பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஐவகை நிலங்களில், பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதை மறுத்து, பாலை என்ற ஒரு தனிவகை நிலம் உண்டு என இந்தக் கட்டுரை மூலம் நிறுவ முயற்சி செய்கிறார் காவடி மு.சுந்தரராஜன்.
தொல்காப்பியர் பாலையை ஒரு தனி நிலமாகக் குறிப்பிடவில்லை எனப் பலர் இந்தச் செய்யுளை எடுத்துக் காட்டுவர். அவர் நிலங்களை நான்காகவே இப்பாடலில் காட்டுகிறார்.
மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே ( பொருள் – 5 )
இப்பாடலில் பாலையைக் குறிப்பிடாவிடினும், பின் வரும் செய்யுள்களில் பாலை நிலத்திற்கான பொழுதையும், உரிப் பொருளையும் குறிக்கின்றார்.
பாலை நிலப் பொழுது
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. ( பொருள் – 11 )
பின்பனிதானும் உரித்து என மொழிப. ( பொருள் – 12 )
இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர். ( பொருள் – 13 )
பாலைக்கு வேனில், பின் பனி பெரும் பொழுதுகளாகவும், நண்பகல் சிறு பொழுதாகவும் காட்டப் படுகின்றன.
பாலை நிலத்தின் உரிப் பொருள்
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. ( பொருள் – 16 )
பாலைக்குப் ‘பிரிதல்’ உரிப் பொருளாகக் கூறப்படுகிறது
இது முரண் இல்லையா?
ஏதாவது தகுந்த காரணம் இல்லாமலா இப்படிப்பட்ட அடிப்படை முரண்பாட்டுடன் அவர் நிலங்களைப் பகுத்திருப்பார்?
தொல்காப்பியர் காலத்திலும் அவருக்கு முன்பும் நாலு வகை நிலங்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் எனக் கொண்டால், பொருள் – பாடல் 5 ஐத் தவிர நிலங்களை ஐந்தாகக் கூறும், பிற தொல்காப்பியப் பாடல்களை எப்படிக் கொள்வது என்ற கேள்வி எழுகின்றது!
இங்கு மற்றொன்றும் நோக்கற்பாலது.
நிலங்களை வரிசைப்படுத்துகையில் குறிஞ்சியிலிருந்து தொடங்குதலே இயல்பு. உரிப்பொருளைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்று குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வகையில் தான் இயல்பாக வரிசைப்படுத்துகிறார்.
ஆனால், பாடல் 5 ல் மட்டும் முல்லையை முதன்மைப்படுத்துகிறார். சேயோனுக்கு முன்பு மாயோன் வைக்கப்படுகிறார்.
செய்யுள் இலக்கணம் ஏதாவது குறுக்கே வருகிறதா?
அல்லது பாலைவரி காணாமல் போய்க் குறிஞ்சி வரி இடம் மாறி விட்டதா?
பின்னால் வந்த இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில், காடு காண் காதையில்,
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
என்ற பாடல் உள்ளது.
‘பாலை என்பது ஒரு தனி நிலமல்ல’ என்போர், தொல்காப்பியம் (பொருள் ) – பாடல் 5 ஐயும் இந்தப் பாடலின்
“……முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்….”
என்ற மூன்று வரிகளையும் தான் முக்கியச் சான்றுகளாகக் கொள்கிறார்கள்!
மேற் சொன்ன சிலப்பதிகாரப் பாடலில்,
“பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் “
என்றுதான் உள்ளதேயன்றி அப்படி ஏற்படுவது தான் பாலை என்றில்லை. ‘பாலை என்பதோர் படிவம்’ என்பதற்குப் ‘பாலை போன்ற’ என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
‘படி’ என்றால் நகல் / பிரதி, படிவம் என்றால் ஒன்றதன் உருவம், தோற்றம் என்பது தான் பொருள். எனவே, பாலையின் உருவத்தை / தோற்றத்தைக் குறிஞ்சியும், முல்லையும் கொள்வன என்பது தான் பொருள்!
