பாடையில் ஒரு நாள்!

கும்பகோணம் எல்லைக்குள் நுழைந்தது அந்த வண்டி. வண்டியை விட்டு இறங்கிய சொந்த பந்தங்கள் அவர்களின் வேலையைத் தொடங்கினார்கள். தென்னை மட்டை ஓலையில் பாடையை பின்னத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்து செல்லாண்டியை குளிப்பாட்டி அந்த பாடையில் படுக்க வைத்தார்கள். நாடிக்கட்டு போடப்பட்டு நெற்றியில் காசு வைக்கப்பட்டது.

கைவிரல்களும் கால் கட்டைவிரல்களும் கட்டப்பட்டன. கண்களில் சந்தனம் வைக்கப்பட்டது. கழுத்தில் ரோசாப்பூ மாலை போட்டு படுக்க வைத்திருந்தார்கள்.

வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒப்பாரி வைத்து அழுது புரண்டு கொண்டிருந்தனர். அவரின் குழந்தைகள் தன்னுடைய தகப்பனே இந்த கோலத்தில் பார்க்க முடியாமல் அழுது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள்.

செல்லாண்டியின் மகன் கையில் கலையத்தை வைத்துக் கொண்டு பாடையின் முன்னால் நடந்து வந்து கொண்டிருந்தான். தாரை, தப்பட்டை முழக்கத்துடன் வெடிச் சத்தம் ஒலிக்க அந்தக் கோயிலை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.

மூன்றாவது முறையாக கோயிலைச் சுற்றி வந்தும் கோவிலின் முன்பு பாடை கீழே இறக்கி வைக்கப்பட்டது.

கோயில் பூசாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் நீரினை எடுத்து வந்து செல்லாண்டியின் முகத்தில் தெளித்தார்.

பிறகு கைகளில் உள்ள கட்டுகளும் கால்களில் உள்ள கட்டுகளும் அவிழ்க்கப்பட்டன.

நாடிக்கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களில் உள்ள சந்தனமும் நெற்றியில் இருந்த காசும் எடுக்கப்பட்டதும் கை கால்களை உதறிவிட்டு மெல்ல எழுந்தார் செல்லாண்டி. அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.

போன வருடம் காட்டு வேலை செய்யும் பொழுது நல்ல பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடிய நிலையில் படுத்த படுக்கையாக படுத்திருந்தார். மருத்துவர்களால் கைவிடப்பட்டு கெடு போடப்பட்டு இருந்தது.

அந்த நாளில் “என்னை நல்லபடியாக குணமாக்கினால் உனக்கு அடுத்த வருடம் பாடை கட்டி பாடையில் ஒரு நாள் படுத்து பிணமாக பாவித்து என்னுடைய நேர்த்திக்கடனை செலுத்துவேன்! தாயே!” என்று பாடை கட்டி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் போட்டிருந்தார்.

சில நாட்களிலேயே அவர் உடல்நிலை நன்றாக தேறியது. இந்த வருடம் பங்குனி பொங்கல் அன்று அவருடைய நேர்த்தி கடனை குடும்பத்தோடு வந்து செலுத்தினார். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நேர்த்திக் கடனை நல்லபடியாக செலுத்தியதால் மகிழ்ச்சி.

அந்த ஒருநாள் மட்டும் தன்னுடைய தகப்பனை பாடையில் இந்த கோலத்தில் பார்த்த பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் மட்டும்தான் தெரியும் மரணம் கொடியது என்று.

போன வருடம் இல்லாமல் போயிருந்தால்! இந்த வருடம் பிள்ளைகளுக்கு தகப்பனாகவும், மனைவிக்கு கணவனாகவும், இருந்திருக்க முடியாது!

மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி என்றுமே பெரியது.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.