பாட்காஸ்ட் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்.
ஒலி ஊடகங்கள்
காட்சி ஊடகங்கள் வலிமை வாய்ந்தவைதாம். அதற்கு சற்றும் குறைவில்லாத வலிமை பெற்றவை ஒலி ஊடகங்கள்.
இரண்டு மூன்று தலைமுறையினர் அகில இந்திய வானொலி, இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தான் வளர்ந்தனர். பல விஷயங்களைக் கற்றுக் கொண்டனர்.
2000 ஆண்டில் தனியார் நிறுவனங்கள், பண்பலை வானொலி நடத்த அரசாங்கம் அனுமதி அளித்த பின்னர், பல பண்பலை அலைவரிசைகள் நேயர்களைத் திணறடித்தன.
அவை காட்சி ஊடகங்களைப் போலவே பொழுதுபோக்கு, கேளிக்கை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் பண்பலை ஒலிபரப்புகள், பேரிடர் தருணங்களில் மக்களுக்கு பெரிதும் உறுதுணை புரிகின்றன.
தனியார் நிறுவனங்கள், பண்பலை வானொலியை நடத்த அரசு அனுமதி அளித்ததைப் போலவே, ஒரு குறிப்பிட்ட சுற்று வட்ட பரப்புக்குள் கல்வி நிறுவனங்கள், சமூகத்தினர், கம்யுனிட்டி ரேடியோவை – சமுதாய வானொலியை நடத்திட அனுமதி தந்தது.
சமுதாய வானொலியை அமைப்பதற்கான கட்டமைப்பு செலவுகளால் மக்களிடையே பரவலாக காணப்படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது குறித்து விஷயம் அறிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
மேலும் , அமெச்சூர் ரேடியாவாக தொழில்நுட்பம் அறிந்த வசதி படைத்தவர்கள் அமைத்துக் கொள்ள ‘ஹம் ரேடியோ‘ என்ற ஊடகம் உள்ளது .
இன்டர்நெட்இணைப்பு இல்லாமல், போன் இல்லாமல் , நீண்ட தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள ஹம் ரேடியோ உதவி புரிகிறது. இது ஒரு தனிநபர் ஊடகம்.
இதனை அமைத்துக் கொள்ள உரிமம் பெற , Amateur Station Operator ‘s Certificate Examination என்ற தேர்வு எழுத வேண்டும். இதனை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் Wireless planning and co-ordination wing நடத்துகிறது.
தற்காலத்தில் வெகுஜனங்களுக்கு தெரிந்தவை – அகில இந்திய வானொலியின் ஏஎம், எப்எம் , தனியார் எப்எம் மற்றும் இணையவழி வானொலி தளங்கள். இவை அனைத்தும் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் செயலி வடிவங்களில கிடைக்கின்றன.
மியூசிக் -க்கு என்று பிரத்யேக செயலிகள் கொட்டிக் கிடக்கின்றன. இவை வெப் வெர்ஷனிலும் கிடைக்கின்றன.
அகில இந்திய வானொலியின் அனைத்து மாநில ஏஎம், எப்எம் அலைவரிசைகள், பிரசார் பாரதியின் Newsonair செயலியில் உள்ளன. இந்த செயலியில் டெக்ஸ்ட் வடிவிலும் செய்திகளை வாசிக்க முடியும்.
இவ்வாறாக, பலப்பல படிநிலைகளில் வளர்ந்துள்ள ஒலி ஊடகத்தின் அடுத்த பரிமாணமாக உலா வருபவை – ஒலி நூல்கள் என்னும் ஆடியோ புக்ஸ். முன்பு மக்கள் வாசித்து மகிழ்ந்த தொடர்கதைகள் இப்பொழுது ஒலி நூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
லேனா தமிழ்வாணன் அவர்கள், தமது ஒரு பக்க கட்டுரைகள் ஒலி நூல்களாக உருவாக்கப்பட்டு நேயர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
ஆங்கிலம் , தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி புனைவு மற்றும் புனைவு அல்லாத புத்தகங்களை ( fiction & non- fiction ) ஒலி நூல்களாக வழங்கிடும் பல்வேறு மொபைல் செயலிகளும் இணையதளங்களும் உள்ளன.
இது மட்டுமா? நீங்கள் கூகுள் ஃபீடில் செய்திகளைப் பார்க்கும் போது சில நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள், குறிப்பிட்ட செய்தியை வாசிக்க நேரம் இல்லாதவர்களுக்காக , listen option என்ற ஒலி வடிவில் கேட்கும் வசதியைத் தருகின்றனர்.