குறிஞ்சியும், முல்லையும் திரிவதால் தான் பாலை உருவாகிறது எனப் பொருள் கொள்வது பொருத்தமன்று. ‘படிவங் கொள்ளும்’ என்ற சொற் பயன்பாடு ஒரு தற்காலிக மாற்றத்தைக் குறிப்பதாக மட்டுமே உள்ளது.
பாலை என்றவுடன் சகாரா, தார் போன்ற தற்போதைய பெரிய பாலைவனங்களைக் கற்பனை செய்யக் கூடாது. தமிழகத்தில் அவை போன்ற பகுதிகள் இருந்ததாக எந்தக் குறிப்பிலும் இல்லை.
வறண்ட பகுதியைக் குறிப்பிடவே ‘பாலை’ என்ற சொல் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போது போலவே மழை குறைவான, நீர் குறைவான வறண்ட பகுதிகள் பண்டையத் தமிழகத்திலும் இருந்திருக்கத் தான் வேண்டும்.
மழை மறைவுப் பகுதிகளும், ஆறுகள் பாயாத பகுதிகளும் கடுமையான வறட்சியுடன் தான் இருந்திருக்க முடியும். அப்பகுதிகள் தான் பாலை என அழைக்கப்பட்டுள்ளன. நீரின்மையால் விவசாயமின்றி அந்நில மக்கள் ஆறலைத்துண்ணும் கள்வர்களாக இருந்துள்ளனர்.
சங்கப் பாடல்களை எடுத்துக் கொண்டால் பாலைத் திணைப் பாடல்கள் நிறைய உள்ளன. அப்படியொரு தனி நிலம் இருந்திருக்க வில்லை யெனில், அந்நிலத்திற்கான தனியான இனம், வாழ்க்கை இயல்பு, தெய்வம், பொழுதுகள், ஒழுக்கம், தாவரங்கள், விலங்குகள் போன்றவை அந்தப் பாடல்களில் இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை.
பாலை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: கொற்றவை
மக்கள்: விடலை, காளை, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்,
பறவைகள்: பருந்து, கழுகு
மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
மலர்கள்: மராம்பு
பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
பறை : ஆறலை, சூறைகோள்
தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
நீர்: கிணறு
விலங்கு: வலுவிழந்த புலி
யாழ்: பாலையாழ்
ஊர்: குறும்பு
உரிப் பொருட்கள்
அக ஒழுக்கம்: பிரிதல்
புற ஒழுக்கம்: வாகை
குறிஞ்சியும், முல்லையும் சில கால கட்டங்களில் வறட்சியால் மாறுவது தான் பாலை என எடுத்துக் கொண்டால், செழிப்பான காலத்தில் பாலையே இல்லாமல் போய்விடும் தானே?
வறட்சிக் காலத்தில் குறிஞ்சி, முல்லையின் குறவர்களும், ஆயர்களும் பாலைக்குரிய எயினர் / மறவர்களாக மாறித் தத்தம் தெய்வங்களான சேயோனையும், மாயோனையும் தூக்கியெறிந்து விட்டுப் பாலையின் கொற்றவையைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்களா என்ன?
பின்னர் செழிப்புத் திரும்பியவுடன், எயினர்கள் மீண்டும் குறவர்கள்/ஆயர்கள் ஆகி விடுவார்களா என்ன?
பாலை என்றோர் நிலம் தனியாக இல்லை என்பதற்குச் சிலப்பதிகாரத்தைத் துணைக்கழைப்போர், சிலப்பதிகாரத்தின் மேற்சொன்ன பாடல் வரிகளுக்கு முன்னும் பின்னும் வரும் வரிகளை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
“…….அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.” , “பொய்மையும் வாய்மை யிடத்த……” இந்த இரண்டு குறள்களின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் படித்து விட்டு, வள்ளுவர் ‘ அறம் செய்யாதிருப்பதே நல்லது‘ என்றும் ‘பொய் பேசலாம்’ என்றும் சொல்லியிருக்கிறார் என்று வாதிடுவதற்கு ஒப்பானது அவர்களின் செயல்.
