பிரச்சினைகளும் தீர்வுகளும் – 1

‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிஷம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

ஆனால், எல்லோருடைய வாழ்விலும் ஆனந்தம் திளைத்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தால், ‘ஏமாற்றம்’ தான் நமக்கு விடையாக அமையும்.

மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை ஏன் பிரச்சனைகளோடு கழிகிறது?

பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் நொந்து அனுபவிக்கிறார்கள்?

சிறுவயதில் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, கஷ்டப்பட்டு 25 – 30 வருடங்களைத் தாண்டி, தனக்கென எதுவுமில்லை என்ற நிலையில் நடு இரவில், தனி அறையில், படுத்த படுக்கையில், தூக்கமில்லாமல், மனைவி, மக்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், கடந்த கால பயணத்தின் நினைவில், கண்களிலிருந்து வெளி வருகின்ற ஒவ்வொரு கண்ணீர் துளிகளின் கேள்விகளும் இதுதான்.

இவைகள் எல்லாம் ஏன் எனக்கு நடக்கின்றன?

எனக்கு மட்டும் இறைவன் இப்படி படைத்து விட்டானா?

வாழ்க்கையை நான் புரிந்து கொள்ளவில்லையா?

வாழ்க்கையை எனக்கு நானே போர்க்களமாக்கி கொண்டேனா?

எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வாழ்க்கையை எனக்கு மட்டும் வாழத் தெரியவில்லையா?

இல்லை அப்படி வாழத் தெரிந்தும் வாழ மறுக்கிறேனா?

உலகில் பிறந்த சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்கள் தகுதிகளுக்கு தகுந்தாற் போல் பிரச்சனை, கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

பிரச்சினை, துன்பம், கஷ்டம் என்பது பொதுவான ஒன்றுதான். அந்த பிரச்சனைகளை எப்படி கையாளுகிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் ஆனந்தம் அடங்கி இருக்கிறது.

பிரச்சனைகளில் தவிக்கின்றவர்கள் கீழ்வரும் கோணங்களில் யோசித்துப் பாருங்கள்.

பிரச்சினை என்பது என்ன?

பிரச்சினை ஏன் ஏற்படுகிறது ?

பிரச்சினை எங்கிருந்து வருகிறது ?

பிரச்சினை எதனால் வருகிறது?

பிரச்சினை எப்போது வருகிறது?

பிரச்சினை யாரால் வருகிறது?

பிரச்சினை என்பது என்ன?

‘ பிரச்சினை’ என்பது ”நாம் பயப்படுகின்ற, நம்மை கஷ்டப்படுத்துகின்ற, சிரமப்படுத்துகின்ற, நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு செயல் என்று சொல்லலாம்.

பிரச்சனை என்பது ‘கானல் நீர்’ போல!

ஒருவரிடம் ஒரு குச்சியைக் கொடுத்து, இந்த குச்சியை ஆட்டாமல், அசைக்காமல் அப்படியே 5 நிமிடங்கள் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள். அவர் அப்படியே வைத்திருப்பார்.

அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கச் சொல்லுங்கள். இப்போது ‘கை வலி’ ஆரம்பமாகும். 5 மணி நேரம் அப்படியே வைக்கச் சொல்லுங்கள்.

இப்போது அவரின் கை மட்டுமல்ல உடல் முழுவதும் மரத்துப் போய்விடும். இப்போது நீங்கள் அந்த நபரிடம், 5 மணி நேரம் கையில் வைத்திருந்த குச்சியை தூக்கிப் போட்டு விடுங்கள் என்று சொல்லுங்கள்.

சிறிது நேரத்தில் மரத்துப்போன நிலை மாறி, வலி குறைந்து சாதாரண நிலைக்கு வந்துவிடுவார். சற்று யோசித்துப் பாருங்கள்.

‘ஒரு சாதாரண குச்சிக்கு’ உடலை மரத்துப் போக செய்யும் தன்மை இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் எல்லோருடைய பதிலாகவும் அமையும். அந்த குச்சியை பிடிக்க வேண்டிய, வைத்திருக்க வேண்டிய நுட்பம் கையாளும் விதம் அவருக்கு தெரியவில்லை என்பதுதான் அதன் அர்த்தம்.

