பால் – வெள்ளை அமுதம்

பால் மனிதனுக்கு இயற்கை வழங்கிய அற்புதமான கொடை ஆகும். நம் நாட்டில் பொதுவாக எல்லோரும் பால் மற்றும் பால்பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றோம்.

இந்தியா, உலகில் பாலினை அதிகளவு உற்பத்தி செய்கிறது.  பாலனாது பொதுவாக வெள்ளை நிறத்துடன் லேசான இனிப்புச் சுவையைக் கொண்டிருக்கும்.  பாலானது காலை, பகல், மாலை, இரவு உள்ளிட்ட எல்லா நேரங்களிலும் அருந்தப்படுகிறது.

பாலானது பெரும்பாலும் பசு, எருமை, வெள்ளாடு, செம்பறியாடு, யாக் மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளிலிருந்து பெறப்படுகிறது. பொதுவாக பால்என நாம் குறிப்பிடப்படுவது பசுவின் பாலாகும்.

பாலானது நம்முடைய உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளதால் இது வெள்ளை அமுதம் என்று அழைக்கப்படுகிறது.

பால் வரலாறு

மனிதன் கால்நடைகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கும் காலத்திலிருந்து பால் பானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கிமு 9000-ஆம் ஆண்டில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் வெள்ளாடுகள் மற்றும் செம்பறியாடுகள் அவற்றின் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்ப்பு கால்நடைகளாக வளர்க்கப்பட்டன.

பண்டைய ரோம் மற்றும் கிரேக்க நாகரிகங்களில் பாலில் இருந்து பாலாடைக்கட்டி தயாரிக்கும் முறை வழக்கத்தில் இருந்துள்ளது.

1600-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காலனித்துவாதிகள் அமெரிக்காவிற்கு கால்நடைகளைக் கொண்டு வந்தனர். பின் பால்ப் பொருட்கள் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது.

பால்உற்பத்தி அதிகரித்தபோது அதனை இயந்திரங்களைக் கொண்டு பதப்படுத்தும் முறையும் வழக்கத்திற்கு வந்தது. கெயில் பார்டன் என்பவர் குறிப்பிட்ட வெற்றிடத்தில் பாலினை காய்ச்சி சுண்டியபால் (கன்டன்ஸ்ட் மில்க்) தயாரிக்கும் முறையினைக் கண்டறிந்தார்.

இம்முறையில் பாலில் உள்ள நீர்ச்சத்து குறைக்கப்பட்டு பாலினை நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. 1863-ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் பாலினைப் பதப்படுப்படுத்தும் பாஸ்டுரைசேசன் என்னும் முறையினைக் கண்டறிந்தார்.

இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, பிரேசில் போன்றவை உலகில் அதிகளவு பாலினை உற்பத்தி செய்யும் நாடுகள் ஆகும். ரஷ்யா பாலினை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடு ஆகும்.

பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பாலில் விட்டமின்கள் ஏ, பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி12(சையனோ கோபாலமைன்), டி, சொலைன் போன்றவை உள்ளன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், செம்புச்சத்து, மாங்கனீசு, செலீனியம், சோடியம் போன்றவை காணப்படுகின்றன.

பாலில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, லாக்டின், லாக்டோஸ் என்ற இயற்கை சர்க்ககரைகள், அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

8 அவுன்ஸ் பாலானது 3.5 அவுன்ஸ் சமைக்கப்பட்ட சாலமன் மீனில் உள்ள விட்டமின் டி-யையும், 2 ¼ கப் புரோக்கோலியில் உள்ள கால்சியத்தையும் கொண்டுள்ளது.

மேலும் ஒரு சிறிய வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியத்தையும், இரண்டு சிறிய காரட்டில் உள்ள விட்டமின் ஏ-வையும், ஒரு கப் பீன்ஸில் உள்ள பாஸ்பரஸையும் 8 அவுன்ஸ் கொண்டுள்ளது. (8 அவுன்ஸ் என்பது தோராயமாக 226 கிராம் ஆகும்).

பாலின் மருத்துவப் பண்புகள்

பாலானது உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் இது அன்றாட உணவில் சேர்க்கப்படும் முக்கியமான பானமாக விளக்குகிறது.

பாலானது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை சமநிலைப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாலில் காணப்படும் இயற்கை சர்க்கரை உடலின் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணியாக உள்ளது.

கால்சியத்தின் மூலம்

பாலானது கால்சியத்தின் மூலமாக விளங்குகிறது. கால்சியம் உடலினை புற்றுநோய், எலும்பு முறிவு, வயிற்றுப்போக்கு, தலைவலி, குழந்தைகளின் உடல் பருமன் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினைக் குறைத்து கால்சியம் உடல் பருமனைத் தடுக்கிறது. மேலும் கால்சியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும், எலும்புகளின் பாதுகாப்பிற்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. சந்தையில் மிகவும் எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய கால்சியத்தின் மூலம் பாலே ஆகும்.

இதய நலத்தைப் பாதுகாக்க

கால்சியமானது எலும்புகளை பலப்படுத்துவதோடு இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவை வராமல் தடுக்கவும் செய்கிறது. தினசரி உணவில் கால்சியத்தை எடுத்துக் கொள்வதால் பெருந்தமனித் தடிப்பு, இதயநோய்கள், பக்கவாதம் ஆகியவை தடுக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

எனவே கால்சியத்தை அதிகம் கொண்டுள்ள பாலினை அருந்துவதால் இதயநலத்தைப் பாதுகாக்கலாம். மேலும் பாலில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை இரத்த அழுத்தத்தைச் சீராக்கி உடலின் பாகங்களுக்கு இரத்தத்தை வழங்கி இதயத்தை சீராகச் செயல்படச் செய்கிறது.

