பாசி பயறு தோசை என்பது பயறு வகையினை கொண்டு செய்யக் கூடிய தோசை வகையினுள் ஒன்று. இத்தோசை சுவையுடன் சத்தினையும் வழங்கக் கூடியது.
வளரும் குழந்தைகளுக்கு இத்தோசையினை கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
இனி சுவையான பாசி பயறு தோசை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசி பயறு – 400 கிராம் (¼ படி)
இட்லி அரிசி – 100 கிராம் (1/16 படி)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)
கொத்த மல்லி இலை – 4 கொத்துக்கள்
புதினா இலை – 4 கொத்துக்கள்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பாசி பயறு, இட்லி அரிசி ஆகியவற்றை சுமார் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
கொத்த மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
12 மணி நேரம் ஊறிய பின் பாசி பயறு, இட்லி அரிசி ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு ஆட்டவும்.
பாதி ஆட்டிய நிலையில் துண்டுகளாக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக வெட்டிய கொத்த மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சேர்த்து ஆட்டவும்.
மாவினை தோண்டும் இரு நிமிடங்களுக்கு முன்பு தேவையான உப்பினைச் சேர்த்து ஆட்டவும்.
தோசை பதத்திற்கு மாவினை ஆட்டித் தோண்டவும்.
இம்மாவினை அரை மணி நேரம் புளிக்க விடவும்.
பின் தோசைக் கல்லில் மாவினை ஊற்றி மெல்லிய தோசையாக வார்க்கவும்.
சுவையான பாசி பயறு தோசை தயார்.
இதனுடன் சாம்பார், தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, இட்லிப் பொடி சேர்த்து உண்ணலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பெரிய வெங்காயத்தை சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். மாவினை தோசையாக ஊற்றிய பின் மாவின் மீது சிறிதளவு சீரகத்தையும, நறுக்கிய வெங்காயத் துண்டுகளையும் தூவி தோசை வார்க்கலாம்.
கொத்த மல்லி, புதினா இலை இரண்டும் ஒரு கைபிடி அளவு எடுத்து மேற்கூறிய பாசி பயறு அளவிற்கு அரைக்கவும்.
–ஜான்சிராணி வேலாயுதம்
மறுமொழி இடவும்