பாயசம் செய்வது எப்படி?

பாயசம்

பாயசம் எல்லா விருந்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் இனிப்பான உணவுப் பொருளாகும். இதன் சுவையானது எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

பாயசம் இறைவழிபாட்டின்போதும் படையலாகப் படைக்கப்படுகிறது. இனி சுவையான பாயசம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 100 கிராம்

வறுத்த சேமியா – 40 கிராம்

பால் – 200 மில்லி லிட்டர்

சர்க்கரை (சீனி) – 400 கிராம்

தண்ணீர் – ஒரு லிட்டர்

ஏலக்காய் – 4 எண்ணம் (பெரியது)

முந்திரிப் பருப்பு – 20 கிராம்

உலர் திராட்சை – 20 கிராம்

செய்முறை

முதலில் பாலினை காய்ச்சி ஆற வைக்கவும். ஏலக்காயை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.

அடிக்கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்தவுடன் அதனுள் ஜவ்வரிசியைப் போடவும்.

 

ஜவ்வரிசியைச் சேர்த்தவுடன்
ஜவ்வரிசியைச் சேர்த்தவுடன்

 

இரு நிமிடங்கள் கழித்து கலவையில் முந்திரிப் பருப்பினையும், உலர் திராட்சையையும் போடவும்.

 

முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்தவுடன்
முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்தவுடன்

 

ஜவ்வரிசி வெள்ளையாக வந்ததும் (விரலில் வைத்து அழுத்தினால் நசுக்குப்படும்.)

 

ஜவ்வரிசி வெந்தவுடன்
ஜவ்வரிசி வெந்தவுடன்

 

சேமியாவை சேர்க்கவும். சேமியா ஓரிரண்டு நிமிடங்களில் வெந்து விடும்.

 

சேமியாவை சேர்க்கும்போது
சேமியாவை சேர்க்கும்போது

 

பின் அதில் சர்க்கரையை சேர்க்கவும்.

 

சீனி கரைந்தவுடன்
சீனி கரைந்தவுடன்

 

சீனி கரைந்தவுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை கலவையில் ஊற்றவும்.  அடுப்பினை அணைத்து விடவும்.

 

பாலினைச் சேர்க்கும்போது
பாலினைச் சேர்க்கும்போது

 

பின் அதனுடன் நசுக்கிய ஏலக்காயைச் சேர்க்கவும்.

 

நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்ததும்
நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்ததும்

 

சுவையான பாயசம் தயார். இதனை அப்படியேவோ, அப்பளம், வடை, சாதத்தடன் சேர்த்தோ உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து பாயசத்தில் இறக்கும் சமயத்தில் சேர்த்து பாயசத்தைச் சேர்த்து தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் சாரைப் பருப்பினைச் சேர்த்தும் பாயசத்தைத் தயார் செய்யலாம்.

பாயசத்தைத் தயார் செய்யும் போது சர்க்கரை கரைந்தவுடன் பாலினைச் சேர்க்க வேண்டும். இல்லை எனில் சர்க்கரை பாகாகி பாயசம் கெட்டியாகிவிடும்.

பாயசத்தில் பாலினைச் சேர்த்தவுடன் அடுப்பினை அணைத்து விடவேண்டும். ஏனென்றால் பால் திரிந்து பாயசத்தின் சுவை மாறிவிடும்.

ஜவ்வரிசியை தண்ணீருடன் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது. எனவே கொதிக்கும் நீரில் ஜவ்வரிசியைச் சேர்த்தவுடன் நன்கு கிளறி விடவும். மேலும் ஜவ்வரிசி வேகும் போதும் அவ்வப்போது கிளறி விடவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.