பாஸ்தா செய்வது எப்படி?

பாஸ்தா இத்தாலிய உணவு வகையாகும். இதனை நம்முடைய பாணியில் அசத்தலான சுவையில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்

பாஸ்தா நீண்ட குழல், திருகு, பாதிவளைந்த குழல் என பல வடிவங்களில் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த வடிவினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்தா – 100 கிராம்

கேரட் – 25கிராம்

பச்சைப் பட்டாணி – 25 கிராம்

சின்ன வெங்காயம் – 25 கிராம்

காலிபிளவர் – 2 இதழ்கள்

தக்காளி – 25 கிராம்

இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 5 இதழ்கள் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

கொத்த மல்லி இலை – 3 கொத்து

மசாலா பொடி – 1½ ஸ்பூன்

கரம் மசாலா பொடி – ¾ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

சீரகம் – ¼ ஸ்பூன்

 

செய்முறை

முதலில் வாயகன்ற பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் பாஸ்தாவைப் போட்டு வேகவிடவும்.

பாஸ்தா கையில் எடுத்து நசுக்கினால் நசுக்குப்படும் அளவிற்கு (முக்கால் பாகம் வெந்தால்) வேகவைத்தால் போதுமானது.

பாஸ்தாவை வடிதட்டில் போட்டு நீரினை வடித்து தனியே வைத்துக் கொள்ளவும்.

 

வேகவைத்து வடித்த பாஸ்தா
வேகவைத்து வடித்த பாஸ்தா

 

பின் காரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக சதுரத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பட்டாணியை தோலுரித்து அலசி வைத்துக் கொள்ளவும்.

காலிபிளவரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூன்று நிமிடம் கழித்து வெளியே எடுத்து சிறுதுண்டுகளாக்கவும்.

தக்காளியை கழுவி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும்.

பூண்டு இதழ்களை தோலுரித்துக் கொள்ளவும்.

இரண்டு பூண்டு இதழ்களை இஞ்சியுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

மீதமுள்ள மூன்று பூண்டு இதழ்களை வில்லைகளாக வெட்டவும்.

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை அலசி காம்பு நீக்கி நேராகக் கீறிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

 

நறுக்கிய பொருட்கள்
நறுக்கிய பொருட்கள்

 

வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

 

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

 

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து இஞ்சி வெள்ளைப்பூண்டு விழுது, வெள்ளைப்பூண்டு வில்லைகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம், வெள்ளைப்பூண்டினை வதக்கும்போது
வெங்காயம், வெள்ளைப்பூண்டினை வதக்கும்போது

 

பின் அதனுடன் காரட், பச்சைப் பட்டாணி, காலிபிளவர், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் ஓரளவு வதங்கியபின் தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

காய்கறிகளை வதக்கும்போது
காய்கறிகளை வதக்கும்போது

 

பின் அதனுடன் சிறிதளவு நீர், மசாலா பொடி, கரம் மசாலா பொடி, தேவையானஉப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 

மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும்
மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும்

 

 

காய்கறிக் கலவை கெட்டியானதும்
காய்கறிக் கலவை கெட்டியானதும்

 

மசாலா வாடை மாறியதும் வேக வைத்து வடித்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.

 

பாஸ்தாவைச் சேர்த்துக் கிளறும்போது
பாஸ்தாவைச் சேர்த்துக் கிளறும்போது

 

கலவை கெட்டியானதும் அடுப்பினை அணைத்து விடவும்.

பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து ஒரு சேரக் கிளறிவிடவும்.

 

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்
கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

 

சுவையான பாஸ்தா தயார். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

 

சுவையான பாஸ்தா
சுவையான பாஸ்தா

 

குறிப்பு

பாஸ்தாவை குழைய வேகவிடக் கூடாது.

விருப்பமுள்ளவர்கள் முருங்கை பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்தும் பாஸ்தாவைத் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.