பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

அலைகள் இல்லாத கடல் இல்லை. பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை இல்லை. ஏழையோ பணக்காரனோ, ஆணோ பெண்ணோ ஒவ்வொருவருமே ஏதாவது ஓர் பிரச்சினையை அன்றாட வாழ்வில் சந்திக்கிறார்கள்.

பிரச்சினையின் விதமும், தீவிரமும் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன.

பிரச்சினையை நாம் எப்படி சந்திக்கிறோம்? அல்லது ஏற்படுத்திக் கொள்கிறோம்?

நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் கூர்ந்து கவனிப்போமேயானால் சரியான விடை கிடைத்து விடும்.

இரு நபர்களின் எண்ணங்கள் எல்லா நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் ஒன்றாக இருப்பதில்லை. அதனால்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.

நம்மில் பெரும்பாலோர் நாம்தான் மிகச் சரியாகச் செயல்படுவதாக நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி மற்றவர்களிடம் குறைகள் இருப்பதாகவும் நினைக்கிறோம்.

நம்மிடம் உள்ள குறையை எவரேனும் சுட்டிக் காட்டினாலோ அல்லது நம் கருத்துகளுக்கு மறுப்பு சொல்லும்போதோ அவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இல்லை.

முயலுக்கு மூன்று கால்கள் என நாம் பிடிவாதமாக இருக்கும்போது, வாதம் செய்யும் போது பிரச்சினை ஏற்படுகிறது.

வெவ்வேறு விதமான கருத்துகளை, அபிப்ராயங்களைக் கொண்ட மனிதர்களை நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம். நாம் அவர்களைப் புரிந்து கொள்ளாத பட்சத்தில், அவர்களுடன் அனுசரித்துப் போகாத நிலையில் பிரச்சினையை எதிர்கொள்கிறோம்.

நம் அணுகுமுறை மிகச் சரியாக இருந்தால் கூட பிறரால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடிவதில்லை. அதுமாதிரி சமயங்களில் வளைந்து கொடுத்துச் செல்வதே விவேகமானது.

நாம் மட்டுமே சிறந்தவர், நேர்மையானவர். மற்றவர்கள் அப்படி இல்லை என நினைப்பது தவறு. பிறர் சொல்வதையும் பொறுமையாகக் கேட்டு, புரிந்து கொள்ள முயற்சிப்பதே நன்மை பயக்கும்.

தவறு நம்மீது இருந்தால் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வதும், பிறர் மிகச் சரியாக இருப்பார்களேயானால் அவர்களை மனதாரப் பாராட்டுவதும்தான் முறையானது.

அடுத்தவர் மீது ஏதேனும் குறையிருப்பின் அதை மற்றவர்கள் முன்னிலையில் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுவது நல்லதல்ல. தனியாக இருக்கும் போது, பக்குவமாகக் குறையை எடுத்துக் கூறி திருந்துவதே நல்ல வழி.

நம் எண்ணப்படி, விருப்பப்படி மற்றவர்களும் செயல்பட வேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பது மிகவும் தவறு.

நம் கருத்துகளை முழுமையாக ஏற்கக் கூடிய விதத்தில் அவர்களை சாந்தப்படுத்தி, நம்பிக்கை ஏற்படும் விதத்தில் மிகப் பக்குவமாக எடுத்துரைத்தல் அவசியம்.

நம் எண்ணங்களும் விருப்பங்களும், அபிப்ராயங்களும் மிகச்சரியாக இருக்குமேயானால் நிச்சயமாக மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிகார தோரணையில் கட்டளை இடுவதைத் தவிர்த்து, வேண்டுகோள் விடுப்பது சாலச் சிறந்தது. பிறருடைய உதவி மிகச் சிறியதாக இருப்பினும், நன்றி நவில்வது பயன் தரும்.

பிறரிடம் நாம் காணும் நற்செயல்களை, நற்குணங்களைப் பாராட்ட வேண்டும். பிறர் ஏதேனும் தவறு செய்தால் எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டுவதை தவிர்த்தல் நலம்.

நம் தவறுகளை ஒப்புக் கொள்ளுதல், வீணான வாதங்களைத் தவிர்த்தல், பிறர் முன்னிலையில் ஒருவரது குறையை வெளிப்படையாக விமர்சிக்காமல் மென்மையுடனும் மரியாதையுடனும் பேசுதல், முடிந்த வரை பிறருக்கு உதவுதல், தீங்கு நினைக்காமை, கொடுத்த வாக்கை சிரத்தையுடன் காப்பாற்றுதல், நமது அணுமுறையும் நோக்கமும் மிகச்சரியாக இருக்குமேயானால் நிச்சயம் எதிலும், எப்போதும் வெற்றி கொள்வோம் என உறுதியாக நம்புதல் போன்றவை பிரச்சினைகளலிருந்து நாம் விடுபட நிச்சயம் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

One Reply to “பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.