பித்தகோரஸ் அவரது வடிவியல் தேற்றமான பித்தகோரஸ் தேற்றத்தின் மூலம் இன்றளவும் எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார்.
பித்தகோரஸ் கிரேக்க நாட்டைச் சார்ந்த கணிதவியாளர்; பித்தாகாரின்யம் என்னும் மத இயக்கத் தலைவர், அறிவியலாளர், தத்துவவியலர் என பன்முகம் கொண்டவர்.
ஹேரோடோட்டஸ் இவரை கிரேக்கர்களுள் மிகத் தகுதி வாய்ந்த மெய்யியலாளர் என்று குறிப்பிடுகிறார். இவர் சிறந்த முதல் கணிதவியாலாளர் என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். இவர் கணிதம், இசை மற்றும் வானவியல் துறைகளில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
இவர் எண்களின் தந்தை எனப் போற்றப்படுகிறார். பண்டை கிரேக்கத்தில் சமயக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களில் புகழ் பெற்றவராக விளங்கினார். அவரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்.
குழந்தை பருவம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை
இவர் சோமாஸ் தீவில் கி.மு. 569ல் பிறந்தார். இவரது தந்தை நெசார்க்கஸ் நவரத்தின கற்களை விற்கும் வியாபாரி. தாய் பித்தாய்ஸ் சோமாஸைச் சேர்ந்தவர். இவர் தனது குழந்தைப் பருவத்தை சோமாஸில் கழித்தார். தனது தந்தையுடன் நிறைய இடங்களுக்கு பயணம் செய்து உள்ளார்.
இவர் இளமையிலே அறிவாளியாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். இவர் புகழ் பெற்ற கிரேக்கக் கவிஞரான ஹோமரின் கவிதைகளின் மீது இருந்து ஆர்வத்தின் காரணமாக, அவற்றை யாழில் இசையமைத்து பாடிக் கொண்டிருந்தார்.
வாழ்க்கை மாற்றம்
தாலஸ், பெரெசைடெஸ் மற்றும் அனாக்ஸிமாண்டர் ஆகிய மூவரும் தான் இவர் கணிதம், வானவியல், தத்துவம், இசை ஆகியவற்றில் சிறந்து விளங்க காரணமானவர்கள்.
இவர் முதலில் பெரெசைடெஸ் என்பவரிடமிருந்து த்துவம் மற்றும் வானவியலைக் கற்றார். பின் தாலஸிடமிருந்து கணிதம் மற்றும் வானவியலைக் கற்றார். பின் தாலஸின் சீடரான அனாக்ஸி மாண்டர் என்பவரிடமிருந்து வானவியல் மற்றும் வடிவியலைக் கற்றார். (அனாக்ஸி மாண்டர் என்பவரே சூரிய கிரகணம் கண்டுபிடிக்கும் முறையை அறிந்தவர்)
பின் தாலஸின் கூற்றுப்படி இவர் கணிதம் மற்றும் வானவியல் பற்றி மேலும் படிக்க கிமு 535ல் எகிப்து சென்றார். எகிப்தில் மதக் குருக்கள் நடத்திய பள்ளிகள் கட்டுப்பாடுகள் நிறைந்தவை. ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்தவர்களே அறிவு தேட தகுதியானவர்கள் என்பது இவர்களது நம்பிக்கை.
பித்தகோரஸை மாவணவனாக ஏற்க பல நிபந்தனைகளை விதித்தனர். அந்த நிபந்தனைகளின்படி 40 நாட்கள் உண்ணா நோன்பு ஏற்று பாடங்களைக் கற்றார். பத்து ஆண்டுகள் கழித்து எகிப்தின் மேல் பாரசீக படை எடுப்பின் காரணமாக இவர் கைது செய்யப்பட்டு பாபிலோனில் (ஈராக்) சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு மாகோயி துறவிகளிடம் புனித தன்மைகள் பற்றி கற்றார். இவரைப் பற்றி லம்லிசஸ் என்ற சிரியா தத்துவவியலார். பித்தகோரஸ் பாபிலோனியாவில் கற்றதன் மூலம் கணிதம், இசை மற்றும் கணித அறிவியலில் முழுமையின் உச்ச கட்டத்தை அடைந்து விட்டதாகக் கூறியுள்ளார். பாபிலோனிலிருந்து வெளியேறி கிரீட்டுக்கு சென்று சட்டத்தின் முறைகளைப் பயின்றார்.
அதன்பின் கிமு. 520ல் பாபிலோனியாவிலிருந்து சோமாஸிற்கு திரும்பி அங்கு அரைவட்டம் என்னும் பெயரில் பள்ளி ஒன்றை நிறுவினார். ஆனால் சோமாசின் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி கிரேக்கத்தின் காலனி நாடான இத்தாலி நாட்டின் தென் பகுதியில் உள்ள குரோட்டனாவில் கிமு 518ல் குடியேறினார். அங்கு சமயப் பள்ளி ஒன்றை நிறுவினார்.
