பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் பத்தாவது பாடல் ஆகும்.

உமையொரு பாகமாக விளங்கும் இறைவரான சிவபெருமான் மீது,  தென்பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகரால்  திருவெம்பாவைப் பாடல் பாடப்பட்டது.

மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை கிபி 9-ம் நூற்றாண்டில் பாடினார். இன்றைக்கும் இப்பாடல்களானது மார்கழியில் இறை வழிபாட்டின் போது பாடப்படடுகிறது.

பாவை நோன்பு நோற்கும் பெண்கள் சிவாலயத்தில் இறை தொண்டு புரியும் பிணாப் பெண்களிடம், இறைவனை பாடி வழிபாடு செய்யும் முறை பற்றி வினா எழுப்பும் வகையில் திருவெம்பாவையின் பத்தாவது பாடல் அமைந்துள்ளது.

“இறைவனின் திருமுடியானது எல்லாவற்றிற்கும் உயர்ந்து உள்ளது; திருவடியானது பாதாளம் ஏழுக்கும் கீழே சென்று எல்லையற்றதாக உள்ளது.

உமையம்மையை ஒருபாகத்தில் கொண்டு மாதொரு பாகனாக விளங்குகின்றான். எவராலும் வரையறுக்க இயலாத புகழினை உடைய இறைவன் தொண்டர்களின் உள்ளத்தில் உறைபவன்.

அவனுடைய ஊர், உறவினர்கள், திருநாமங்கள், பாடி வழிபடும் தன்மையை கூறுவீர்களாக” என்று பிணாப் பெண்களிடம் பாவை நோன்பிருக்கும் பெண்கள் வினவுகின்றனர்.

எல்லையற்றவனாக விளங்கும் இறைவனை அகந்தையில்லாமல் அன்போடு வழிபட, அவன் தோழமையோடு நம் உள்ளத்தில் குடிகொள்வான் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

இனி திருவெம்பாவை பத்தாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் தொண்டருளன்

கோதில் குலத்துஅரன்தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆர்உற்றார்? ஆர்அயலார்?

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்?

விளக்கம்

பாவை நோன்பு நோற்கும் இளம்பெண்கள் சிவாலயத்தில் சிவதொண்டு செய்யும் பிணாப் பெண்களிடம் “பாதாளம் ஏழுக்கும் கீழே, சொல்ல முடியாத எல்லையற்ற நிலையில் இறைவனின் திருவடி மலர்கள் உள்ளன.

மலர்களை நிறையச் சூடிய அவன் திருமுடி, எல்லா உயர்ந்த பொருட்களுக்கும் மேலே உயர்ந்து உள்ளது.

இறைவனார் உமையம்மை ஒருபாகமாகக் கொண்டு உமையொரு பாகனாக விளங்குகிறார். ஆதலால் அவர் ஒரே திருமேனியை உடையவர் அல்லர்.

இறைவனார் மறைகள் எனப்படும் வேதங்களுக்கு முதல்வராக விளங்குகின்றவர். விண்ணலுகத்தாரும், மண்ணுலகத்தாரும் எந்தெந்த முறையில் அளவில் புகழ்ந்தாலும் வரையறுத்துப் புகழ முடியாத உயிர் துணைவர்.

தன்னுடைய அடியர்களுக்கு தோழராகவும், அன்புடைய தொண்டர்களின் உள்ளத்தில் என்றும் அழியாது உறைபவராகவும் திகழ்கிறார்.

சிவாலய திருப்பணியைச் செய்யும் குற்றமில்லாத குலத்தில் தோன்றிய பெண்களே,

சிவபெருமானது ஊர் எது?

அவரருடைய திருப்பெயர்கள்தான் என்ன?

அவருடைய உறவினர்கள் மற்றும் அயலார்கள் யாவர்?

இறைவனாரை பாடும் தன்மை எப்படி என்பதை எங்களுக்கு விளக்குங்கள்.” என்கின்றனர்.

முதலும் முடிவும் ஏதும் இல்லாது எல்லையற்று விளங்கும் இறைவனார், அகந்தையில்லாது தன்னிடம் அன்பு கொண்டவர்களுக்கு தோழனாகி உள்ளத்தில் அழியாது உறைந்து அருள் தருபவராவார் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.