சிலப்பதிகாரத்தின் அந்த மூன்று வரிகளை மட்டும் வைத்துக் கொண்டு முடிவு செய்யாமல், இந்த வரிகளுக்கு முந்தைய வரிகளையும் பின்வரும் வரியையும் சேர்த்துப் படித்து விளக்கம் பெறுவதே சாலச் சிறந்தது.
பாடலின் பொருள்
பாடலை ஒவ்வொரு வரியாகப் பொருள் கொள்வோம்.
கோத் தொழிலாளரொடு கொற்றவன் கோடி – அரசியல் தொழிலினை உடைய அமைச்சர்களோடு சேர்ந்து முறை செய்யாது, அரசன் கொடுங்கோல் ஆட்சி செய்ததால்;
வேத்தியல் இழந்த வியனிலம் போல – ஆட்சிப் பொலிவிழந்த நாட்டினைப் போல்;
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் – வேனிலாகிய அமைச்சனொடு வெவ்விய கதிர்களையுடைய ஞாயிறாகிய அரசன் (சூரியன்);
தான் நலம்திருக – நலம் வேறுபடுதலான் (உக்கிரமாகத் தகிப்பதால்) ;
தன்மையிற் குன்றி – தமது இயற்கை கெட்டு;
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து – முல்லை குறிஞ்சி என்னும் இருதிணையும் நல் இயல்பு இழந்து ( செழிப்பை இழந்து );
நடுங்கு துயர் உறுத்து – தம்மைச் சேர்ந்தோர் நடுங்கும் வண்ணம் துன்பத்தினை யுறுவித்து ( வெப்பத்தால் வாட்டி );
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை -. பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும் இக்காலத்து;
எய்தினிர் காரிகை தன்னுடன் – இக்காரிகையோடு வந்தீர் ;
“கொடுங்கோல் ஆட்சியில் நாடு கெடுவது போல், வேனில் காலத்தில் கதிரவன் வழமையை விட அதிக வெப்பத்தைப் பாய்ச்சுவதால், செழிப்பான குறிஞ்சி, முல்லை நிலப் பகுதிகள் கூடச் செழிப்பிழந்து பாலையின் வடிவத்தைக் கொள்ளுவன. அப்படியொரு வெம்மை தகிக்கும் காலகட்டத்தில் கண்ணகியை அழைத்து வந்துள்ளாயே“ என்று மறையவர் ஒருவர் கோவலனைப் பார்த்துக் கேட்பதைத்தான் இந்த எட்டு வரிகளும் காட்சிப் படுத்துகின்றன.
குறிப்பிட்ட மூன்று வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, ‘கொள்ளும்’ என்பதோடு முற்றுப்புள்ளி வைக்காமல், ‘காலை’ என்ற வார்த்தையைச் சேர்த்துப் படித்தால் தான் ‘பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை, என்ற வரி முழுமை பெறும். அப்பொதுதான் முழுப் பொருளும் தெரிய வரும்.
செழிப்பான குறிஞ்சியும் முல்லையும் கூடப் பாலை போல் ஆகுமளவிற்கு, வேனலும், வெய்யிலின் கொடுமையும் இருக்கும் காலகட்டத்தில் கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் மூவரும் அப்பாலைப் பகுதியைக் கடந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டவே மேற்சொன்ன வரிகள்.
சரியில்லாத ஆட்சியாளர்களால் கெட்டழியும் நாடு, நல்லாட்சியர் பொறுப்பெடுத்தால் சரியாகி விடும் தானே! அதே போல், கதிரவன் வேனலின் இயல்பான வெப்பத்தை மட்டுமே பாய்ச்சினால், செழிப்பிழந்த குறிஞ்சி, முல்லை நிலப்பகுதி இயல்புக்கு மாறி விடும் தானே!
