பாசிப்பருப்பு சிப்ஸ் என்பது அருமையான நொறுக்குத் தீனி ஆகும். இதனை வீட்டில் சுவையாகவும் எளிய வகையிலும் செய்யலாம். இனி சுவையான பாசிப்பருப்பு சிப்ஸ் செய்யும்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – 100 கிராம் (1 பங்கு)
கோதுமை மாவு – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
ஓமம் – 3 ஸ்பூன்
மிளகு – 5 ஸ்பூன்
சீரகம் – 5 ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப் பருப்பினை அலசி 1/2 மணி நேரம் தண்ணீரில் முழுவதும் மூழ்குமாறு ஊற வைக்கவும்.
மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றாக சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
1/2 மணி நேரம் கழித்து, தண்ணீரை முழுவதுமாக வடித்து, மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த பாசிப் பருப்பு மாவினைச் சேர்க்கவும்.
அதனுடன் கோதுமை மாவு, தேவையான உப்பு, ஓமம், பொடித்த மிளகு, சீரகப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து, கோதுமை மாவினை பயன்படுத்தி சப்பாத்தியாக விரித்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை சதுரம் அல்லது முக்கோணமாக தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளலாம்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெட்டிய துண்டுகளைப் போட்டு, சிறிது சிறிதாகச் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
பொரித்த துண்டுகளின் மேல், தேவையான அளவு மிளகு சீரகப் பொடியைச் சேர்த்து குலுக்கிக் கொள்ளவும்.
சுவையான பாசிப்பருப்பு சிப்ஸ் தயார்.
இதனை காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து, ஒருமாதம் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகு சீரகப் பொடிக்குப் பதில், மிளகாய் வற்றல் பொடியை சிப்ஸின் மேலே தூவலாம்.
விருப்பமுள்ளவர்கள் கரம் மசால் பொடியைச் சேர்த்து, மாவினைப் பிசைந்து சிப்ஸ் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சாட் மசாலா பொடியை சிப்ஸின் மேல் தூவலாம்.