பாலில் காணப்படும் பெப்டைடுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் என்சைம்களைத் தடைசெய்து சீரான இரத்த அழுத்தத்திற்கு வழிவகை செய்கிறது. எனவே பாலினை உண்டு இதயநலத்தைப் பேணலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

பாலானது கால்சியத்தையும், பாஸ்பரஸையும் கொண்டுள்ளது. இவை எலும்புகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளின் பராமரிப்பிற்கும் உதவுகின்றன.

பாலானது எல்லா வயதினரும் அருந்தக்கூடிய பானமாகவும் உள்ளது. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலினை அருந்தி எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

பற்களின் பாதுகாப்பிற்கு

பாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை பற்களில் உள்ள எனாமலை அமிலப்பொருட்களிலிருந்து பாதுகாத்து பற்கூச்சத்திலிருந்து விடுதலை அளிக்கிறது.

மேலும் பற்சிதைவு, பற்சொத்தை போன்றவற்றிலிருந்தும் பாலானது நம்மைப் பாதுகாக்கிறது. எனவே பாலினை தினந்தோறும் அருந்தி பற்களைப் பாதுகாக்கலாம்.

உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினைப் பெற

பாலானது அதிகளவு நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது. குடிநீரினைவிட பாலானது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினைத் தருகிறது. நமது உடலானது 80 சதவீதம் நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது.

எனவே உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது நமது வளர்ச்சிதை மாற்றம் பாதிப்படைவதோடு உடல்நலமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே பாலினை அருந்தி உடலின் நீர்ச்சத்தினைப் பாதுகாக்கலாம்.

சரும பாதுகாப்பிற்கு

சருமத்தின் பொலிவினைக் கூட்டவும், வழவழப்பான சருமத்தினைப் பெறவும் பழங்காலத்திலிருந்தே பாலானது பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கும் சரும அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க பாலானது பயன்படுத்தப்படுகிறது.

வறண்ட சருமத்தினை உடையவர்கள் பாலினைத் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் சருமப் பொலிவினைப் பெறலாம். பாலில் உள்ள லாக்டிக் அமிலமானது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

மேலும் பாலில் உள்ள விட்டமின் ஏ-வானது சருமச் சுருக்கம், கரும்புள்ளிகள், காயங்கள் ஆகியவை ஏற்படாமல் சருமத்தைப் பாதுகாக்கிறது.

செரிமானப் பாதையை அமிலத்தன்மையிலிருந்து பாதுகாக்க

பாலினை அருந்தும்போது செரிமானப்பாதையில் ஏற்படும் அமிலத்தன்மையைக் குறைத்து நம்மைப் பாதுகாக்கிறது. குளிர்ந்த பாலானது அமிலப்பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

கேசப் பராமரிப்பிற்கு

கேசத்தை முறையாகப் பராமரிக்க விரும்புபவர்கள் பாலினை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாலானது கேச உதிர்தலைத் தடுத்து கேசத்தை அடர்த்தியாக்கவும், பொலிவாக்கவும் செய்கிறது. இதற்கு பாலில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பி6(பைரிடாக்ஸின்), பொட்டாசியம் ஆகியவை காரணமாகும்.

ஆழ்ந்த தூக்கத்தினைப் பெற

பாலில் உள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள் தூக்கத்திற்கு காரணமான மெலாட்டனின் ஹார்மோனைச் சுரக்கச் செய்கின்றன. படுக்கைக்குச் செல்லும்முன் சூடான பாலினை அருந்துவதால் நாம் ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம்.

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற

பாலானது விட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்களைக் கொண்டுள்ளது. பாலில் உள்ள விட்மின்கள் ஏ, பி போன்றவை கண்பார்வை மேம்பாடு, இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகின்றன.

பாலில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம் போன்றவை முறையே நரம்புகளின் செயல்பாடு, தசைகளின் செயல்பாடு, ஆற்றலை வெளியிட, உடலின் வளர்ச்சி ஆகிய பணிகளைச் செய்கின்றன. பாலானது தினந்தோறும் அருந்தும்போது வயதோதிகத்திலும் நம்மை இளமையாக இருக்கச் செய்கின்றது.

பாலினைப் பற்றிய எச்சரிக்கை

பாலினை அருந்தும்போது லாக்டோஸ் அழற்சி, முகப்பரு, பால்ஒவ்வாமை, எடை அதிகரிப்பு, வயிற்றுவலி, குமட்டல், வாயு, வயிற்றுப்போக்கு ஏற்படால் பாலினை அருந்துவதை தவிர்ப்பது நலம்.

பாலினைப் பாதுகாக்கும் முறைகள்

பாலானது விரைவில் கெட்டுப் போக்கக்கூடிய ஒரு பொருளாகும். எனவே இதனை அறையின் வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது.

இதனை ஏதேனும் பாத்திரத்தில் அடைத்து குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் கீழ் செல்லதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சிய பாலை உறையச் செய்து பயன்படுத்தலாம்.
பாலானது அப்படியேவோ, காய்ச்சியோ பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பாலை அப்படியே குடிப்பதைவிட காய்ச்சிக் குடிப்பதே சிறந்தது.

இயற்கையின் வெள்ளை அமுதமான பாலினை அன்றாட வாழ்வில் அளவாகப் பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.