பாறை சொன்ன‌ தீர்ப்பு

பாறை சொன்ன‌ தீர்ப்பு – கதை

பாறை சொன்ன‌ தீர்ப்பு என்பது, இறைவன் எப்படியாவது அநீதியை அடையாளம் காட்டுவான் என்று நம்பும் எளிய மக்களின் நம்பிக்கை பற்றிய கதை.

முருங்கையூர் என்ற ஊரில் அழகான கோவில் இருந்தது. அக்கோவிலின் முன்னால் பாறை ஒன்று இருந்தது.

அப்பாறையின் முன்னால் நின்று பொய் சொன்னால் அப்பாறை அவர்களுக்கு தண்டனை கொடுக்கும். ஆதலால் யாரும் பாறையின் முன்பு நின்று பொய் சொல்ல பயந்தனர்.

அவ்வூரில் செவ்வந்தியப்பன் என்ற பண்ணையார் இருந்தார். அவர் ஊர் மக்களுக்கு, வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார்.

அவர் தன்னுடைய தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார். நாளடைவில் பண்ணையாரின் மோசடியை ஊர்மக்கள் உணர்ந்தனர்.

இதனால் பண்ணையார் தன்னிடமிருந்த பணம் முழுவதையும் தங்கக்கட்டிகளாக மாற்றி மூங்கில் தடிக்குள் வைத்து கைத்தடியாக உபயோகித்தார்.

எப்போதும் மூங்கில் தடியைக் கையில் வைத்துக் கொண்டே இருந்தார். ஆனாலும் மக்களை சுரண்டுவதை அவர் விடவில்லை.

ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு பண்ணையாரை கோயில் பாறையின் முன் நிறுத்த எண்ணினர்.

இதனை அறிந்த பண்ணையார் முதலில் பயந்தார். பின்னர் கோயில் பாறையின் முன் நின்று பேச திட்டம் ஒன்றை மனதிற்குள் வகுத்தார்.

பண்ணையாரை கோயில் பாறையின் முன்பு நிறுத்த நாளினை ஊர் மக்கள் குறித்தனர். திட்டமிட்டபடி பண்ணையார் கோயில் பாறை முன்பு சத்தியம் செய்ய வந்தார்.

பாறைக்கு முன்பு செல்வதற்கு முன் தன்னுடைய கையில் இருந்த மூங்கில் தடியை தன்னுடைய வேலையாளிடம் கொடுத்தார்.

பாறையின் முன்னால் வந்து “என் கையில் ஊர் மக்கள் பணம் ஏதும் தற்போது இல்லை” என்றார்.

பண்ணையார் கூறியதும் ஏதும் நிகழவில்லை. இதனால் ஊர்மக்கள் அதிர்ந்தனர்.

கோயில் பாறை தன்னுடைய சக்தியை இழந்து விட்டதாக தங்களுக்குள் கூறிக் கொண்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று பண்ணையாரை நோக்கி வந்தது.

பாம்பிடம் இருந்து பண்ணையாரைக் காப்பாற்றுவதற்காக பண்ணையாரின் வேலையாள் மூங்கில் தடியைக் கொண்டு பாம்பை அடிப்பதற்காக தரையில் தட்டினான்.

மூங்கில் தடி தரையில் பட்டு ஒடிந்தது. அதனுள் இருந்த தங்கக்கட்டிகள் தரையில் சிதறின.

இதனைப் பார்த்த ஊர்மக்கள் தங்களுடைய உழைப்பினை உறிஞ்சி பண்ணையார் தங்கக்ககட்டிகளாக மாற்றி மூங்கில் தடிக்குள் வைத்திருந்ததையும், கோயில் பாறை அதனை வெளிப்படுத்தியதையும் எண்ணி வியந்தனர்.

உடனே பண்ணையாரும் மனம் திருந்தி, ஊர்மக்களின் பணத்தை திருப்பி அளிப்பதாக வாக்குறுதி அளித்து, அதன்படி திருப்பிக் கொடுத்தார்.

பண்ணையாரின் மனமாற்றத்தைக் கண்ட ஊர்மக்கள், பாறை சொன்ன‌ தீர்ப்பு சரிதான் என்று வணங்கி, கோயில் பாறைக்கு நன்றி சொன்னனர்.