மதுரை மாவட்டம் அரசு பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி சில மணிநேரங்களில், மாணவ மாணவியரின் சலசலப்பு சப்தம் அதிகமாக இருந்தது.
தேர்வு முடிவை பார்த்து சற்று கலக்கத்துடன் இருந்தான் அருண். 500 மதிப்பெண்ணுக்கு 488 எடுத்து பள்ளியில் முதல் மாணவன் என்ற பெருமை இருப்பினும் முகத்தில் கவலை.
அருணின் அப்பா வேலுசாமி அவனை நோக்கி வந்தார்.
“அருணு! ரொம்ப சந்தோசம்பா. நீ தான் மாவட்ட அளவில் முதல் இடம். உன்ன நெனச்சு ரொம்ப பெருமையா இருக்குடா!“ என்று அருணை கட்டி தழுவினார்.
அருண் அதனை விரும்பவில்லை. சோகம் முகத்தில்.
“விடுங்க அப்பா. நானே மார்க் கம்மியா வந்திருக்குன்னு கவலையோட இருக்கேன். 495க்கு மேல எதிர்பார்த்தேன். கம்மியா இருக்குன்னு கவலையோட இருக்கேன்.” என்று அருண் தன் அப்பா வேலுசாமியிடம் கூறினான்.
“அருண்! இதுவே நல்ல மார்க்கு தான். கவலைபடதா! நீ தான் முதல் மாணவன்!“ என்று வேலுசாமி எவ்வளோ எடுத்து கூறியும், அவன் மனது அந்த பேச்சை கேட்க மறுத்தது.
இதனை அருகில் நின்று கவனித்த அருணின் வகுப்பு நண்பன் பாஸ்கரும் , பாஸ்கரின் அப்பா பிச்சையும் சிரித்தபடி அருணுக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினார்கள்.
“அருண்! எதுக்கு கவலைபடுற? இந்த மதிப்பெண் மட்டும் தான் உன் வாழ்க்கையை மாற்ற போறது இல்லை. இது ஒரு அடிப்படை கல்வி தான்.
என் மகன் பாஸ்கர் எவ்வளோ எடுத்திருக்கான் பார்த்தியா?. 500 க்கு வெறும் 220 தான் எடுத்திருக்கான்.
அதுக்காக நான் அவன திட்டல! அடிக்கல! இது ஒரு சின்ன தேர்வு தான். இதுல தோத்துட்டா வாழ்க்கையே போயிருமான்னு கேட்டா இல்ல. “
அவ்வளவு ஏன், நான் 10ம் வகுப்பு பெயில். என் கூட படித்த சகாதேவன் அதிக மார்க் எடுத்து மெடல் வாங்கினான்.
இப்போ நான் முதலாளி , அவன் என்கிட்ட கணக்கு பிள்ளையா வேலை பார்க்கிறான்.
அதனால மார்க் குறைவா எடுத்தேன்னு கவலை படாமா அடுத்த நகர்வுக்கு நகர்ந்து போகணும்.”
“மதிப்பெண் மட்டும் வாழ்க்கைய தீர்மானிக்காது. ஒவ்வொருவரின் நம்பிக்கை , துணிச்சல் அவர்களின் நல்ல தைரியமான முடிவு தான் வாழ்க்கைய தீர்மானிக்கும்.
மனதளவில் அனைவரும் தைரியத்துடன் வெற்றி தோல்வியை எதிர் கொள்ள வேண்டும். தோல்வி தான் நமக்கு நல்ல ஒரு பாடத்தை கற்று கொடுக்கும்.
தோற்றால் வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு தவறான முடிவுக்கு போக கூடாது. தோல்வியில் இருந்து வெளிவந்து வெற்றியை நோக்கி நடையை கட்ட வேண்டும்!” என்று பாஸ்கரின் அப்பா பிச்சை கூறினார்.
அப்போது தான் அருண் மனதில் சற்று தெளிவு கிடைக்க ஆரம்பித்து , முகத்தில் இருந்த கவலை கலைய ஆரம்பித்தது.
மாணவ, மாணவியர்களே! வெற்றி தோல்வியை ஏற்று கொள்ளும் மனபக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
எதனையும் நல்ல எண்ணத்துடன், நல்ல முடிவை பற்றி தான் சிந்திக்க வேண்டும்.
தவறான முடிவை பற்றி சிந்திக்க கூடாது. உங்கள் கையில் தான் வருங்கால இந்தியா உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!