பிரச்சினைகளும் தீர்வுகளும் – II

பிரச்சினை ஏன் வருகிறது?

ஒரு பிரச்சினை நமக்கு வந்து, அந்த பிரச்சினை தீர்ந்துவிட்டால் அப்பாடா, பிரச்சினை தீர்ந்து விட்டது என்று பெருமூச்சு விடுகிறோம்.

அத்தோடு அந்த பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. ஒருவகையில், இதுவும் பிரச்சனைக்கான ஒரு காரணமாகி விடுகிறது.

ஒரு பிரச்சினை வந்தால், அப்பிரச்சினைக்கான காரணம் என்ன? எனக்கு ஏன் ஏற்படுகிறது? என்ற பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை அலசி, தேடிப் பார்த்து, ஆராய்ந்து கண்டுபிடித்தால் தலைவலி பாதி குறைந்துவிடும்.

பள்ளி வகுப்பு நேரங்களில் எனது மார்க்கை எனது தந்தையிடம் காண்பிப்பேன். அதை பார்த்து, பாராட்டிவிட்டு இப்படி சொல்வார்.

“மகனே! நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய்! தவறான விடைகளுக்கு இப்போதே சரியான பதில்களை தெரிந்து கொள், பிறகு அது சரியாக அமையும்” என்பார். அப்படித்தான் நடந்தது.

ஒருபிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதற்கான விடையை அப்பொழுதே தெரிந்து கொண்டால் அப்பிரச்சினை பிறகு எழ வாய்ப்பில்லை.

பிரச்சினை எங்கிருந்து வருகிறது?

பிரச்சினை எந்த இடத்தில், எந்த கோணத்தில் இருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக, நீங்கள் இருக்கின்ற வீடு, நீங்கள் பணிபுரிகின்ற அலுவலகம், நீங்கள் பயிலுகின்ற பள்ளி, கல்லூரி, நீங்கள் சார்ந்திருக்கிற சமூகம், நீங்கள் தொடர்புடைய நண்பர்கள், நீங்கள் தொடர்புடைய இடம், மனிதர்கள்.

ஒருமனிதனுக்கு பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய வழிகள் இதுதான். எங்கிருந்து பிரச்சனை ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த இடத்தில் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கவில்லை, எங்கு இருந்தால் மகிழ்வோடு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கவில்லையோ அந்த இடங்களை பரீசீலினை செய்து பார்த்தால், பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் வீட்டில் இருக்கும் போது உங்களுக்கு பிரச்சினை என்றால் அதற்கான காரணங்களை ஆராயுங்கள். வீட்டில் மனைவி, மக்கள் பணம் கேட்கிறார்கள்; அவர்களுடைய தேவையை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ‘தவறு’ (பிரச்சனை) உங்களிடம் தான் இருக்கிறது புரிந்து கொள்ளுங்கள்.

குடும்ப தலைவராக இருக்கின்ற உங்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற பொறுப்பும், கடமையும் உங்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். (தனது குடும்ப நிலை அறிந்து பெண்களும் நடந்து கொள்ள வேண்டும்).

அப்படி எனில், உங்களுடைய சம்பளத்தை உயர்த்த, உங்களுக்கான தகுதியை அதிகரித்துக் கொள்ள நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்.

அதற்கான வேலைகளில் ஈடுபட்டு உங்களது ஊதியத்தை அதிகரித்து கொண்டோ (அல்லது) அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு புரிய வைத்து விட்டால் பிரச்சினை முடிந்தது.

(தொடரும்)

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408