பாவ் பாஜி

பாவ் பாஜி செய்வது எப்படி?

பாவ் பாஜி மும்பையின் புகழ் பெற்ற உணவு ஆகும். இப்போது இந்தியா முழுவதும் பலர் இதனை விரும்புகின்றனர்.

பாவ் பாஜி என்பது ரொட்டியுடன் (பன்னுடன்) மசால் காய்கறி சேர்த்து செய்யப்படுகிறது. பாவ் என்பது ரொட்டியையும், பாஜி என்பது மசால் காய்கறியையும் குறிக்கும்.

பாஜி என்னும் காய்கறி மசாலுக்குத் தேவையான மசாலா பொடியை வீட்டிலேயே தயார் செய்யலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் பொடியையும் வாங்கி உபயோகிக்கலாம்.

வீட்டிலேயே பாவ் பாஜி மசாலா பொடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ரொட்டியின் இனிப்பு சுவையுடன் மசால் காய்கறியின் புளிப்பு கலந்த காரச் சுவையை இணைத்து உண்ணும்போது நாவிற்கு சிறந்த விருந்தாக இது அமைகிறது.

பாவ் ரொட்டி கடைகளில் கிடைக்கும். அல்லது நம் ஊரில் கிடைக்கும் வட்ட பன்னையே பாவ்வாக உபயோகிக்கலாம்.

இனி வீட்டிலேயே சுவையாக எளிமையான முறையில் பாவ் பாஜி தயார் செய்வது பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாவ் தயார் செய்ய

பாவ் பன் – 10 எண்ணம்

வெண்ணெய் – 75 கிராம்

பாஜி தயார் செய்ய

உருளைக்கிழங்கு – 2 எண்ணம் (200 கிராம்)

பட்டாணி – 100 கிராம்

காரட் – 100 கிராம்

குடை மிளகாய் – 50 கிராம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (பெரியது)

கொத்த மல்லி இலை – ஒரு கைபிடி அளவு

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

பாவ் பாஜி மசாலா – 4 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

வெண்ணெய் – 40 கிராம்

உப்பு – தேவையான அளவு

பாவ் பாஜி செய்முறை

பட்டாணியை சுமார் 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கினை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

காரட்டை கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

குடைமிளகாயினை அலசி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

தக்காளியை அலசி வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

பச்சைப் பட்டாணி இருந்தால் காய்ந்த பட்டாணிக்குப் பதில் அதனை உபயோகிக்கலாம்.

குக்கரில் நறுக்கிய உருளைக்கிழங்கு, காரட் மற்றும் ஊற வைத்த பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து, அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி ஆறு விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பினை அணைத்து விடவும்.

வேக வைக்கும் போது

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து உள்ளே உள்ள காய்கறிகளை தண்ணீருடன் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் 20 கிராம் அளவு வெண்ணெய் சேர்த்து உருகியதும் ,அதில் சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் சேர்த்ததும்

வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும், அதில் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வாசனைப் போகும் வரை வதக்கவும்.

இஞ்சி,பூண்டு விழுது சேர்த்ததும்

வெங்காயத்துடன் பாவ் பாஜி மசாலாப் பொடி, மிளகாய் வற்றல் பொடி சேர்த்து இரு நிமிடங்கள் வதக்கவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்

அதனுடன் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்.

தக்காளி சேர்த்ததும்

பின்னர் அதனுடன் கொத்தமல்லி இலையைச் சேர்த்து வதக்கவும்.

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

ஒரு நிமிடத்திற்கு பின்பு குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

குடைமிளகாயைச் சேர்த்ததும்

குடைமிளகாய் ஓரளவு வதங்கியதும் வேக வைத்து மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

காய்கறிகளைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ஒருகொதி வந்ததும் அடுப்பினை மிதமான தீயில் வைத்து லேசாக கெட்டிபடத் தொடங்கியதும், மீதமுள்ள 20 கிராம் வெண்ணையைச் சேர்த்து கிளறவும்.

வெண்ணை சேர்த்ததும்

கலவை கூழ்ம நிலைக்கு வந்ததும் கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும்.

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

பாஜி மசாலா தயார்.

எல்லா பாவ் பன்னையும் குறுக்குவாக்கில் முக்கால் பாகம் வெட்டிக் கொள்ளவும்.

பாவ் பன்னை முக்கால் பாகம் வெட்டியதும்

தோசைக்கல்லினை அடுப்பில் வைத்து சூடேறியதும், அதில் சிறிதளவு வெண்ணையைச் சேர்த்து உருகியதும், குறுக்குவாக்கில் விரித்து வெண்ணையின் மீது வைக்கவும். பன்னின் மேற்பகுதியில் வெண்ணையைத் தடவவும்.

பாவ் பன்னை தோசைக்கல்லில் வைத்ததும்

பன்னை திருப்பிப் போட்டு இருபுறமும் லேசாக நிறம் மாறும்வரை மட்டும் ரோஸ்ட் செய்யவும்.

சூடான பாவுடன் பாஜி சேர்த்து பரிமாறவும். சுவையான பாவ் பாஜி தயார்.

பாவ் பாஜி
பாவ் பாஜி

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் காலிபிளவரை சேர்த்து பாஜி மசாலா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.