பாட்காஸ்ட் என்றால் என்ன?
சரி இப்போது ‘பாட்காஸ்ட்’ என்றால் என்ன என்று பார்ப்போம். ‘பாட்காஸ்ட்’ என்பது இணைய உலகம் நமக்கு அளிக்கும் ஓர் ஒலி ஊடகம். நமக்கு என்று உள்ள வானொலி என்று கூட சொல்லலாம்.
முன்பெல்லாம் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி விட்டு வெளியிடப்பட்டுள்ளதா என்று பத்திரிகையை வாங்கிப் பார்த்து ஏமாந்து போகிறவர்கள் உண்டு.
நாம் எண்ணியதை எழுதி வெளியிட blog post, social media post வழிவகை செய்துள்ளதைப் போலவே பிரபல வானொலி , ஒலி ஊடகங்களில் வாய்ப்புக்காக காத்திராமல் முகம் காட்ட விரும்பாதவர்கள், தங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்த, பொது அறிவுத் தகவல்களைப் பிறருடன் பரிமாறிக் கொள்ள பாட்காஸ்ட் உறுதுணை புரிகிறது.
குறிப்பிட்ட தொழில் சார்ந்த அம்சங்களை பிறருக்கு எளிய முறையில்கற்றுத் தரவும் ‘பாட்காஸ்ட்’ சிறந்த களம் என்று கூறலாம் .
சென்னைப் பல்கலைக் கழக இதழியல் பேராசிரியர் பாட்காஸ்ட் குறித்து கூறுவதை இங்கு பார்ப்போம்
“வானொலி காலத்திற்கேற்ப அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே வந்துள்ளது. முன்பு வானொலி பெட்டி இருந்தால்தான் ஒலிபரப்பைக் கேட்க முடியும்.
தற்போது இணையத்தில் கூகுள், ஸ்பாடிபை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பாட்காஸ்ட் பிரபலமாகி உள்ளது.
தமிழில் ஆங்கர் என்னும் தளத்துக்குள் சென்று அதன்வழிமுறைகளைப் பின்பற்றி துவங்கலாம். ஆவணம் என்கிற யூட்யூப் தளத்தில் இது குறித்து நான் விவரித்துள்ளேன்.” என்கிறார் பேராசிரியர்.
பேஸ்புக் வந்த உடனே நான் அதில் இணைந்தேன். ட்விட்டர், இன்ஸ்டா வந்த உடனே அதில் இணைந்தேன் வாட்ஸ் அப் வந்ததும் அதில் இணைந்தேன் என்றெல்லாம் கூறுபவர்கள், யூட்யூப்-ல் கொடி கட்டிப் பறக்கிறவர்கள், இன்னமும் பாட்காஸ்ட் பக்கம் வரவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையும் அதுதான்.
தமிழில் பாட்காஸ்ட் ஒலிபரப்புகளும் அதனால் பிரபலம் அடைந்தவர்களும் நாம் அவதானித்தவரை மிகவும் குறைவு என்றே கூற வேண்டும்.
பாட்காஸ்ட் ஊடகம் அதிக அளவில் வரவேற்பைப் பெறும் காலம் கனிந்து வந்தவுடன், நிறைய பிரபலங்களும் இளைஞர்களும் எழுத்தாளர்களும் இந்த ஒலி ஊடகத்தின் பக்கம் வந்து சேர்வார்கள்.
குரல்வளம் இல்லை என்று கவலை கொள்ள தேவை இல்லை. Content is King என்று இப்போது கூறி வருகிறார்களே அது போல உள்ளடக்கம் என்பதுதான் முக்கியம்.
பாட்காஸ்ட் ல் நீங்கள் தனி நபராக தான் பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதில்லை. ‘கலகல’வென்று பேசுபவர்கள் உடன் இணைந்து யாரையும் புண்படுத்தாத வகையில், லூஸ் டாக் இல்லாமல் நீங்கள் உரையாடல் ஷோ நடத்தலாம். வல்லுநர்களைப் பேச வைக்கலாம்.
Comedy , Storytelling, Show, Motivational என்பதாக எந்த ஒரு கருப்பொருளையும் தேர்ந்தெடுத்து நீங்கள் உங்கள் பாட்காஸ்ட்டை நடத்தலாம். உங்களுக்கு பின்தொடர்பவர்கள் (followers ) கிடைத்தவுடன் அது கம்யுனிட்டியைச் சென்றடையும் .
