பாலமுரளி கிருஷ்ணா

பாலமுரளி கிருஷ்ணா தன்னுடைய மனதை மயக்கும் இசை மற்றும் அழகான கம்பீரமான குரல் வளத்தால் இந்தியாவின் கர்நாடக இசைகலைஞர்களின் முன்னோடியாக விளங்கியவர்.

பாலமுரளி கிருஷ்ணா பராம்பரிய கர்நாடக இசைப்பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், திரைப்பட பின்னனிப்பாடகர், பல்வாத்தியக் கலைஞர், குணச்சித்திர நடிகர் என பன்முகம் கொண்ட திறமையான கலைஞர் ஆவார். பத்மவிபூசன், செவாலியே உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

இவர் பராம்பரிய இசைப் பாடகர் (கர்நாடக சங்கீதம்), இசைஅமைப்பாளர், திரைப்பட பின்னனிப் பாடகர் ஆகியவற்றிற்காக தேசிய விருது பெற்ற ஒரே இந்திய இசைக் கலைஞர் ஆவார்.

25,000 மேடைக் கச்சேரிகளை நடத்திய பெருமை இவரையே சாரும். 400-க்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஜனகராஜ மஞ்சரி என்ற இசைப்புத்தகத்தை தனது 15-வது வயதில் வெளியிட்டு புகழின் உச்சிக்குச் சென்றார்.

மஹதி, ஓம்காரி, வல்லபி, ரோகினி உள்ளிட்ட பல புதிய ராகங்களைக் கண்டறிந்தார். இசை மருத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மனதை மயக்கும் வசீகரக் குரலால் இசை உலகில் தனக்கென தனி இடம் பெற்றவர் இவர். இவரைப் பற்றி விரிவாகக் காண்போம்.

 

பிறப்பு மற்றும் இளமைப்பருவம்

பாலமுரளி கிருஷ்ணா 06.10.1930-ல் ஆந்திர மாநிலத்தில் உள்ள சங்கர குப்தம் என்னும் ஊரில் பிறந்தார். பட்டபிராமையா, சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முரளி கிருஷ்ணா என்பதாகும்.

இவருடைய தந்தையார் புல்லாங்குழல், வீணை, வயலின் ஆகியவற்றை வாசிப்பதில் புகழ் பெற்றவர். தாயார் வீணை இசைக் கலைஞர். இவர் தனது குழந்தைப் பருவத்திலேயே தாயாரை இழந்தார்.

அதனால் தனது தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தார். வயலின், வயோலா, கஞ்சீரா, வீணை, மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதில் இவர் தேர்ச்சி பெற்றவர்.

 

முரளி கிருஷ்ணா பாலமுரளி கிருஷ்ணாவானது

முரளி கிருஷ்ணா சிறுவயதிலேயே இசைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதனால் இவருடைய தந்தை இவரை இவருடைய ஐந்து வயதில் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் இசைப் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ பாருபள்ளி ராமகிருஷ்ண பந்தலு என்பவரிடம் இசையைக் கற்க இவரை அனுப்பி வைத்தார்.

தனது எட்டு வயதில் விஜயவாடாவில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில் தனது முதல் கச்சேரியில் தனது இசை ஆற்றலை வெளிப்படுத்தினார். இசை மேதை எனப் பராட்டப்பட்டார்.

சிறுவனாக இருந்த இவரை ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயணா மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளி கிருஷ்ணா என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

சென்னை அனைத்திந்திய வானொலி இவர் குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் இவரையும் சேர்த்தது.

 

கர்நாடக இசைப் பாடகராக

இவர் 15 வயதிற்குள் 72மேள கர்த்தாக்களை ஆளும் திறமையையும் அவற்றை பயன்படுத்தி சுருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார். இசை ஆர்வம் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்.

1952–ல் ஜனகராஜ மஞ்சரி என்ற இசைப்புத்தகத்தை வெளியிட்டுட்டார். இப்புத்தகம் இசை மாணவர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு குறிப்புப் புத்தகமாக விளங்கியது.

பின் இப்புத்தகம் ராகங்க ரவாளி என்ற பெயரில் 9 தொகுதிகளாக சங்கீத ரெக்காடிங் கம்பெனியால் வெளியிடப்பட்டது. கர்நாடக இசைப் பாடகராக மட்டுமில்லாமல் கஞ்சிரா, மிருதங்கம், வயலோ, வயலின் ஆகியவற்றை வாசிக்கும் கலைஞராகவும் கச்சேரிகளை நடத்தினார்.