பிரச்சினை என்பது இந்த குச்சியை போன்று தான்.

ஒரு சிறிய சாதாரண பிரச்சினையை, தலைக்கு ஏற்றினால் அது உடல் முழுக்க பாதிப்பை, தாக்கத்தை, கோபத்தை ஏற்படுத்தி ‘பைத்தியம்’ பிடிக்கும் அளவிற்கு மாறச் செய்துவிடும்.

கையில் இருக்கும் குச்சியை தூக்கி எறிந்து விட்டால் உடலில் பாரம் குறைந்து விடுவது போல், பிரச்சினையை தூக்கி எறிந்து விட்டால் நிம்மதியாக இருப்பீர்கள். அந்த மன நிம்மதி உங்களுக்கு மகிழ்வை கொடுத்து விடும்.

பிரச்சனை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்:

ஒரு பேராசிரியர் தனது பழைய மாணவர்கள் 10 பேரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த பழைய மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பேசிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த கால பரிமாற்றங்கள் இதயங்களை இணைத்து கண்களையும் நனைக்கச் செய்திருந்தன.

அப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் 10 பேர் குடிக்கின்ற தேநீரை மாணவர்களுக்கு முன் வைத்துவிட்டு சென்று விட்டார் அந்த பேராசிரியர்.

மாணவர்களின் கண்கள் அவரைப் பார்த்தாலும் அவர்களின் இதயங்கள் மலரும் நினைவுகளில் மூழ்கிப் போய் இருந்தன.

இன்னும், சிறிது நேரத்தில், தேநீர் அருந்துவதற்காக டம்ளரை மாணவர்களின் கண்முன் தெரியுமாறு கொண்டு வந்து வைத்தார்.

அழகான வடிவம் மற்றும் கண்களை கவரும் அருமையான வண்ணங்களில் அமைந்திருந்த டம்ளர்களை மாணவர்கள் பார்த்த உடன் எனக்கு இது வேண்டும் எனக்கு இது வேண்டும் என ஒவ்வொரு மாணவரின் எண்ணங்களும், குறிக்கோள்களும் அந்த டம்ளர்களின் மீது படர்ந்தது.

தனக்கு இந்த டம்ளர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் உணர்வில் ஒரு மாணவன் ஒரு டம்ளரை எடுக்க, அதே டம்ளரை இன்னொரு மாணவனும் எடுக்க,10 மாணவர்களின் கைகள் டம்ளருக்காக சண்டையிட 10 டம்ளரும் உடைந்து போயின.

சிறிது நேரத்தில் அந்த இடத்தை மௌனம் ஆட்கொள்ள, ‘இந்த இடத்தில், இப்படி செய்து விட்டோம்’ என்று மன வெதும்பலில் மாணவர்கள் தவித்துக் கொண்டு இருக்க பேராசிரியர் சிரித்துக் கொண்டே வந்து, மாணவர்களை பார்த்து சொன்னார்.

”உங்களுக்கு தேவை தேநீர் தான். அந்த தேவையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையான சாதனம் தான் டம்ளர் [CUP AND SAUCER]. தேவையை விட்டுவிட்டு தேவை இல்லாததிற்கு போட்டி போடுவதால் தான் பிரச்சனையே ஏற்படுகிறது” என்றார்.

இந்த சம்பவத்தை அலசிப் பார்த்து நமது வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சனை நமது யதார்த்தமான தேவைகளுக்கா (அ) தேவை இல்லாத விஷயத்திற்கா என்று ஆராய்ந்து பார்த்தால் தேவை இல்லாத விஷயங்கள்தான் மிகைந்து நிற்கும்.

தேவை இல்லாத விஷயம் என்பது சம்பந்தமில்லாத விஷயம் அல்ல! அந்த விஷயங்கள் அதிகம் பயன்படாத விஷயங்கள் அல்லது பொருட்கள் என்று சொல்லலாம்.

(தொடரும்)

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.