பிப்ரவரி 14 – சிறுகதை

முத்துவேல் ஸ்பிளண்டர் பைக்கினை பெட்டி கடையின் ஓரமாக, தான் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தன் புத்தக பையை எடுத்துக்கொண்டு வேக வேகமாக அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

பஸ் ஸ்டாப் அடைந்ததும் அங்கு நின்றவரிடம்

“சார் 7ஜி பஸ் போயிடுச்சா?” என்று கேட்டான்.

“இன்னும் வரல தம்பி.”

“மணி எட்டரை ஆயிடுச்சு. இன்னும் வரலைங்களா?”

“இன்னும் வரல தம்பி. நாங்களும் அதற்காகத்தான் நின்னுகிட்டு இருக்கிறோம்.”

“அப்படியா! இன்னும் வரலைங்களா” என்று கேட்டுக் கொண்டு சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

முத்துவேலின் கண்கள் யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தன. கால்கள் ஒரு இடத்தில் நிற்கவில்லை. அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தான்.

‘சே! மணி எட்டு 40 ஆச்சு. இன்னும் நம்ப பஸ்ஸ காணோமே’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, 7 ஜி. பஸ் வந்து நின்றது.

பஸ்ஸில் இருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறங்க, முத்துவேலின் கண்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தன.

அப்போது கூட்டத்தில் இருந்து முண்டியடித்துக் கொண்டு ரேவதி, கயல், மல்லிகா, ரோகிணி என நால்வரும் இறங்க, முத்துவேலின் கண்கள் கயலின் பார்வை பட்டதும் பணிந்தன.

நால்வரும் பஸ்ஸை விட்டு இறங்கி கல்லூரியை நோக்கி நடக்க, முத்துவேலின் கால்களும் பின்னே நடந்தன.

“அடியேய்! அங்க பாருடி! அவன் பின்னாலையே வரான்.” என்றாள் ரேவதி.

“யார முத்துவேல சொல்றியா? அவன் இன்னைக்கு நேத்தா வரான். மூணு வருஷமா இப்படித்தானே அலைகிறான். ஏண்டி அவன் நம்ம பின்னாலயே சுத்திக்கிட்டு இருக்கிறான்?” என்று கேட்டாள் மல்லிகா

“நம்ப பின்னால இல்லடி. அவன் நம்ம கயலை பார்த்து தாண்டி பின்னாலேயே அலையறான்.” என்றூ பதில் சொன்னாள் ரேவதி.

“பாவண்டி அவன். எவ்வளவு நாளா நம்ம பின்னாடியே சுத்திக்கிட்டு அலையுறான். அடியே கயலு! உனக்கு மனசாட்சியே இல்லையாடி. நானா இருந்தா எப்போவோ ஓகே சொல்லி இருப்பேன்.” என்றாள் ரேணுகா.

“போங்கடி, அதெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல” என்று சிரித்துக்கொண்டே வேகமாக கல்லூரிக்கு நடை போட்டாள் கயல்.

கிளாஸ் ரூமில் கயலுக்கு பாடத்தில் கவனம் செல்லவில்லை.

உண்மையிலேயே முத்துவேல் பாவம் தான். இவர்கள் தவறுதலாக மூணு வருஷமா என்று சொல்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் முத்துவேல் நான்கு வருடமாக கயலின் பின்னால் அலைவது கயலுக்கும் தெரியும் தான்.

கயலுக்கும் முத்துவேலை ரொம்ப பிடிக்கும்.

முத்துவேல் நல்ல பையன். எந்த நேரமும் சுட்டித்தனமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பவன். சிரித்த முகமும் அவனின் சாதுவான குணமும் கயலுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

இருப்பினும் கண்டும் காணாததை போல் அவனை கண்காணித்து கொண்டு தான் இருந்தாள்.

கயலின் மனதில் ‘பாவம். இனி அவனை காக்க வைக்க கூடாது’ என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

தன் புத்தகப் பையில் இருந்து பேப்பர் ஒன்றை எடுத்தாள். அதில் ஏதோ நினைத்து நினைத்து கடகடவென்று எழுதினாள்.

முத்துவேல் கயலை வைத்து கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

கயல் எழுதியதை மடித்து கையில் எடுத்துக் கொண்டு முத்துவேல் டேபிளின் அருகே சென்று யாரும் கவனிக்காத நேரத்தில் கீழே போட்டு விட்டு, பாடம் நடத்திக் கொண்டிருந்த டீச்சரிடம் தான் பாத்ரூம் செல்வதாக பர்மிஷன் வாங்கிக் கொண்டு வெளியே நடந்தாள்.

முத்துவேல் கயலின் கைகளில் இருந்து விழுந்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான் .

கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற முத்துவேல் தனிமையில் சென்று அந்த கடிதத்தை எடுத்து படித்தான்.

