பாவேந்தர் பாரதிதாசன்

தனது புரட்சிகரமான கருத்துக்களை இனிமையான பாடல் வரிகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் புரட்சி கவி என்றழைக்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.

பாரதிதாசன் கவிஞர், ஆசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், பத்திரிக்கையாளர் என பன்முகம் கொண்டவர். மகாகவி சுப்ரமணிய பாரதியின் மேல் உள்ள ஈடுபாட்டால் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டு அந்தப் பெயரின் மூலமே மக்களால் அறியப்படுகிறார்.

தனது வார்த்தைகளை வாளாக வார்த்தும் மொழியை தேனாக வடித்தும், கம்பீரமாக காலங்களைக் கடந்து இன்றளவும் எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். காலங்கடந்து நிற்கும் இந்த பாவேந்தரைப் பற்றிப் பார்ப்போம்.

 

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

பாரதிதாசன் புதுச்சேரியில் 29.04.1891 புதன் கிழமை கனகசபை, இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். அவர் தந்தை பெயரில் உள்ள கனக என்ற வார்த்தையைச் சேர்த்து கனகசுப்புரத்தினம் என்று அழைக்கப்பட்டார்.

இவருக்கு சுப்புராமன் என்ற தமையனாரும் சிவகாம சுந்தரி, இராசாம்பாள் ஆகிய சகோதரிகளும் இருந்தனர். தந்தை அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார்.

பாரதிதாசன் தனது தொடக்க கல்வியை திருப்புளிச்சாமி ஐயாவிடம் கற்றார். இளம் வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறன் பெற்று இருந்தார். பாட்டிசைப்பதிலும், நடிப்பதிலும் சிறந்து விளங்கினார். புதுவை மகாவித்துவான் ஆ.பெரியசாமிப்பிள்ளை, பங்காரு பத்தர் ஆகியோரிடம் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்த வேதாந்தத்தையும் கற்று தேர்ந்தார்.

சிறு வயதில் சிறு சிறு பாடல்களை சுவையுடன் தோழர்களுக்கு பாடிக் காட்டுவார். தனது 16வது வயதில் கல்வே கல்லூரியில் சேர்ந்து உயர்நிலைக் கல்வி பயின்றார். தனது விடா முயற்சி, தமிழறிவு காரணமாக மூன்றாண்டு பயிலக் கூடிய இளநிலைக் கல்வியை இரண்டே ஆண்டுகளில் முடித்தார். பின்னர் கல்வி அதிகாரியின் உதவியால் காரைக்காலில் உள்ள நிரவியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப் பட்டிருந்ததைக்கண்ட பாரதிதாசன் மனம் வெதும்பினார். வ.உ.சியின் விடுதலை உணர்வால் ஈர்க்கப்பட்டார். தமிழ்நாட்டில் விடுதலைப்போரில் ஈடுபட்ட பாரதியார், வ.வே.சு, அரவிந்தர் போன்றவர்களுக்கு புதுச்சேரியில் அடைக்கலம் அளித்தார்.

பாரதியாரின் இந்தியா ஏட்டை புதுச்சேரியிலிருந்து வெளியிட உதவி புரிந்தார். புதுச்சேரியில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். தேசிய இயக்கத்தில் சேர்ந்து கொண்ட பாவேந்தர் கைத்தறித் துணிகளைத் தெருத் தெருவாக விற்பனை செய்தார்.

 

பாரதியாரின் நட்பு

பாவேந்தர் தனது நண்பரின் திருமண வீட்டில் முதலில் பாரதியாரைச் சந்தித்தார். திருமண வீட்டில் பாரதியாரின் நாட்டுப்புறப்பாடல்களை நண்பர்களிடம் பாடிக்காட்டினார். பாரதியார் திருமண வீட்டில் இருப்பதை பாவேந்தர் அறியவில்லை.

அப்போது அங்கு வந்த பாரதி பாடல்களை பாடச் சொல்ல பாவேந்தர் எங்கெங்கம் காணும் சக்தியடா என்று இரண்டு பாடல்களை பாடினார். அப்போது பாரதியார் சுப்ரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்று எழுதி சுதேச மித்திரனுக்கு அனுப்பினார்.

