பாதயாத்திரை என்பது இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து காலில் செருப்பு அணியாமல் நடந்தே தங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் முறையாகும்.
யாத்திரை என்ற சொல்லுக்கு திருத்தலப் பயணம் என்றும், பாத யாத்திரை என்பது நடந்தே திருத்தலப் பயணம் மேற்கொள்ளுதல் என்றும் ஆன்மீகத்தில் விளக்கம் தரப்படுகிறது.
கோவில் திருவிழாக்கள், தைப்பூசம், மாசி மகம் உள்ளிட்ட பண்டிகை தினங்கள் ஆகியவற்றின்போது பாத யாத்திரையானது மேற்கொள்ளப்படுகிறது.
பழனி, திருச்செந்தூர், சபரிமலை உள்ளிட்ட திருத்தலங்களுக்கு மக்கள் பாத யாத்திரை செல்கின்றனர். குளிர், வெயில், பனி என எல்லா காலநிலையிலும் விரதமுறையைப் பின்பற்றி கரடுமுரடான பாதையில் வெறும் காலில் நடந்து மன உறுயோடு இறைவனை வேண்டி பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்கின்றனர்.
இந்நிகழ்வில் பெரும்பாலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என கூட்டம் கூட்டமாக மக்கள் நடந்து செல்கின்றனர்.
பாதயாத்திரையின் போது தெய்வங்களுக்கு ஏற்ப வேண்டுதல்களை நிறைவேற்ற இருமுடி, காவடி உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு நடந்து சென்று வழிபாடு செய்கின்றனர்.
தெய்வங்கள் குறித்த பாடல்களைப் பாடியும் ஆடியும் கோசமிட்டும் உற்சாக மனதோடு இறை நினைப்பில் பயணம் செய்கின்றனர்.
பாதயாத்திரை மேற்கொண்டு வழிபாடு செய்வதால் குழந்தைப்பேறு, புதிய வேலை, பதவி உயர்வு, தொழில் வெற்றி ஆகியவை கிடைப்பதாகவும், நோய்கள், பிணிகள், தரித்திரம், கடன் தொல்லை போன்றவற்றை நீங்குவதாகவும் கருதப்படுகிறது.
சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில் பாத யாத்திரை சென்று முருகனை வழிபடும் முறை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதிலிருந்து பாத யாத்திரை செல்லும் முறையானது சங்க காலம் முதலே வழக்கில் இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.
பாதயாத்திரை செல்லும் திருத்தலங்கள்
பொதுவாக திருச்செந்தூர், பழனி, திருப்பதி, சபரிமலை, இருக்கன்குடி, குலதெய்வக் கோவில்கள் போன்ற திருத்தலங்களுக்கு பாத யாத்திரையானது பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
பாதயாத்திரைக்கான விரத முறை
பாதயாத்திரை செல்வோர் 48 நாட்கள், ஒரு மாதம், ஒரு வாரம் என பல்வேறு காலமுறைகளில் விரதத்தினைக் கடைப்பிடிக்கின்றனர்.
விரத நாட்களில் காலை, மாலை வேளைகளில் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு வீடு மற்றும் ஆலயங்களில் வழிபாடு நடத்துகின்றனர்.
ஒரு சிலர் துளசியினாலான அல்லது ருத்திராட்சத்திலான மாலைகளை அணிந்து விரதமுறையினை கடைப்பிடிக்கின்றனர்.
விரத நாட்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து ஒன்று அல்லது இரண்டு வேளைகள் மட்டும் உணவினை உட்கொள்கின்றனர்.
இந்நாட்களில் தரையில் படுத்து உறங்கியும், வெறுங்காலில் நடந்தும் விரதமுறையை பின்பற்றுகின்றனர்.
மேலும் இந்நாட்களில் பிரம்மச்சார்யத்தோடு புகை பிடிக்காமை, மது அருந்தாமை ஆகியவற்றையும் கடைப்பிடிக்கப்பிடிக்கின்றனர்.
விரத நாட்களில் பாத யாத்திரை செல்வோர் மஞ்சள், பச்சை, காவி, சிவப்பு, கறுப்பு, ஊதா நிறங்களில் ஆடைகளை அணிகின்றனர்.
பாதயாத்திரை வழிபாட்டின் வேண்டுதல்கள்
பாத யாத்திரை வழிபாட்டின்போது மக்கள் நல்ல விளைசல், வாழ்வின் வளம், நிலபுலன்கள், மழைவளம், உடல்நலம், மனஅமைதி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, நல்ல கல்வி, திருமணப்பாக்கியம், தொழில் விருத்தி, குழந்தைப் பாக்கியம், வழக்குகளில் வெற்றி, முக்தி ஆகியவை கிடைக்க வேண்டுகின்றனர்.
நோய்கள், பிணிகள், தரித்திரம், கடன் தொல்லை, வேதனை ஆகியவற்றை நீக்க வழிபாடு செய்கின்றனர்.
பாதயாத்திரையின் நன்மைகள்
பாதயாத்திரையினால் உடல் மற்றும் உள்ளம் புத்துணர்ச்சி அடைகிறது.
ஆடிப்பாடி கோசமிட்டுக் கொண்டு செல்வதால் மனஅழுத்தம் குறைந்து உற்சாக மனநிலை உண்டாகிறது.
விரதமுறையை பின்பற்றவதால் தனிமனித நல்லொழுக்கம் வளருகிறது. மேலும் மனக்கட்டுப்பாடு வளருவதற்கும் இது தூண்டுகோலாக அமைகிறது.
கூட்டம் கூட்டமாக பாத யாத்திரை செல்வதால் குழுமனப்பான்மை வளருவதோடு, ஒற்றுமையுடன் கூடிய சமூக நல வாழ்க்கைக்கும் வழிவகுக்கிறது.
பாத யாத்திரையானது மனதுக்கு உறுதியையும், உடலுக்கு வலிமையும் கொடுக்கிறது.
பாத யாத்திரையானது மக்களிடையே ஏழை, பணக்காரன், அறிவாளி, முட்டாள் உள்ளிட்ட வேறுபாடுகள் மறந்து அனைவரும் சமம் என்ற எண்ணத்தினை ஏற்படுத்துவதோடு ஒற்றுமையையும் உண்டாக்குகிறது.
அன்னதானம், நன்கொடை ஆகியவற்றின் சிறப்பினை பாத யாத்திரை செல்லும் மக்கள் அறிகின்றனர்.
பாதயாத்திரையின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
பாத யாத்திரையில் சாலைகளில் செல்லும்போது எதிரே மற்றும் பின்னால் வரும் வாகனங்களைக் கருத்தில் கொண்டு கவனமாக நடந்து செல்ல வேண்டும்.
சாலைகளின் ஓரத்தில் நடந்து செல்வதால் விபத்துக்கள் நேரா வண்ணம் நம்மைப் பாதுகாக்கலாம்.
இரவு நேரப் பயணங்களில் ஒளிரும் பட்டைகளை கைகளிலோ அல்லது உடலிலோ ஒட்டிக் கொண்டு பயணிப்பதால் எதிரே வருபவர்களுக்கு நம்மை அடையாளப்படுத்தி விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
நாமும் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ள மற்றும் உடல் புத்துணர்ச்சியுடன் இறையருளையும் பெறுவோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!