பாம்புத் தண்டால் செய்வது எப்படி?

பாம்புத் தண்டால் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

பெயர் விளக்கம்

நேர்த் தண்டால் செய்கின்ற முறையிலிருந்து பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற அமைப்பில் கைகளையும் கால்களையும் மாற்றி மாற்றி எடுத்துவைத்து முன்புறம் செல்லவும்.

அதே சமயத்தில், கால்களை ஒன்றுக்கிடையில் ஒன்றை நுழைத்துக் கொண்டு வந்து, அதாவது உடலைத் திருப்பியும் நெளித்தும் முன்னோக்கிச் செல்கின்ற முறையில் தண்டால் அமைந்திருப்பதானது, பாம்பு செல்வதைப் போன்று இருப்பதால், இதற்கு பாம்புத் தண்டால் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்.

செய்முறை

முதல் நிலை: நேர்த்தண்டால் செய்கின்ற இரண்டாம் நிலையில் நிற்கவும்.

அதாவது, தரைக்கு இணையாக நேர்க் கோட்டளவில் உடல் இருப்பது போல, உள்ளங்கைகளாலும், முன்பாதங்களாலும் உடல் தாங்கப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை : படுத்திருப்பது போன்ற நிலையிலிருந்தே இந்தத் தண்டால் தொடங்குகிறது.

முதலில் வலது கையை 6 அங்குல தூரம் முன்புறமாக வைத்து முழங்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளவும்.

இதைச் செய்கின்ற சமயத்திலே இடது காலைக் கொண்டு வந்து வலது காலுக்கடியிலே வைத்திட, அதே நேரத்தில் வலது புறமாக முகத்தைத் திருப்பிக் கொள்ளவும்.

பிறகு, கைகளை விறைப்பாக மேலே உயர்த்திக் கொண்டு, இடது கையை 6 அங்குல தூரம் முன்புறமாக வைத்து, அதே சமயத்தில் வலது காலைக்கொண்டு வந்து இடது காலுக்கடியிலே வைத்திட, முகத்தை இடப்புறமாகத் திருப்பிக் கொண்டு முன்னேற வேண்டும்.

குறிப்பு : இடது கையை முன்னே எடுத்து வைக்கும் பொழுது வலது காலை இடது காலுக்கடியிலும், வலது கையை முன்னே எடுத்துவைக்கும் பொழுது இடது காலை வலது காலுக்கு அடியிலும் நுழைத்து வைத்தவாறு முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு பக்கமாக மாற்றிச் மாற்றிச் செய்ய வேண்டும்.
கைகளில் உடலின் முழு எடையும் தேங்கியிருப்பதால், கைகளை எடுக்கும்பொழுதும், வைக்கும்பொழுதும், மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

இல்லையேல், கைகள் மடங்கிப் பிசகிக் கொள்ள, முகம் கவிழ்ந்து கீழே தரையில் மோதிக் கொள்ள நேரிடும். ஆகவே, மிகவும் நிதானத்துடன் இந்தத் தண்டாலைச் செய்யவேண்டும்.

இத்தண்டால் பயிற்சியினால், முதுகுப்புறத் தசைகள், நன்கு வலிமையடைகின்றன. மார்புப் பகுதி மேலும் விரிவடையும் வாய்ப்பும் பெறுகிறது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.