பிச்சை புகினும் குறும்படம் விமர்சனம்

பிச்சை புகினும் குறும்படம், கொரானாக் காலத்தில் ஒர் ஏழைப் பெண்ணின் படிப்பிற்காகக் குடும்பத்தினர் படும்பாட்டை விளக்குகிறது.

சமூக வரலாற்றில், பல்வேறு கொடுமைகளைச் சந்தித்தது இந்தக் கொரானாக் காலம்.

பணக்காரர்கள் தவிர்த்து, நடுத்தர மக்களும், ஏழைகளும் மிகக் கடுமையாகப் பாதித்து இருந்தனர் என்பதை இக்கால இலக்கியங்கள் நிறையவே பதிவு செய்து வைத்திருக்கின்றன.

சோகம், துன்பம், பயம், இயலாமை, விரக்தி மற்றும் போதாமை என ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு கொடுமை நடந்து கொண்டேதான் இருந்தது இக்காலத்தில்.

ஏழ்மையின் பிடி, வாழ முடியாமல் நெருக்கிக் கொல்லும் தன்மை உடையதாக இருந்தது.

நரகத்தைக் கண்ணால் கண்டும், மன வலிமையால் அதைத் தூக்கி வாரிப் போட்டுக் கடந்து போகும் வல்லமை, பணக்காரர்களுக்கு இல்லாததாக இருந்தது.

அது ஏழைகளின் வாழ்க்கையாக அமைந்திருந்தது.

உயர்ந்த நோக்கமும் இரக்கமும் உண்மையான வாழ்க்கையும் பலநேரம் பல ஏழைகளின் வீட்டில் குடி கொண்டிருப்பதை உணர்ந்து, படைப்பாளர்கள் பல உன்னதமான உயர்ந்த படைப்புகளாக அவற்றை மாற்றி விட்டனர்.

இதன் ஒரு பகுதிதான் இப்படம் போன்ற முயற்சிகள்.

படைப்பாளனின் கண்ணில் வேஷங்கள் அவ்வளவு சீக்கிரம் எடுபடாது. ஆனால், உண்மையான உலகம் அவன் கண்ணில் நெருடும். அவன் மனதை அது வாட்டும்.

சொல்லவொனா வலி அவன் நெஞ்சைக் கிழிக்கும். அப்படிப்பட்ட இரத்தக் கண்ணீரை வரவழைக்கும் படைப்புதான் பிச்சை புகினும் எனும் இப்படம்.

குறும்படத்தின் கதை

கைத்தையல் மிஷினில் தைக்கும் ஒரு தையல் தொழிலாளி.

ஏழ்மையான குடும்பம், மனைவி இல்லத்தரசி. ஒரே ஒரு மகள். இதுதான் இந்த ஏழ்மைக் குடும்பம்.

கொரனாக் காலம் வந்தது. தினமும் 300 அல்லது 500 ரூபாய் சம்பாதிக்க வேண்டிய நேரத்தில், ஐம்பதும் நூறும் தான் கிடைத்தது.

நல்ல படிப்பைத் தன் மகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற தந்தை, அரசு பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் ஆசையோடு சேர்த்திருந்தார்.

இந்தக் காலத்தில் ”பாடம் படிப்பதற்கு வீடியோ வசதியுள்ள செல்போன் வேண்டும். அதில்தான் எனக்குப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே நல்ல வசதியுடன் கூடிய, கேமராவுடன் கூடிய செல்போனை வாங்கித் தாருங்கள்” என்று மகள் கேட்கிறார்.

அதைப் பற்றியே தெரியாத தகப்பனார், ”நான் வாங்கித் தருகிறேன்” என்று கூறி கிளம்புகிறார்.

தாயோ ”அன்றாடம் கஞ்சிக்கே வழியில்லை, இப்பொழுது எப்படிச் செல்போன் வாங்கித் தருவீர்கள், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், அரசு பள்ளித் திறக்கட்டும். அங்குக் கொண்டுபோய் உன்னைச் சேர்த்து விடுகிறேன் அமைதியாக இரு” என்கிறாள்.

தந்தை, மகளை எப்படியாவது சிறந்த படிப்பைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்று பல பேர்களின் கால்களில், கைகளில் விழுந்து கெஞ்சுகிறார். கடன் கேட்கிறார்.

சொந்தக்காரர்களிடம் இரவலாகச் செல்போன் தாருங்கள் என்று கேட்கிறார். ஆனாலும் கிடைக்கவில்லை. அனைவரும் உதவி செய்யாமல் உதறித் தள்ளுகிறார்கள்.