ஆட்சியாளர்களின் கொடுங்கோல் ஆட்சியும், கதிரவனின் வழமை மீறிய வெப்பமும் தற்காலிகமானவை தானே!
எனவே இளங்கோ அடிகள், வேனலின் வழமை மீறிய வெப்பத்தினால் ஏற்படும் வறட்சியின் காரணமாகத், தற்காலிகமாகப் பாலைபோல் தோற்றமளிக்கும் பகுதியைத் தான் இங்கு குறிப்பிடுகிறார் என்பது தான் சரியாக இருக்க முடியும்.
பின்னால் வரும் வேட்டுவ வரிப் பாடல்களில், பாலை நிலமும் அந்நிலம் வாழும் எயினர் / மறவர், அவர்தம் வீரம், அவர்தம் வாழ்க்கை முறை, அவர்கள் தம் தெய்வம், (ஐயை / கொற்றவை) அதற்கான கோவில் போன்றவையும் வருவது இங்கு ஊன்றி நோக்கற் பாலது.
இளங்கோ அடிகள் குறிப்பிடும் நிரந்தரமல்லாத, தற்காலிகமாகத் தோன்றும் ஒரு நிலப்பரப்பில், நிரந்தரமான மக்கள் இனமோ, வாழ்விடமோ அந்நிலத்திற்கான தெய்வம் உறையும் கோவிலோ நிச்சயம் இருக்க முடியாது!
“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருக “ என்ற வரியில் சொல்லப்படும் வழக்கத்துக்கு மாறான அதீத வெப்பம், ஐவகை நிலங்களுக்கும் பொதுவானதே!
அப்படியிருக்கையில் குறிஞ்சி, முல்லை நிலங்களை மட்டும் அத்தகைய நிலையால் பாதிப்படையும் நிலங்ககளாக இளங்கோ அடிகள் குறிப்பிடுவது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அவையிரண்டுமே ஏற்கனவே பாலையோடு எல்லை கொண்டிருப்பது தான் காரணம். ஏற்கனவே பாலையென்ற நிரந்தரமான நிலம் இல்லாவிடில் இது எப்படிச் சாத்தியம் ஆகும்?
சிலப்பதிகாரத்தின் இது தொடர்புள்ள வரிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, திறந்த மனதுடன் ஆய்வு செய்தால் தான் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனம் வரும்.
ஆனால், குறிப்பிட்ட மூன்று வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அவற்றைச் சான்றாகக் கொண்டு, பாலைநிலம் பற்றி ஏற்கனவே கருத்துக் கூறிய நமது முன்னோர்களது மேதைத் தன்மையை எண்ணத்தில் வைத்துக் கொண்டு ஆய்வு செய்தால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மனம் வராது.
தொல்காப்பியர் பாலை நிலத்திற்கான பொழுது, உரிப்பொருளைக் குறிப்பிட்டிருக்கையில், அப்படியொரு நிலம் தனியாக இல்லை என்று எப்படி ஒரு முடிவிற்கு வர முடியும்?
சிலப்பதிகார வரிகளுக்கு குறிஞ்சி மற்றும் முல்லை திரிந்து தான் பாலை உருவாகும்; பாலை என்று தனி நிலம் கிடையாது என்று பொருள் கொண்டால், அதே கருத்தைத் தொல்காப்பியரும் சொல்லியிருக்க வேண்டுமே?
தொல்காப்பியர் ஏன் முதல் செய்யுளில் பாலை குறித்துக் குறிப்பிடாமல் விட்டார்?
அவ்வரி நீக்கப்பட்டு விட்டதா?
பாலைக்கான பொழுது, உரிப்பொருள் ஒதுக்கீட்டுச் செய்யுட்கள் பிற்சேர்க்கையா?
தமிழறிஞர்கள்தான் ஆய்வு செய்து, இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.
காவடி மு.சுந்தரராஜன்
கோவை
கைபேசி: 9842231074
மின்னஞ்சல்: indianthaatha@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!