தட்டச்சு செய்து வலைதளத்தில் ஏற்றி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாமே எதற்கு மாங்கு மாங்கு என்று மாடுலேஷன் பார்த்து பேசி மெனக்கெட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த ஒப்பீட்டைக் கவனியுங்கள் –
பிளாக் போஸ்ட்டில் குறைந்தபட்சம் நீங்கள் எழுதக் கூடியவை – சராசரியாக 980 சொற்கள். பாட்காஸ்ட்டைப் பார்த்தால் அதில் சராசரியாக 5000 சொற்களைத் தன்னகத்தே கொண்டதாக அரைமணி நேர பாட்காஸ்ட் உரை அமைந்திருக்கும்.
ஒருவர் எழுதியதை வாசிப்பதைக் காட்டிலும் நேயர்கள் (listeners) செவி மடுத்துக் கேட்கும் போது அது அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சிப் பிணைப்பு (emotional engagement ) என்பது அலாதியானது.
பாட்காஸ்ட்டை ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டே கேட்கலாம். ஜாகிங் போகும் போது கேட்கலாம்.
நேரமே இல்லாமல் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழல்பவர்கள், நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் போது கேட்கலாம். ஆனால் வண்டி ஓட்டும் பணியில் கவனம் சிதறாமல் இல்லாமல் பாரத்துக் கொள்வதுதான் சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் நல்லது.
ஆனால் பலரும் எப்எம் அல்லது மியுசிக் ஓட விட்டுக் கொண்டு செல்வதால் அதற்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான பாட்காஸ்ட்களை ஒலிக்கச் செய்து கேட்கலாம்.
பாட்காஸ்டின் சிறப்பம்சம் – எளிமைத் தன்மை. இன்று அதற்கு வருங்காலம் இல்லாமல் இருப்பதாக தோன்றினாலும் அதற்கு கண்டிப்பாக ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
பாட்காஸ்ட் நடத்துவது எப்படி என்பதை விளக்கும் வீடியோக்கள் உள்ளன. வீடியோவில் உரையாற்றுவது போல், பாட்காஸ்ட் உரைக்கு பின்னணி பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.
உங்களை யாரும் தொந்தரவு செய்யாத அறையில் அமர்ந்து கொண்டு அமைதியான சூழலில் உங்கள் ஸ்மார்ட் போனில் வாய்ஸ் ரிகார்ட் செய்து பதிவேற்றம் செய்யலாம்..
வாய்ப்பு வசதி உள்ளவர்களாக இருந்தால் Podcast recording software பற்றி தேடிப் படித்து அதனை வாங்கிப் பயன்படுத்தி தங்கள் பாட்காஸ்ட்டில் ஜமாய்க்கலாம். தங்களிடம் இசை வசதி உள்ளவர்கள் , இசை ஞானம் உள்ளவர்கள் , அதில் கை தேர்ந்தவர்கள் , தங்கள் உரைகளில் மியுசிக் எபெக்ட்ஸ் சேர்த்து மெருகூட்டலாம்.
ட்விட்டர் ஸ்பேஸ் , கிளப் ஹவுஸ்-ல் உரையாடுபவர்கள், தங்கள் பாட்காஸ்ட் பிரபலமடைந்து விட்டால் அதில் கலந்து கொண்டு பேசுவார்கள். எனக்கென்று உதவுபவர்கள் யாருமில்லை கை கோர்க்க யாரும் இல்லை என்று நினைப்பவர்கள், தனியொருவனின் ஷோ ஆகவே தங்கள் பாட்காஸ்ட்டை நடத்தலாம்.
பாட்காஸ்ட் நடத்துவது இருக்கட்டும் பாட்காஸ்ட் எப்படி இருக்கிறது என்று ஆராய அதனை செவி மடுத்துப் பார்க்க என்ன செய்ய வேண்டும் என்கிற வாசகர்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது.
Anchor, Spotify , Airtel Wynk Music, Vi app, Amazon music, Jio Saavan உள்ளிட்ட தளங்களில் பல்வேறு சப்ஜெக்ட்டுகளில் பாட்காஸ்ட் ஒலிபரப்புகள் உள்ளன .
என்ன நீங்களும் பாட்காஸ்ட் பற்றி தேடிப் பார்க்கத் தொடங்கி விட்டீர்களா?
எஸ்.மதுரகவி
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com