25,000 அதிகமான இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். அமெரிக்கா, கனடா, இலங்கை, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் போன்ற வெளிநாடுகளிலும் கச்சேரி நிகழ்த்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, பஞ்சாப் போன்ற மொழிகளில் பாடியுள்ளார். பெங்காலியில் உள்ள ரவீந்தரநாத் தாகூரின் ரவீந்திர சங்கீத் பாடல்கள் இவரின் தெளிவான நடையால் பல்மொழிகளில் பதிவு செய்யப்பட்டு வருங்கால சந்ததிகளுக்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

 

இசைக்கு இவரின் பங்களிப்புகள்

இவர் பண்டிட் பீம்னெ ஜோஷி, பண்டிட் ஹரி பிரசாத் சௌரைசா, கிஷோரி அமேன்கர் ஆகியோர்களுடன் இணைந்து ஜூஹால்பந்தி என்ற கச்சேரியை நடத்தினார்.

அவர் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையை நன்கு புரிந்து கொண்டு தனது இசைப்பயணத்தில் புதிய ராகங்களைத் தோற்றுவித்தார். மஹதி, சுமூகம், சர்வஸ்ரீ, ஓம்காரி, பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்றவை அவர் உருவாக்கிய புதிய ராகங்கள் ஆகும்.

இவை சிலரால் பாராட்டப்பட்டன. சிலரால் விமர்சனத்துக்குள்ளானன. புதிய தாள முறைகளைக் கண்டறிந்தார். அவற்றிற்கு திரிமுக்தி, பஞ்ச முக்தி, சப்த முக்தி, நவமுக்தி எனப் பெயரிட்டார்.

கலை மற்றும் ஆராய்ச்சி அரங்கேற்ற அகாடமியை சுவிச்சர்லாந்தில் தோற்றுவித்தார். இசை மருத்துவம் பற்றி ஆராய்ந்தார். எம்பிகே டிரஸ்டை உருவாக்கி அதன் மூலம் விப்பான்சி என்ற நடனஇசைபள்ளியைத் தொடங்கினார்.

அகில இந்திய தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி ஆகியவற்றில் இசைப்பணியாற்றினார். இசைக்கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.

 

திரைப்படத்துறையில்

இவர் திரைப்படத் துறையில் பின்னனிப் பாடகராகவும், இசை அமைப்பாளராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிறந்து விளங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் பின்னனி பாடியுள்ளார்.

பக்த பிரகலாதா என்ற தெலுங்குப்படத்தில் நாரதர் வேடத்தில் நடிராக அறிமுகமானார். தமிழில் திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய ஒருநாள் போதுமா மற்றும் கவிக்குயில் படத்தில் சின்ன கண்ணன் அழைக்கிறான் போன்றவை இவர் பெருமையை என்றும் பறைசாற்றுபவை.

 

சொந்த வாழ்க்கை

இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.

மறைவு

இவர் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக 22.11.2016 அன்று தனது 86வது வயதில் இயற்கை எய்தினார்.

விருதுகளும் பெருமைகளும்

1971-ல் பத்ம ஸ்ரீ

1991-ல் பத்ம விபூஷண்

2005-ல் பிரெஞ்சு அரசின் செவாலியே விருது

 

தேசிய திரைப்பட விருது

1975-ல் சிறந்த பின்னனிப் பாடகர்

1986-ல் சிறந்த இசையமைப்பளர்

1975-ல் சங்கீத நாடக அகாடமி விருது

1978-ல் சங்கீத கலாநிதி விருது

1991-ல் சங்கீத கலாசிகாமணி விருது

2002-ல் இசைப்பேரறிஞர் விருது

2002-ல் சங்கீத கலாசாரதி

1995-ல் யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய மாகாத்மா காந்தி வெள்ளிப் பதக்கம்

2010-ல் சிறந்த பராம்பரிய இசைப் பாடகர்

தனது கம்பீரமான காந்த குரலால் இசை ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற இசை பேரறிஞர் பாலமுரளி கிருஷ்ணாவைப் போற்றுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.