பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

 

பிடி கொழுக்கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று.

விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம்.

கையால் பிடித்து செய்யப்படுவதால் இக்கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது.

இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று.

இனி சுவையான பிடி கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – கால் படி (400 கிராம்)

கருப்பட்டி – 150 கிராம்

தேங்காய் (பெரியது) – ¼ மூடி

ஏலக்காய் – 4 எண்ணம்

சுக்கு – சிறிதளவு

தண்ணீர் – ஒரு குழிக்கரண்டி அளவு

 

செய்முறை

பச்சரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு இரண்டு நிமிடம் துணியில் உலர விடவும்.

 

நனைய வைத்த பச்சரிசி
நனைய வைத்த பச்சரிசி

 

பச்சரிசியை மிக்ஸியிலோ அல்லது மிசினிலோ  இடிக்கவும்.

பின் பச்சரிசி மாவினை சல்லடையில் (பெரிய ஓட்டையில்) போட்டு சலித்து வைத்துக் கொள்ளவும்.

 

மாவு சலித்தல்
மாவு சலித்தல்

 

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

ஏலக்காய் மற்றும் சுக்கினை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அடித்துக் கொள்ளவும்.

கருப்பட்டியை சிறுதுண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு குழிக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் சிம்மில் வைக்கவும்.

கருப்பட்டிக் கலவையை கரண்டியால் கிண்டி விடவும்.

கருப்பட்டி முழுவதும் கரைந்ததும் கருப்பட்டிப்பாலை அடுப்பில் இருந்து இறக்கவும்.

 

கருப்பட்டிப்பால் தயாராகிறது
கருப்பட்டிப்பால் தயாராகிறது

 

பின் அதனை வடிகட்டி சலித்த பச்சரிசி மாவில் சேர்க்கவும்.

 

கருப்பட்டிப்பாலை மாவுடன் கலக்கும்போது
கருப்பட்டிப்பாலை மாவுடன் கலக்கும்போது

 

மாவில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய், சுக்கு தூளை சேர்க்கவும்.

பின் மாவினை ஒரு சேரக் கிளறவும்.  மாவானது ஓட்டாமல் ஒன்று திரண்டு வரும்.

 

திரட்டிய மாவு
திரட்டிய மாவு

 

இப்பொழுது சிறிதளவு மாவை எடுத்து கையில் வைத்து கைதடம் பதியுமாறு கொழுக்கட்டையாகத் திரட்டவும்.

இவ்வாறு எல்லா மாவையும் கொழுக்கட்டைகளாகத் திரட்டவும்.

 

மாவை பிடிக்கும்போது
மாவை பிடிக்கும்போது

 

பின் கொழுக்கட்டைகளை இட்டி தட்டில் அடுக்கி இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

 

கொழுக்கட்டைகளை வேக வைக்கும் முன்பு
கொழுக்கட்டைகளை வேக வைக்கும் முன்பு

 

சுவையான பிடி கொழுக்கட்டை தயார்.

இதனை குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.

 

சுவையான பிடி கொழுக்கட்டை
சுவையான பிடி கொழுக்கட்டை

 

குறிப்பு

விருப்பள்ளவர்கள் கருப்பட்டிக்குப் பதில் மண்டை வெல்லம் சேர்த்தும் இக்கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் பாசிப்பருப்பை வறுத்து கருப்பட்டிபால் சேர்க்கும் முன் கொழுக்கட்டை மாவில் சேர்த்து இக்கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

கருப்பட்டிபால் தயார் செய்ய தண்ணீரின் அளவினை சரியாக வைத்துக் கொண்டால் கொழுக்கட்டை மாவு சரியான பதத்தில் வரும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.