“உன் மகளுக்கு ஏன் படிப்பு?” என்று நெஞ்சில் உதைக்கிறார்கள். இந்த அவமானங்களை எல்லாம் தாண்டியும் கூடத் தன் மகளை எப்படியாவது படித்துப் பெரிய ஆளாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.

மனம் சோர்ந்து போய்த் திரும்புகையில், யாருமில்லாத அந்தச் சாலையில் ஒரு செல்போன் அனாதையாகக் கிடக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

மகள் அன்போடு, ”இன்று செல்போன் வாங்கி வந்தீர்களா?” என்று கேட்கிறார்.

பதில் ஏதும் கூறாமல், உணவு கூட உண்ணாமல், மனைவியுடன் கூடப் பேசாமல் அமைதியாகப் படுத்து யோசிக்கிறார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் தூங்காமல் விழித்திருக்கும் கணவனுடன், ”விடுங்கள் நல்ல காலம் பிறக்கும்” என்று மனைவி கூற, அந்தக் கீழே கிடந்த செல்போனை எடுத்து வந்து தன் மனைவியிடம் காட்டுகிறார்.

மிகச் சரியான வாழ்க்கை வாழ்கின்ற, உண்மையிலேயே உயர்ந்த நோக்குடைய அந்தத் தாய், ”மற்றவர்களின் செல்போன் நமக்கு வேண்டாம். இதைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறுகிறாள்.

அதைத்தான் நானும் யோசித்தேன் என்று கூறி அந்தச் செல்போன் அழைப்பை ஏற்று, ”நாளை காலை உங்களுக்குச் செல்போன் தருகிறேன். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று உரியவரிடம் கூறுகிறார்.

மறுநாள், அந்தச் செல்போனை அதற்கு உரியவரிடம் கொடுக்கிற பொழுது, ”என் மகளின் படிப்பிற்காக ஒரு செல்போன் தாருங்கள். நான் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் தந்து விடுகிறேன்” என்று கெஞ்சிக் கேட்கிறார்.

இவ்வளவு உண்மையாக இருக்கின்ற, இந்த ஏழ்மையாளரின் நிலைமையைப் பார்த்து அவர் மனைவி, அவரிடமிருந்த தேவையற்ற ஒரு உயர்ந்த செல்போனை இவருக்குக் கொடுக்கும்படிக் கூறுகிறார்.

அவரும், அன்போடு இந்த ஏழையிடம், ”நீங்கள் உங்கள் மகளின் படிப்பிற்காக இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்.

காலையில், தன் மகள் தனியார் பள்ளியின் ஆடையுடன், செல்போன் முன்னதாக அமர்ந்து பாடங்களைக் கேட்டுப் படித்துக் கொண்டிருப்பதை, மிகுந்த ஆசையுடன், ஆவலுடன் கணவனும், மனைவியும் கண்டு ரசிக்கின்றனர். ஆனந்தம் அடைகின்றனர்.

இனம் புரியாத மகிழ்ச்சி அவர்களிடம் அப்பொழுது இருந்தது.

வகுப்பு முடிகின்ற நேரத்தில், ஆசிரியை, இந்த ஏழை பெண்ணின் பெயரைச் சொல்லி, ”இன்னும் நீ பள்ளிக்கூடத்திற்குக் கட்டணத்தைக் கட்டவில்லை. கட்டவில்லை என்றால் தேர்வு எழுத முடியாது” என்று செல்போன் மூலமாக அறிவிக்கிறார்.

இப்பொழுதுதான் தந்தையும் தாயும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதற்கடுத்த இடி விழுகிறது.

இவ்வாறு இந்தச் சோகமான காட்சிகளுடன் பிச்சை புகினும் குறும்படம் முடிகிறது.

குறும்படத்தின் சிறப்பு

தந்தையாக நடித்த ஜெயபாலன், மிக அற்புதமாக உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார்.

தாய் நடிகையாக நடித்த விஜயலட்சுமி அவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

படிக்கும் மாணவியாக வீரமணி அவர்களும் தன் ஏழ்மையை, விரக்தியை தன் நடிப்பில் காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவு சொல்லவே வேண்டாம். அற்புதத்தில் அற்புதம். இரவுக் காட்சிகள், சைக்கிளில் போகும் காட்சிகள், க்ளோசப் காட்சிகள் மிக அருமை. ஒளிப்பதிவு நேர்த்தியை மிக நுணுக்கமாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கணவனும் மனைவியும் தூக்கம் வராமல் தம் ஏழ்மை நிலையைப் பேசும் க்ளோசப் காட்சிகள், ஏழ்மையின் வலியைக் காட்டுகின்றன. காட்சிகள் வழி ஒளிப்பதிவாளர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்திறன் மிகுந்த பாராட்டிற்குரியது.

