பால்பன் தித்திப்பான இனிப்பு வகை ஆகும். கடைகளில் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு, மேலே கெட்டியாக படிந்துள்ள சர்க்கரை பாகினை பார்க்கையிலேயே, அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்.
பொதுவாக இதனைச் செய்வதற்கு மைதாவே பயன்படுத்துவர். இந்த பதிவில் மைதாவிற்கு பதில் கோதுமை மாவினைக் கொண்டு பால்பன்னைத் தயார் செய்துள்ளேன்.
இனி சுவையான பால்பன்னினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்

கோதுமை மாவு – 200 கிராம் (1 பங்கு)
புளிப்பில்லாத தயிர் – 100 கிராம் (1/2 பங்கு)
உப்பு – மிகவும் சிறிதளவு
வெள்ளை சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு – 1/2 ஸ்பூன்
கடலை எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு
சர்க்கரை பாகு தயார் செய்ய
வெள்ளை சர்க்கரை – 150 கிராம் (3/4 பங்கு)
தண்ணீர் – 3/8 பங்கு (சர்க்கரையின் பங்கில் பாதி)
ஏலக்காய் – 3 எண்ணம்
பால்பன் செய்முறை
கோதுமை மாவினை சலித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் புளிப்பில்லாத தயிரை ஊற்றவும்.

அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கிக் கொள்ளவும்.




பின்னர் அதனுடன் கோதுமை மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும்.

பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து படத்தில் உள்ளபடி எலாஸ்டிக் பதத்திற்கு பிசையவும்.

பாத்திரத்தை மூடி பிசைந்த மாவினை அரைமணி நேரம் ஊற விடவும்.

வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து, அதனுடன் சர்க்கரையின் பங்கில் பாதியளவு பங்கு தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
சர்க்கரை கரைந்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பிலிருந்து சர்க்கரைப் பாகினை இறக்கி விடவும்.
பால்பன்னிற்கு சர்க்கரைப் பாகு செய்யும் போது கம்பி பதம் தேவையில்லை.

வாணலியில் கடலை எண்ணெயை ஊற்றி எண்ணெயைக் காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
1/2 மணி நேரம் ஊறிய கோதுமை மாவில் சிறிய எலுமிச்சை அளவு மாவினை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மாவு எண்ணெயில் பொரிந்ததும் பெரிதாக மாறும்.
ஆதலால் மாவினை கிள்ளிப் போடும் போது கவனமாக போடவும்.
கோதுமை மாவினை எடுக்கும் போது கையை தண்ணீரில் நனைத்து மாவினை எடுத்தால் எடுக்க எளிதாக இருக்கும்.
இவ்வாறாக எல்லா மாவினையும் பொரித்து எடுக்கவும்.


பொரித்து எடுத்த உருண்டைகள் மிதமான சூட்டில் இருக்கும்போது சர்க்கரை பாகில் ஊற விடவும்.

1/2 மணி நேரம் கழித்து உருண்டைகளை வெளியே எடுக்கவும்.
சுவையான பால்பன் தயார்.

குறிப்பு
அதிக இனிப்பினை விரும்புபவர்கள், ஆறிய சர்க்கரை பாகில் சூடான பொரித்த உருண்டையை போட்டு ஊற வைக்கவும்.
குறைந்த இனிப்பினை விரும்புபவர்கள், ஆறிய சர்க்கரை பாகில் ஆறிய பொரித்த உருண்டைகளைப் போட்டு ஊற விடவும்.