பாரதியின் எளிமை, தமிழ்புலமை, சாதி, மதம் கருதாத தெளிந்த உறுதியான கருத்துக்கள் ஆகியவை பாவேந்தரை வெகுவாக ஈர்த்தன. அதன் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். பின் அப்பெயர் மூலமாகவே அறியப்பட்டார்.

பின்னாளில் அப்பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியபோதும் மாற்ற மறுத்துவிட்டார். சாதிக் கொடுமையை உண்மையாக எதிர்த்தவர் பாரதி. அவரைப்போலவே எளிய நடையில் மக்களுக்கு வேண்டிய கருத்தை இயற்ற வேண்டும் என்பதால் தான் பாரதிதாசன் என வைத்துக் கொண்டேன். யார் எதிர்த்தாலும் கவலை இல்லை என்று கூறினார்.

 

ஆசிரியப் பணி

நிரவியில் முதலில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். தமிழில் புலமை மிக்கவராதலால் கல்லூரிப் படிப்பை முடித்தஉடன் காரைக்காலில் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராக செயல்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டு 1 ¼ வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டார். பின் பாவேந்தரின் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். வேலை நீக்க வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் ஆசிரியரானார்.

 

இல்லற வாழ்க்கை

1920ல் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை திருமணம் செய்தார். இவருக்கு சரசுவதி, வசந்தா, ரமணி ஆகிய மகள்களும் மன்னர் மன்னன் என்ற மகனும் பிறந்தனர்.

 

கவிஞர், பகுத்தறிவாளர்

ஆரம்பத்தில் மயிலம் சுப்பிரமணியம் துதியமுது என்ற நூலை எழுதினார். பாரதியாருடன் ஏற்பட்ட நட்பால் தேசிய மற்றும் சமத்துவப் பாடல்களான சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் படைப்பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு, சஞ்சீவினி பருவதத்தின் சாரல் ஆகியவற்றைப் பாடினார்.

புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எஎஸ்.ஆர், கண்டெழுதுவோன் கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ்.பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை போன்றவற்றை எழுதினார். கோழி, புறா, பசு மூன்றும் பாவேந்தர் விரும்பியவை. டேய் என்பார் கோழியை, வாம்மா என்பார் சேவலை, இவை மூன்றும் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறி தானும் வளர்த்து வந்தார்.

கே.எஸ்.பாரதிதாசன் என்ற தனது புனைபெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி தேச சேவன், துய்ப்ளேச்சு, புதுவை கலைமகள், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் இதழ்களில் பாடல், கட்டுரை, கதைகளை எழுதினார்.

பாரதிதாசன் எழுதிய சிறுகதைகள், பாரதிதாசன் கதைகள், ஏழைகள் சிரிக்கிறார்கள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ அல்லது வாரிவயலார் விருந்து என்கின்ற தலைப்பில் புதுவை முரசு இதழில் நெடுங்கதை ஒன்றை எழுதியுள்ளார்.

இரணியன் அல்லது இணையற்ற வீரன், நல்ல தீர்ப்பு, கற்கண்டு, அமைதி, சௌமியன், படித்த பெண்கள், சேரதாண்டவம், கழைக்கூத்தின் காதல், பாரதிதாசன் நாடகங்கள், பிசிராந்தையார், தலைமை கண்ட தேவர் கோயில், இரு கோணங்கள் ஆகிய 12 நாடக நூல்களை வெளியிட்டுள்ளார்.

மூட நம்பிக்கையை பகுத்தறிவு பொண்டு விரட்ட வேண்டும் என்று கூறினார். சமூகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் கல்வி வழங்க வேண்டும். பெண் கல்வி மூலமே வீடும், நாடும் சிறக்கும் என்பதனை கூறியவர்.

பாரதியின் மறைவுக்குப் பிறகு பெரியாருடன் பழகும் வாய்ப்பு பாவேந்தருக்கு கிடைத்தது. அதன் விளைவாக சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து பகுத்தறிவுக் கவிஞரானார். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை குடியரசு இதழில் தொடர்ந்து எழுதினார்.

