதவி செய்யணும்.
செய்வியா?”
“என்னக்கா! சொல்லுங்க.”
“என் பையனுக்கு சீக்கரமா ஒரு பெண்ணை பெத்து தரணும்”
முகிலன் மணப்பெண் வித்யா, பர்வதம் அம்மாள், ஷீலா அனைவரும் சிரித்தனர். மகிழ்ச்சி வெள்ளம் ஆறாய் ஓடியது. ஊர் வாயை மூட முடியாத அந்த பாசமலர்களின் முயற்சியால் தற்போது ஆச்சரியத்தில் பிளந்த வாயையும் மூட முடியவில்லை.
-மு.அருண்