சோகமான காட்சிகளில் இசை கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

கதை சொன்ன விதமும் கதையின் காட்சிகளும் திரைக்கதை அமைப்பில் கட்சிதமாக உள்ளன.

இயக்குனர், மதரீதியான ஒற்றுமைகளை இந்தக் குறும்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். எவ்வாறென்றால், கதையின் கதாநாயகன் இந்துவாகவும் இவருக்காக உதவுபவர்கள் இஸ்லாமியர்களாகவும் காட்டியுள்ளார். சிறப்பு.

தர்காவிற்கு முன் இப்படி ஒரு எதார்த்தம் நடந்தால், அது உலகத்துக்கே முன்மாதிரி என்கிற வகையிலான ஒரு காட்சியமைப்பு.

இவையெல்லாம் எந்த இடத்திலும் பிசகாமல் அற்புதமாக எடுத்திருக்கிறார். இயக்குனருக்கு இந்த இடத்தில் பாராட்டுகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியாது.

இந்து, இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் வாழுகின்ற எத்தனையோ கிராமங்கள் இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கின்றன. அதை அற்புதமாகக் காட்சியமைப்பில் இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடைசிக் காட்சியில், கல்விக் கட்டணத்தைக் கட்டினால்தான் தேர்வு எழுத முடியும் என்று ஆசிரியைக் கூறி முடித்தவுடன், ஒரு சோக நிலை.

கேமரா அப்படியே மூன்று பேர்களையும் காட்டிவிட்டுக் கடைசியாக அந்த வீட்டில் வளர்த்த செல்லப் பிராணியான ஆட்டின் முகத்தையும் காட்டிப் படத்தை முடிக்கிறது; அந்த ஆட்டைக் கல்விக் கட்டணத்திற்கு விற்கப் போகிறார்கள் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது. அது இயக்குனரின் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது.

குறும்படத்தின் குறை

தோழிகள் இருவரும் பேசுகிற பொழுது, திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசுகின்றனர். பிறகு, தந்தை, தாய் இருவரும் குடும்பத்தில் பேசுகிற பேச்சும், தன் மகளிடம் பேசும் பேச்சும் வேறு வட்டார வழக்கில் இருக்கிறது. இந்த இடத்தில் வசனகர்த்தா குழம்பி இருக்கிறார்.

படக்குழு

இயக்கம்: சையத் மஜீத்

ஒளிப்பதிவு: பொஞ்செய்கொடி-யாழினி ரமேசன்

இசை: மணல்

நடிகர்கள்: ஜெயபாலன், விஜயலட்சுமி வீரமணி

தயாரிப்பு: பிஸ்மி பிக்சர்ஸ்

பிச்சை புகினும் குறும்படம் பாருங்கள்

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

2 Replies to “பிச்சை புகினும் குறும்படம் விமர்சனம்”

 1. மறுபடியும் ஒரு குறும்படம்.
  இது ஒரு பெரும் படம்.
  எப்போதும் போல் இதயத்தை பிடுங்கும் காட்சிகள்!

  மகளுக்கு செல்போன் கிடைத்ததும், படம்தான் என்று நினைக்காமல் நானும் உயிர் உருகி நின்றேன்!
  இதுவே படைப்பின் ரகசியம்; ரசிப்பின் உச்சம்.

  மக்களின் வரிப் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டி, ஏதேதோ வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் ..

  இல்லையென்றால் மக்களின் வரி பணத்தை எடுத்துக் கொண்டு, வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார்கள்.

  இலவசமாய் கிடைக்க வேண்டிய கல்வியைக் காசாக்குகிறார்கள்.

  அரசாங்கம் நடத்த வேண்டிய கல்விச் சாலையை தனியாரும், தனியார் நடத்தவேண்டிய மதுக்கடையை அரசாங்கமும் நடத்துகிறது.

  இந்த நிலை என்று மாறும்? ஏழையின் வேதனை எப்போது தீரும்? எதுவும் தெரியவில்லை.

  படத்தில் கிளைமாக்ஸ் சீனில் வரும் ஆடு போல், நாம் பலியாடுகளாய் வாழ்ந்து மடி கிறோம்.

  பாரதி சந்திரன் அவர்களின் இந்த விமர்சனம் என்னையும் படம் பார்க்க தூண்டியது.

  எல்லோரும் பார்க்க வேண்டிய படம்தான்! தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்தான்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.