இவருடைய தத்துவக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டோர் அப்பளிள்யிலும் வெளியிடங்களிலும் வசித்தனர். இவருடைய கோட்பாடுகளை ஏற்று பள்ளியில் வசித்தவர்கள் மேதிமோடிகோய் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்கள் தமக்கு என்று சொந்த உடைமைகளை பெற்றியிருக்கவில்லை, சைவ உணவினை உண்டனர். பள்ளிக்கு வெளியில் வசித்தவர்கள் சொந்த உடைமைகளை பெற்றிருந்தனர். சைவ உணவை பின்பற்றத் தேவயில்லை.
பித்தகோரஸ் கோட்பாட்டினை பின்பற்றியோர் பித்தாகோரியனார்கள் என்று அழைக்கப்பட்டனர், இவர்கள் கடுமையான நடத்தை விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர். அவர்கள் உண்பதிலும், உடுத்துவதிலும் மற்றும் பேசுவதிலும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
சமயத் தலைவராக
இவர் சமயத்தைப் பற்றி கற்பிப்பதில் புகழ் பெற்றவராக விளங்கினார். இவரின் சமயத்திற்கான பங்களிப்பு சிறப்பானது. இவர் உயிர்கள் மறுப்பிறப்பு எடுப்பதில் நம்பிக்கை கொண்டு இருந்தார். ஆன்மாவிற்கு அழிவில்லை என்றும் அது தூய்மை பெறும் வரையிலும் மறுபிறவினை எடுக்கும் என்பதே இவரது கோட்பாடாகும். இவர் ஆன்மா எல்லா தாவர, விலங்குளிலும் உள்ளது என நம்பினார்.
கணிதவியலாளராக
இவர் எண்களை ஒற்றை எண்கள், இரட்டை எண்கள், முக்கோண எண்கள் மற்றும் சரியான எண்கள் என வகைப் படுத்தினார். வடிவியலில் இவரின் பித்தாகோரஸ் தோற்றம் என்பது முந்தைய மற்றும் முக்கியமானதாகும்.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகைக்கு சமம் என்பது இத்தேற்றமாகும். இது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியர்களால் கண்டறியப்பட்டாலும் அதனை முறைப்படி நிரூபித்தவர் பித்தகோரஸ் ஆவார்.
உலக இயக்கமானது எதிர்பதமான தொடர்பு உடையது ஆண், பெண் ; இருட்டு, வெளிச்சம் ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.
முக்கோணத்தின் கோணங்களின் கூட்டுத் தொகையானது 2 செங்கோண முக்கோணங்களின் கூட்டுத் தொகைக்கு சமம். பல்வேறு சமன்பாடுகளுக்கு வடிவியல் முறையில் தீர்வு கண்டார். நான்முகி, கனச்சதுரம், எண்முகி ஆகியவற்றை உருவாக்க தெரிந்திருந்தார்.
கோணம், முக்கோணம், பரப்பு, விகித்தாச்சாரம், பல்கோணம் பற்றி நாம் புரிந்து கொள்ள பித்தகோரஸின் பங்களிப்பு முக்கியமானது.
வானவியலாளராக
அண்ட சராசத்தில் பூமியின் வடிவம் கோளம்; கோள்கள், நட்சத்திரங்கள், அண்டம் எல்லம் கோள வடிவம் உடையவை எனக் கூறினார். கோள்களின் இயக்கம் வட்டப் பாதையாகும் எனக் கூறினார். காலையிலும், மாலையிலும் தோன்றும் நட்சத்திரம் வெள்ளி கிரகம் என்பதை அங்கீகரித்தார்.
இசைத்துறையில்
யாழ் இசைக் கருவியில் கம்பிகளின் நீளங்களை விகித்தாசார அடிப்படையில் மாற்றி அமைத்தன் மூலம் அவை இனிமையான, வலிமையான இசையை அளிக்கின்றன எனக் கண்டறிந்தார். இது எல்லா கம்பிக்கருவிகளுக்கும் பொருந்தும் என நிரூபித்தார்.
சொந்த வாழ்க்கை
இவர் தியானோ என்ற பெண்ணை மணந்தார் என்றும் இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் இருந்ததாகவும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஒரு சிலர் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இவரது சொந்த வாழ்க்கை பற்றி இரு வேறு கருத்துக்கள் உள்ளன.
கடைசிக்காலம்
கிமு.495ல் சில வரலாற்று கூற்றுகள் அவர் தனது சீடர்களுடன் வழிபாட்டு இடத்தில் இறந்ததாகவும், வேறு சில குறிப்புகள் மெட்பாண்டம் என்னும் இடத்தில் பசியால் இறந்ததாகவும் குறிப்பிடுகின்றன.
மனிதகுல முன்னேற்றத்திற்கு பலவழிகளில் உதவிய பித்தகோரஸ் அவர்களை நாம் என்றும் நினைவு கூர்வோம்.