சமயத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் சமூகத்தில் நிலவி வந்த சீர்கேடுகளை சாடினார். மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்டி, சமூக மாற்றத்திற்கு வித்திட்டார். எனவே புரட்சிக் கவி என்றழைக்கப்பட்டார்.

 

திரைப்படத் துறையில் பாரதிதாசன்

மக்களிடையே கருத்துக்களை எளிதில் பரப்ப திரைப்படமே சிறந்த சாதனம் என்பதை உணர்ந்த பாரதிதாசன் 1957 முதல் 1963 வரை ஆறு ஆண்டுகள் திரைப்படத்துறையில் தீவிரமாக ஈடுபட்டார்.

பாலாமணி அல்லது பக்தாத் திருடன், கவிகாளமேகம், சுலோசனா, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல்களை எழுதினார்.

வளையாபதி என்ற படத்தில் பாவேந்தர் எழுதிய பாடல் வரிகளை அவரைக் கேட்காமல் மாற்றியதற்காக கோபம் கொண்டு மார்டன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

பாரதிதாசன் பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி தாம் எழுதிய பாண்டியன் பரிசு என்ற நூலை படமாக்க முயற்சித்தார். ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது. மகாகவி பாரதியார் என்ற தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கையை திரைப்படமாக்க விரும்பி, திரைக்கதை உரையாடல்கள் எழுதி முடித்த நிலையில் போதிய பணமின்மை,பண உதவி கிடைக்கப் பெறாததால் முயற்சி தோல்வி அடைந்தது.

1954ல் புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்று சட்ட மன்ற உறுப்பினராகி சட்டமன்றத்திற்கு தலைமை வகித்தார். 1960ல் நடைபெற்ற புதுவை சட்ட மன்ற தேர்தலில் தோல்வியுற்றார். 1964ல் ஏப்ரலில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக 21.04.1964ல் இயற்கை எய்தினார். 22.04.1964ல் புதுவையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை பாவேந்தர் தமிழ் மொழிக்கு வழங்கி இருந்தாலும் அவரது மிகச் சிறந்த படைப்புகளில் சில:

பாண்டியன் பரிசு

எதிர்பாராத முத்தம்

அழகின் சிரிப்பு

இருண்ட வீடு

குடும்ப விளக்கு

தமிழச்சியின் கத்தி

இளைஞர் இலக்கியம்

பெண்கள் விடுதலை

தமிழ் இயக்கம்

பாரதிதாசன் ஆத்திசூடி

குறிஞ்சித் திட்டு மற்றும் பல.

 

அ என்றால் அணில் என்பதற்கு பதிலாக‌ அம்மா என்று பாட புத்தகத்தில் மாற்றிய பெருமை பாவேந்தரையே சாரும். குடும்பக் கட்டுப்பாடு பற்றிய கவிதைகளை முதலில் பாடியவரும் இவரே.

 

விருதுகள்

1946ல் அமைதி-ஊமை என்ற நாடகத்திற்கு தங்ககிளி பரிசளிக்கப்பட்டது. அதே ஆண்டு அறிஞர் அண்ணா “புரட்சிக்கவி” என்று பாராட்டி ரூ.25000 ரொக்கம் வழங்கி கௌரவித்தார். பெரியார் இவரை புரட்சிக் கவிஞர் என்று பாராட்டினார்.

1970ல் இவரின் பிசிராந்தையார் என்ற நாடகத்திற்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1968ல் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவச் சிலை நாட்டப் பெற்றது. 1971 முதல் பாவேந்தரின் பிறந்த நாளை அரசு விழாவாக புதுவை அரசு கொண்டாடி வருகிறது.

பாவேந்தர் வசித்த வீட்டை அரசுடமையாக்கி நினைவு நூலகம், காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1978 முதல் தமிழக அரசு பாவேந்தர் பிறந்த நாளை விழாவை அரசு விழாவாக கொண்டாடியது. மேலும் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தியது.

1990ல் பாவேந்தர் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 26,27ல் தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. மேலும் பாவேந்தரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. 2001ம் ஆண்டில் மத்திய அரசு பாவேந்தர் திருவுருவப் படத்தை உடைய அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 2005ல் புதுச்சேரி அரசால் பாவேந்தர் பற்றிய ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

– வ.முனீஸ்வரன்