பாரதி பாஸ்கர் சிறந்த பேச்சாளர்; தனது பட்டிமன்ற பேச்சால் உலகத்தமிழ் மக்களை கவர்ந்தவர். இவர் பாரதியார் கண்ட புதுமைப் பெண்; சிறந்த எழுத்தாளர்.
நாம் இக்கட்டுரையில் பாரதி பாஸ்கரின் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை மற்றும் அவரது சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.
பிறப்பு
இவர் 1969ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிருஷ்ணன். இவரது தாய் பெயர் கமலா.
இவரது தந்தை பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். இவரது தாய் அக்கௌண்ட்டட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.
படிப்பு
பாரதி பாஸ்கர் திருவண்ணாமலை புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பை படித்தார். இவர் பள்ளியில் நடக்கும் பல பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார்.
இவர் தன் பி.டெக் (கெமிக்கல் இன்ஜினியரிங்) படிப்பை அழகப்பா பல்கலைக்கழகத்திலும், தன் எம்.பி.ஏ. படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.
இவர் சிட்டி பேங்க் வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் பாஸ்கர் லட்சுமணன். இவருக்கு நிவேதிதா, காவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பேச்சாளர்
இவர் தனது குரு சாலமன் பாப்பையா தலைமையிலான பல பட்டிமன்றங்களில் பேசி மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.
தன் நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் ஒட்டு மொத்த பட்டிமன்றத்தையும் தன்பால் ஈர்ப்பவர் பாரதி பாஸ்கர்.
தன் நண்பர் பட்டிமன்றம் ராஜாவுடன் சேர்ந்து பலநாடுகளுக்கு சென்று பட்டிமன்றங்களில் பேசி வருகிறார்.
இவருடைய பேச்சு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
இவர் சன் தொலைக்காட்சியில் “வாங்க பேசலாம்”,”மகளிர் பஞ்சாயத்து” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார்.
எழுத்தாளர்
பாரதி பாஸ்கர் சிறந்த எழுத்தாளர். இவர் தினமணி பத்திரிக்கையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்கியில் இவர் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.
அவள் விகடனில் இவர் எழுதிய “நீ நதி போல ஓடிக் கொண்டிரு” தொடர் கட்டுரை அனைவரின் வரவேற்பையும் பெற்றது.
இவர் ஒரு கடிதம் இன்னொரு கடிதம், பெரிய ஆள், துரத்தும் ஆசைகள், பெற்றவள் பற்றிய குறிப்புகள் மற்றும் அப்பா என்றொரு வில்லன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் இவர் முதல் குரல், சிறகை விரி பற, சில பாதைகள் சில பயணங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
பாரதி பாஸ்கர் பெற்ற விருதுகள்
இவர் 2007இல் சாதனையாளர்கள் விருதைப் பெற்றார்.
மேலும் இவர் 2010இல் நகைச்சுவை மன்றத்தின் சிறந்த பேச்சாளர் விருதையும், 2011இல் பாரதி கலை இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு பன்முகத்திறமைகள் கொண்ட பாரதி பாஸ்கரின் பணிகள் மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.