அதில் ‘சாய்ந்தரம் ஐந்தரை மணிக்கு நூலகத்திற்கு வரவும். உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கிறது.’ இப்படிக்கு கயல்விழி என்று இருந்தது.

படித்து முடித்ததும் முத்துவேல் இயல்பான பேண்ட் சட்டைக்கு மாறி வெளியில் புறப்பட்டான்.

ஹாலில் உட்கார்ந்திருந்த அப்பா “ஏம்பா முத்துவேலு எங்கப்பா அவசரமா கிளம்பிட்ட? இப்பதானே காலேஜ்ல இருந்து வந்தே …” என்று கேட்டார்.

“வந்து பா, ஃப்ரெண்ட் நூலகத்திற்கு வர சொன்னான். ஆறு மணிக்கு எல்லாம் நூலகம் சாத்திடுவாங்க. அதான் இவ்வளவு அவசரமா போறேன். நூலகத்தில் எனக்கும் புக்கு எடுக்க வேண்டியது இருக்குது.” என்றான் முத்துவேல்.

“பாத்து பத்திரமா போயிட்டு சீக்கிரமா வாப்பா … ஆமாம் தங்கச்சிகள் எல்லாம் எங்கே?”

“அப்பா ரெண்டு பேரும் டியூசனுக்கு போய் இருக்காங்க. நான் சீக்கிரமா வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு ஸ்பிளண்டரை ஸ்டார்ட் செய்தான்.

அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் வசுந்தரா ஆன்ட்டி ஓடி வந்தார்.

“முத்துவேல் தம்பி கொஞ்சம் நில்லுங்க.” என்றார் வசுந்தரா.

“என்ன ஆன்ட்டி? ஏன் இவ்வளவு பதட்டமாக ஓடி வரீங்க ஏன் என்ன ஆச்சு?”

“ஒன்னும் இல்ல தம்பி! காலையில இருந்து அபி நல்லா தான் இருந்தா. என் கூட பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் வந்தா. ஸ்கூல் முடிஞ்சு ரெண்டு பேரும் ஒண்ணாதான் வீட்டுக்கு வந்தோம்.

என்னன்னு தெரியல தம்பி நின்னுகிட்டு இருந்தா அப்படியே மயங்கி கீழே விழுந்துட்டா. அபிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல தம்பி. அவளை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போகணும் செத்த நேரம் வர முடியுமா தம்பி …”

“என்ன ஆன்ட்டி இப்படி கேக்குறீங்க? முதல்ல அபிக்கு என்ன ஆச்சுன்னு பாப்போம் வாங்க” என்று சொல்லிவிட்டு வண்டியை ஸ்டாண்ட் செய்துவிட்டு வசுந்தரா கூடவே தொடர்ந்தான் முத்துவேல்.

சிறிது நேரத்தில் அபியை தூக்கிக்கொண்டு வேகமாக இருவரும் வந்து வண்டியில் ஏறி கிளம்பினார்கள்.

‘மணி ஆறாகப் போகுது இன்னும் இந்த முத்துவேலை காணோமே. இன்னும் என்னதான் செய்கிறானோ தெரியலையே. வருவானா?’ என்று மனதில் எண்ணிக் கொண்டு நூலகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தாள் கயல்.

அப்போது அந்த வழியாக ஒரு ஸ்பிளண்டர் அவளை கிராஸ் பண்ணியது.

‘ஓ! அது முத்துவேல் மாதிரி தெரியுதே. எங்க போறான்? பின்னாடி ஒரு லேடி குழந்தையை வச்சிட்டு உட்கார்ந்திருக்காங்களே. அது யாராக இருக்கும்”‘
என்ற மனக்குழப்பத்தில் இருந்த கயல் நூலகம் பூட்டியதும் கிளம்பி வீட்டிற்கு சென்றாள்.

கிளாஸ் ரூமில் முத்துவேலை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள் கயல்.

முத்துவேலால் கயலின் கண்களை எதிர்நோக்கி பார்க்க முடியவில்லை. கண்கள் கூச தலையை குனிந்து கொண்டான்.

கயல் அவனைப் பார்த்து வாயில் ஏதோ முணுமுணுத்தபடி ஒரு தாளில் ஏதோ எழுதினாள். பின்பு அதை கசக்கி யாரும் பார்த்திராவண்ணம் அவன் மேல் படும்படி வீசிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

முத்துவேல் தன்மேல் பட்டது என்னவென்று சுற்றும் மற்றும் பார்த்தான். அருகில் ஒரு காகிதம் கசக்கி கிடந்தது. எடுத்து பிரித்து பார்த்தான் சந்தேகமே இல்லை இது கயலின் கையெழுத்து தான்.

எடுத்ததை தன் பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். பில் அடித்தது அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிற்கு சென்ற முத்துவேல் தன் சட்டையை கழட்டி வைத்து விட்டு பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டான். அப்போதுதான் கயலின் பேப்பர் உள்ளே இருந்தது அவனௌக்கு ஞாபகம் வந்தது, .

