“சினேகா! நீ மூணு மாசமா வீட்டு வாடகை கொடுக்கல. நீ வாடகை கொடுக்க முடியாதுனா வீட்டை காலி பண்ணு!” வீட்டு உரிமையாளர் சினேகாவிடம் சொன்னபோது அவள் முகம் அஷ்ட கோணலாகியது.
“நான் வாடகை கொடுக்க முடியாது. வீட்டையும் காலி பண்ண முடியாது. என்ன செய்வீங்க? நான் நினைச்சா நீங்க என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்றீங்கன்னு கூச்சல் போட்டு, இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறவங்களை திரட்டி, பெரிய பிரச்சனை பண்ணுவேன். உங்களால என்ன பண்ண முடியும்?” சினேகா கேட்ட கேள்வியில் ஆடிப்போனார் வீட்டு உரிமையாளர்.
“ஏம்மா! நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் என்னை இப்படி பாடாய்ப்படுத்துற?” அனுதாபமாகக் கேட்டார் அவர்.
“நீங்க எனக்கு எந்த பாவமும் செய்யல. ஆனா, நான் இந்த வீட்டுக்கு குடியிருக்க வந்த பொழுது, நீங்க ஒரு ஏழை அப்பள வியாபாரிகிட்ட 1500 ரூபாய் அப்பள காசு கொடுக்காம, வெறும் 500 ரூபாய் மட்டும் கொடுத்து, அவரை ஏமாத்தி அனுப்புனீங்க. ஏழைங்க வயித்தெரிச்சல் சும்மா விடுமா? அதனால தான் இதை பார்த்து வெச்சிக்கிட்டு, உங்களை ஏமாத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்” சினேகா பதிலளித்தாள்.
“என்னை மன்னிச்சிடுமா! நான் என் தப்பை உணர்ந்துட்டேன். முதல்ல அந்த அப்பள வியாபாரியோட மிச்சம் 1000 ரூபாய் காசு அடைச்சிட்டு, அப்பறம் உன்கிட்ட வீட்டு வாடகை பொறுமையா வாங்குறேன்!” சொல்லி விட்டு நடந்தார் வீட்டு உரிமையாளர்.
அவர் திருந்தியது ஆறுதலாக இருந்தது சினேகாவிற்கு.
எம்.மனோஜ் குமார்