பாசம்!

அலுவலக வேலை நிமித்தம், சென்னை சென்றுவிட்டு அன்று காலைதான் திருச்சி திரும்பினேன்.

வீட்டுக்கள் நுழையும்போதே சாருக்குட்டி என் கால்களைக் கட்டிக் கொண்டு “அங்கிள்! நாணுத்தாத்தா சாமி கிட்டப் போயிட்டார் தெரியுமா?'” என கீச்சுக் குரலில் சொன்னதும் அதிர்ச்சியாய் இருந்தது.

என்னால் நம்ப முடியவில்லை. இல்லை ஜீரணிக்க முடியவில்லை.

அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் நான் வந்துவிட்டதை அறிந்த என் தங்கை, “குட்டி சொல்றது உண்மைதான் அண்ணா. அவர் போய்ச் சேர்ந்து இன்றோடு மூணு நாளாகிறது” என்றாள்.

என் மனம் வேதனைப்பட்டது; அழுதது; கனமானது.

நாணுத்தாத்தா எங்கள் தெருவில் ஓர் இரும்பு மனிதர். ஆஜானுபாகுத் தோற்றம். கூர்மையான பார்வை. கணீர் குரல். எண்பதைத் தொட்டுக் கொண்டிருந்தார்.

“இந்த வயதில் இக்காலத்தில் இப்படி ஒரு மனிதரா?”என ஒவ்வொருவரும் மலைத்துப் போகுமளவுக்கு ஆரோக்கியத்துடன் இருந்தவர். ஒரு தலைவலி, காய்ச்சல் என்று படுத்ததில்லை.

லக்கேஜ்களை அப்படியே போட்டுவிட்டு ‘ரமா, நான் போய் துக்கம் விசாரிச்சுட்டு வர்றேன்’ என்றவன் அவள் பதிலுக்குக்கூடக் காத்திராமல் ‘விடுவிடு’வென தெருவில் இறங்கி நாணுத்தாத்தா வீடு நோக்கி விரைந்தேன்.

நாணுத்தாத்தா குடும்பம் மிகப் பெரியது. அவருக்கு ஐந்து பையன்கள். மூன்று பெண்கள். அனைவருமே டெல்லி, மும்பை, கல்கத்தா, பெங்களுர், சென்னை எனப் போய் செட்டில் ஆகியிருந்தனர்.

அவரும் அவர் மனைவியும் மட்டுமே இங்கு தனியாக இருந்தனர். அஞ்சல்துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நாணயம், நேர்மையின் மறுஉருவம். பிள்ளைகள் ஐவரையுமே பாராபட்சமின்றி உயர் படிப்பு படிக்க வைத்தவர். அனைவருமே உயர் பதவியிலிருந்தார்கள்.

பெண்களுக்கு மட்டும் குறை வைத்தவரா என்ன? மூன்று பெண்களையும் மிகப்பெரிய இடத்தில் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

சுயசம்பாத்தியத்தில் கட்டிய அவரது வீட்டில், பென்ஷன் தொகையைக் கொண்டு, எவருடைய தயவையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையை வைராக்கியத்துடன் ஓட்டி வந்தார்.

எங்கள் தெருவிலுள்ளவர்களின் ஒட்டு மொத்த அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்தார். யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் அது நல்லதோ கெட்டதோ நாணுத்தாத்தா முன்வந்து நிற்பார். சுருங்கக் கூறினால், அனைவருக்குமே பக்கபலமாக மிகப்பெரிய அரணாக இருந்தவர்.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை மிகுந்த பிரயாசையுடன் அடங்கியவாறே அவர் வீட்டிற்குள் நுழைந்தேன்.

வீடு கொள்ளமால் பிள்ளைகள், பெண்கள், பேரக்குழந்தைகள், இதர உறவினர்கள் என நிறைந்திருந்தனர்.

டி.வி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் விளையாட, பெண்களும் அங்கேயே மற்றவர்களுடன் சிரித்துப் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் சிலர் ‘ரெய்டில்’ ஈடுபட்டிருந்தனர். நாணுத்தாத்தாவின் பீரோவைத் திறந்து பாங்க் பாஸ்புக், இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் அவ்வீட்டின் பத்திரம் போன்றவைகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

நாணுத்தாத்தாவின் மனைவி மட்டும் ஹாலை ஒட்டி இருந்த அறை ஒன்றில் கால்களை மடக்கிக் கொண்டு சுவர் பக்கமாக கட்டிலில் முடங்கிக் கிடந்தார்.

சமையல் மற்றும் இதர வேலைகளுக்கென ஆட்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். எவர் முகத்திலும் எந்தவித துக்கமோ, வருத்தமோ தென்படவில்லை. ஓர் கல்யாண வீட்டின் அமர்க்களங்களே அங்கு காணப்பட்டன.

நாணுத்தாத்தாவின் மூத்த பையன் என்னைக் கண்டதும் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து வந்தான். அவனது கைகளைப் பற்றியவாறே துக்கம் மேலிட, “அப்பா நல்லாத்தானே இருந்தார்? என்ன ஆச்சு திடீர்னு?” என வினவினேன்.

