பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இது பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது.

பால் கொழுக்கட்டை என்பது கொழுக்கட்டையை தண்ணீரில் வேக வைத்து பின் அதில் பால் மற்றும் மண்டை வெல்லம் சேர்த்து தயார் செய்யப்படுகிறது.

இக்கொழுக்கட்டையை எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 400 கிராம்

மண்டை வெல்லம் – 400 கிராம்

சுக்கு – 5 கிராம்

தேங்காய் (சிறியது) – ½ மூடி

காய்ச்சிய பால் ‍ 1 கப்

தண்ணீர் – தேவையான அளவு

 

செய்முறை

முதலில் மண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சுக்கைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

பச்சரிசி மாவு
பச்சரிசி மாவு

 

பச்சரிசி மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவினைப் போல் பெரிய உருண்டையாக திரட்டிக் கொள்ளவும்.

பின் அதிலிருந்து சிறிது மாவினை எடுத்து சிறிய உருண்டையாகவோ அல்லது விரல் வடிவிலோ திரட்டிக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கொழுக்கட்டை வடிவில் பிடித்த மாவு
கொழுக்கட்டை வடிவில் பிடித்த மாவு

 

பின் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீரினை எடுத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் திரட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை போடவும்.

தண்ணீரில் கொதிக்கும்போது
தண்ணீரில் கொதிக்கும்போது

 

மீண்டும் தண்ணீர் கொதித்தவுடன் கொழுக்கட்டைகளை கரண்டியை வைத்து கிளறி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கொழுக்கட்டை நிறம் மாறி இருக்கும் போது வெளியே எடுத்து விடவும்.

வெந்த கொழுக்கட்டை
வெந்த கொழுக்கட்டை

 

மறுபடியும் கொழுக்கட்டைகளை போடுவதாக இருந்தால் ஏற்கனவே கொழுக்கட்டை வேக வைத்த நீரில் சிறிதளவு குளிர்ந்த தண்ணீரைச் சேர்த்து பின் தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.

கொழுக்கட்டை வேக வைத்த நீரில் காய்ச்சிய பால் ‍ 1 கப் மற்றும் தூளாக்கி வைத்துள்ள மண்டைவெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்த உடன் அதனுடன் தட்டி வைத்துள்ள சுக்கு மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும்.

எல்லாம் ஒன்றாகக் கலந்தவுடன் அதனுடன் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் கலவையை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

சுவையான பால் கொழுக்கட்டை
சுவையான பால் கொழுக்கட்டை

 

குறிப்பு:

இதே முறையில் கொழுக்கட்டையைப் பால் சேர்க்காமலும் தயாரிக்கலாம்.

வெல்லத்திற்குப் பதில் கருப்பட்டியைச் சேர்த்தும் கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

சுக்கு சேர்ப்பதால் கொழுக்கட்டை சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்