அதை கையில் எடுத்து யாரும் இல்லாத இடமாக பார்த்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்.

‘என்ன பாக்குற. நான் உன் மேல கோவமா இருக்கேன். நேற்று நூலகத்திற்கு வர சொல்லி எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?

நீ என்னடாணா யாரையோ பைக்கில் பின்னாடி உட்கார வைத்து கூட்டிட்டு போற. அவ்வளவு அலட்சியமா இருக்க. நூலகத்திற்கு வந்தவர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு இருந்தாங்க தெரியுமா…

சரி இப்பவாவது வந்து பேசுவேன்னு பார்த்தா. நீ என்ன பாக்காம தலைய கீழ குனிஞ்சுகிட்டே உட்கார்ந்து இருக்க. சரி அதெல்லாம் போகட்டும்.

நாளைக்கு பிப்ரவரி 14. காலேஜ் முடிஞ்சதும் என் தோழிகளோட நான் பீச்சுக்கு போறேன். நீ அங்கே வா. உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியது இருக்குது.

நீ நாளைக்கு வரலைன்னா அப்புறம் என்னைய பார்க்கவே முடியாது. நான் உன்கிட்ட பேசவே மாட்டேன்.’ இப்படிக்கு கயல் என்று இருந்தது.

முத்துவேல் படித்துவிட்டு மீண்டும் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்டான்.

மறுநாள் கடற்கரையில் ரேவதி, கயல், மல்லிகா, ரோகிணி கடலில் கால்களை நனைத்து விளையாடி கொண்டு இருந்தனர்.

தூரத்தில் முத்துவேல் வருவதை கண்டவுடன் ரேவதி மல்லிகா ரோகிணி அருகில் இருக்கும் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக சொல்லி நகர்ந்தனர்.

கயலின் அருகே முத்துவேல் வந்து நின்றதும், கயல்தான் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

“எப்படி சொல்றதுன்னு தெரியல… எனக்கு உன்னைய ரொம்ப புடிச்சிருக்கு. ஏன்னு எனக்கு தெரியல. நீ கிளாஸ் ரூமில் நடந்துக்கிற விதம், பாடத்தில் நல்ல கவனம் செலுத்துவது அனைவரிடமும் அன்பு காட்டுவது, காலேஜில் இருக்கிற பெண்களிடம் கன்னியமாக நடந்து கொள்வது என்று உன்னிடம் இருக்கும் ஏராளமான நல்ல குணத்தைக் கண்டு நான் வியந்து இருக்கிறேன்.

இந்த நாலு வருஷமா நீ என்னைய சுத்துனதா நினைச்சுட்டு இருந்தேன். இல்லவே இல்லை நான்தான் உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் என்று இப்போதுதான் புரிந்தது.

நான் உன்ன லவ் பண்றேன் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தாள்.

“எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்குது. படிப்ப முடிச்சிட்டு எப்படியாவது மிலிட்டரியில் சேரனும்.

எனக்குன்னு சில கடமைகள் இருக்குது. என் அப்பா ஒரு போஸ்ட்மேன். அம்மா இல்ல. இரண்டு தங்கைகள். அவர்களை கரை சேர்க்கணும்.

என் குடும்பத்தை நல்ல விதமாக கொண்டு போகணும் என்ற நினைப்பும் என் லட்சியமும் தான் என்னை வழி நடத்துது.

நீ என்னை காதலிக்கலாம். கடைசி வரை வாழ்க்கைத் துணையாக வரவும் நினைக்கலாம்.

நான் உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை. நீ நினைக்கலாம் ‘அப்போ ஏன் இவன் நம்மள சுத்தி வரணும்னு’

நான் உன்னை மட்டும் அல்ல. என் கூட படிக்கிற பொண்ணுங்க யாரா இருந்தாலும் அவர்களை கண்காணிச்சுக்கிட்டு தான் இருந்திருப்பேன்.

நான் இரண்டு தங்கைகளோடு பிறந்தவன். அவர்களை எப்படி பேணி பாதுகாத்து வருகிறேனோ அதேபோல் தான் என்னுடன் படிப்பவர்களும்.

அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது. அவர்கள் எந்த தப்பான வழியிலும் போய் விடக்கூடாது என்பதற்காகவே நான் உங்களை பாதுகாப்பான முறையில் கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

நீ எனக்கு வாழ்க்கைத் துணையாக வரணும்னு அந்த கடவுள் நினைத்திருந்தால், நாம் இருவரும் இணையனும் என்று விதி இருந்தால் அது தானாக நடக்கட்டும். காலம் பதில் சொல்லும்’ என்று சொல்லிவிட்டு மேலும் அவள் பதிலுக்கு காத்திராமல், திரும்பி முத்துவேல் கடல் மண்ணில் கால் தடம் பதிக்கலானான்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.