“அவருக்கென்ன, ஜாம் ஜாம்னு போய் சேர்ந்துட்டார்” என்றான். இன்னொரு பையன் வந்தான். கூடவே அவரது பெண்கள் இருவரும் வந்தனர்.

“வயசாயிடுச்சு. படுத்த படுக்கையாய் கிடந்து சீ-படாமல் யாருக்கும் எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காமல் போய்விட்டார். அந்த வகையில் எங்க எல்லாருக்கும் பரம திருப்தி. நிம்மதி.

இருக்கிற வீடு, பாத்திரம், பண்டங்கள், பாங்க் பாலன்ஸ் எல்லாத்தையும் யார் யாருக்கு என்னென்ன, எவ்வளவுங்கிறதையும் உயில் எழுதி வச்சுட்டுப் போயிருந்தார்னா நல்லா இருந்திருக்கும்” என்றனர் கோரசாக.

காபி கொண்டு வந்து கொடுத்தார்கள். மறுத்த என்னிடம் ‘பரவாயில்லை. “கல்யாணச் சாவு தானே?” என்றார்கள்.

‘அடப்பாவிகளா! அவர் என்றைக்கு உங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்? உங்க கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் தானே தீர்த்து வைத்திருக்கிறார்.

ஐந்து பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வாழ்க்கையையும் ஒவ்வொருவருக்கும் பலவிதமாக அமைத்துக் கொடுப்பதென்பது அவ்வளவு சுலபமா என்ன? பக்க பலமாக, பாதுகாப்பாக இருந்தவரின் இழப்பு இவர்களைக் கொஞ்சங்கூட பாதிக்கவில்லையா?’ உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது.

“எப்போதும் போல் காலை அஞ்சு மணிக்கு எழுந்து வாக்கிங் போயிட்டுத் திரும்பியவர் மார் வலிக்கிற மாதிரி இருக்குன்னு அம்மா கிட்டச் சொல்லியிருக்கிறார்.

அம்மா சுதாரிச்சு டாக்டரைக் கூப்பிடறதுக்குள்ளே பிராணன் போயிடுத்தாம். அப்புறம் என்ன? மெஸேஜ் கிடைச்சு எல்லாருமா ஃபிளைட் பிடிச்சு நைட்டுக்குள் வந்துட்டோம்.

கடைசித் தம்பி மட்டும் மறுநாள் மதியம்தான் வந்து சேர்ந்தான். ‘மளமள’ன்னு காரியங்களை முடிச்சுட்டோம். எவ்வளவு நேரம் போட்டு வைக்க முடியும்?”

பெரிய பையன் நடந்து முடிந்தவைகளை விவரித்துக் கொண்டிருந்தான் என்னிடம்.

“ஆம்புலன்சுலதான் கொண்டு போனோம். இப்பதான் எலக்ட்ரிக் கிரிமேஷன் வசதி இருக்கே. ரெண்டே நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு அஸ்தியக் கையில கொடுத்துட்டாங்க”

சாப்பிட்ட எச்சில் இலையை வெளியே குப்பைத் தொட்டியில் வீசி எறிவது போல் ரொம்ப சாதாரணமாக, எவ்வித சலனமின்றி சொன்னான்.

பணம், காசு இருக்கிற மமதையில் கொஞ்சம்கூட உடம்பு நோகாமல், முறைப்படி சம்பிரதாயப்படி எந்த சடங்கையும் செய்யாமல் யந்திரத்தனமாய் செயல்பட்டிருக்கிறார்கள். “கஷ்டம் கொடுக்காமல் போய்ச் சேர்ந்தார்!” என ஆத்ம திருப்தி வேறு.

அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சடங்குகளை எங்கு எப்படி நடத்துவதென்பதை இன்னும் தீர்மானிக்க வில்லையாம். அவர்களது பேச்சு எதையும் மேலும் கேட்கப் பிடிக்கவில்லை.

துளிக்கூட வருத்தமின்றி, ஆத்மார்த்தமாக எதையும் செய்யாமல், ஆதாயம் தேடி கடமையே என்று செயல்படும் இவர்களை நாணுத்தாத்தாவின் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள மனம் சங்கடப்பட்டது.

பூஜையறையில் சாமி படங்களுடன் நாணுத்தாத்தாவின் படத்தையும் மாட்டி மாலை அணுவித்து தீபம் ஏற்றி வைத்திருந்தார்கள்.

அவரது ஆன்மா சாந்தி அடையும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவரைப் போன்று எத்தனையோ ஆன்மாக்கள் சாந்தி அடைய முடியாமல் இன்று அந்தரத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன.

கண்கள் கலங்க, மவுனமாக அவர் படத்தின் முன்பு நின்று கை கூப்பி கண்ணீர் அஞ்சலி செலுத்திய என்னை எல்லாரும் விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருக்க, சொல்லாமல் கொள்ளமால் அங்கிருந்து வெளியேறினேன்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998