கடைசி மணி அடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல பள்ளியை விட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். ஒன்பதாவது படிக்கும் பாலு மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் பொறுமையாக நடந்தான்.
வீட்டிற்கு வந்ததும் புத்தகப் பையை ஜன்னலோரம் வைத்துவிட்டு எதையோ சிந்தித்தபடி கதவின் அருகில் அமர்ந்தான். மதியம் பள்ளியில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
மதிய உணவு இடைவேளையில் பாலு நண்பர்களோடு சாப்பிடும்போது, ஒருவன் கேட்டான்.
“என்னடா பாலு, தினமும் தயிர்சாதமே எடுத்துட்டு வர. எங்கள மாதிரி வேற வேற சாப்பாடு எடுத்துட்டு வா, இல்லன்னா உனக்கு தயிர்சாதம்னு பட்டப்பேரு வச்சிடுவோம்.”
அதனைக் கேட்ட எல்லோரும் கலகலவென சிரித்தனர். அதை நினைத்துத்தான் பாலு மிகவும் வருந்தினான்.
அப்போது கொல்லையிலிருந்து உள்ளே வந்த பாலுவின் அம்மா, “என்னடா பாலு, யூனிஃபார்ம கழட்டலையா? ஏன் இப்படி உட்காந்திருக்க என்னாச்சு?” என்றாள்.
“இல்லம்மா, பள்ளிக்கூடத்துல எல்லா பசங்களும் விதவிதமாக சாப்பாடு எடுத்துட்டு வாராங்க, நான் மட்டுந்தான் தினமும் தயிர்சாதம் எடுத்துட்டுப் போறன். ஏம்மா எனக்கு மட்டும் ஒரே சாதம் குடுக்குற?” என்றான்.
பாலு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பாவை இழந்தான். அந்த சின்ன கூரை வீட்டில் ஒரே ஒரு பசுமாடும் கன்றும். அதுதரும் பால்தான் அவர்களுக்குச் செல்வம்.
பாலுவின் பக்கத்தில் சென்று அம்மா “நாளையிலிருந்து உனக்கு ஒவ்வொரு நாளும் வேற வேற சாப்பாடு குடுக்குறேன்” என்றாள்.
துள்ளிக் குதித்தோடும் மான் போல அம்மாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே ஓடினான் பாலு.
அடுத்த நாள் எலுமிச்சையில் பழச்சாறு எடுத்து, கடலைப் பருப்பு தாளிக்கும் மணம் வீடெங்கும் சாம்பிராணிப் புகை போல பரவியது.
புளி சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், தேங்காய் சாதம், காய்கறிக் கூட்டு என தினம் ஒரு சாப்பாடு பாலுவிற்கு.
ஞாயிறன்று விடுமுறை என்பதால் பாலு வீட்டில் இருந்தான். அப்போது பக்கத்து தெருவில் காய்கறிக் கடை வைத்திருக்கும் கமலா வந்தாள்.
பாலுவின் அம்மாவிடம் “பணம் கேட்டா நாளைக்கு குடுக்குறேன்னுகுற” எனச் சொல்லி கோபமாய் பேசினாள் கமலா.
“என்ன நீ எலுமிச்சைப்பழம், தக்காளி, காய்கறி, தேங்காய், வெங்காயம் என எல்லாத்தையும் வாங்கிட்டுப் போன. நாளைக்கு காசு தர்றேன்னு சொன்ன. இப்ப ஒருவாரம் ஆச்சு, எத்தனை நாளைக்கு இப்படியே சொல்லுவ. சாயங்காலத்துக்குள்ள பணத்தை குடுத்துடு. இல்லன்னா ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்திடுவேன்.” என எண்ணெய் சட்டியில் கடுகு பொரிவது போல் பேசிவிட்டுச் சென்றாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாலு, ஓடிவந்து அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டே சொன்னான்.
“தயிர்சாதம் போல எந்த சாப்பாடும் நல்லால்லம்மா, எனக்கு இனிமே தயிர்சாதமே போதும்” என்றான்.
என்ன சொல்வதென்று தெரியாமல் பாலுவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள் அந்த ஏழைத்தாய்.
அடுத்த நாள் காய்ந்த மிளகாயோடு தயிரைத் தாளிக்கும் மணம் வீடெங்கும் பரவியது.
மகிழ்சியோடு பள்ளிக்கு தயிர்சாதமும் ஊறுகாயும் எடுத்துச் சென்றான் பாலு.
பள்ளியில் உணவு இடைவேளையின்போது நண்பர்களிடம் சொன்னான்.
“இனிமேல் நான் தயிர்சாதம்தான் எடுத்துட்டு வருவேன். எங்க வீட்டுப் பசுவின் தயிரில், எங்க அம்மா செய்த இந்த தயிர்சாதத்திற்கு இணையான சாப்பாடு வேறு எதுவுமில்லை. எனக்குப் பட்டப்பேரு தயிர்சாதம்னா மகிழ்ச்சிதான்.”
மணமணக்கும் தயிர்சாதத்தை சுவைத்து சுவைத்து சாப்பிட்டான், குடும்ப சூழ்நிலை புரிந்து உயர்ந்த பாசக்கார பாலு.
எனதருமை பிள்ளைகளே, உங்கள் குடும்பத்தின் சூழ்நிலையைப் புரிந்து அதற்கேற்றவாறு வாழப் பழகுங்கள். வாழ்க்கை சிறக்கும்; இன்பம் நிலைக்கும்.
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்