பாரதி

பாரதி

வானிலவின் கூன்நிமிர்த்தும் பானிலவு ‍ அவன்
வண்டமிழின் தோள்நிமிர்த்தும் மாத்தகவு
தேனிலவின் கறையகற்றும் பால்நிலவு -அவன்
தென்றமிழில் சுவைகூட்டும் தூயமிழ்து

பூனிலவும் புன்மைகளை ஏரெருது -அவன்
புத்தமிழின் வாசலுக்கோர் பொற்றிறவு
ஈணுலையில் பிறந்துவந்த இறைநிலவு -அவன்
ஈன்றதமிழ் ஆண்கருவின் கோனிலவு

சொற்பொறுக்கிச் சுடுநீரில் கொதிக்கவைத்து-அதன்
சுவைகூட்டி விருந்தோம்பும் தமிழரசு
தற்பெருத்துத் தலைகணக்கும் மானிடர்க்கு -அவன்
தலையாய நோயகற்றும் தமிழ்மருந்து

கற்புநிறை மாதரர்க்குக் குலவிளக்கு-அவன்
கனற்கெஞ்சும் தமிழ்மான வெடிகிடங்கு
நற்கவிதைச் சுடரொளிக்கு நெய்சொரிந்து -அவன்
நவின்றதுவே நந்தமிழின் மெய்விருந்து

கனல்நிழலின் கருப்பெடுத்து மீசைவைத்து-அதைக்
கருக்காமல் மொழிசெய்த அருட்சுரப்பு
புனல்நாணும் வளஞ்செறிந்த தமிழ்க்காடு -அவன்
புகழ்பூத்த செந்தமிழர் பெரும்பீடு

தினவெடுத்த வண்டோளின் தமிழ்ச்செருக்கு-அவன்
சிந்திசைத்துக் களங்கண்ட இருப்புருக்கு
மினல்வாளின் வீச்சுவங்கிக் கையிருப்பு-அவன்
வீழாத தமிழெரியின் மலைவெடிப்பு!

பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி:  8667043574