பிரச்சினை யாரால் வருகிறது?
பொதுவாக நமது மன உளைச்சலுக்கான காரணங்களில் இடம் பெறுபவர்கள்
● குடும்பத்தினர்கள்
● உறவினர்கள்
● நண்பர்கள்
● உடன் பணிபுரிபவர்கள்
உங்களுக்கான மன உளைச்சல் யாரால் ஏற்படுகிறது என்பதை உற்று நோக்குங்கள்.
ஒருவேளை ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்துதான் பிரச்சினை வருகிறது என்றால் அதை 100% உண்மையாக, எவ்வித கலப்படமுமின்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இவரிடம் இருந்துதான் பிரச்சினை ஏற்படுகிறது என்று தெரிந்துவிட்டால், உடனே அவரை எதிர்த்து பேசுகிறோம் அல்லது அடித்து விடுகிறோம் (அ) பேசாமல் விட்டு விடுகிறோம்.
இதனால் நமக்குள் மனக்கசப்புகள் வெளிப்படையாக ஏற்பட ஆரம்பிக்கின்றன. எந்த விஷயத்தை நம்மிடமிருந்து அவர் விரும்பவில்லையோ அதை அவரின் சிந்தனைக்கு செல்ல விடாமல், அவரிடம் எப்போதும் பழகுவது போல் பழகுங்கள்.
இதனால் அந்த இடத்தில் உங்களது கண்ணியம் உயர்ந்து தான் நிற்கும். இப்படி உங்களால் செய்ய முடியவில்லை எனில் அவரிடம் இருந்து கொஞ்சம் விலகி நில்லுங்கள்.
பிரச்சினை எப்போது வருகிறது?
ஒருமனிதனுக்கு மகிழ்ச்சியான, கஷ்டமான, சாதாரணமான நேரங்கள் உண்டு. பிரச்சனை என்று எதை நீங்கள் உணருகிறீர்களோ அது எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்கள்
சகிப்புத்தன்மை இல்லாமை
விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாமை
பிறரை பாராட்டுவதை ஏற்க முடியாமை
அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்வது
தவறுகள் செய்வது
திறமையை தவறான இடத்தில் வெளிப்படுத்துவது
போன்ற காரணங்களால் பிரச்சினை எழுகிறது.
தீர்வுகள்
1. ஒரு பிரச்சனை நமக்கு வருகின்றபோது (தொலைபேசியிலோ (அ) நேரிலோ) உடனே நாம் பதறி விடுகிறோம். என்ன விஷயம் என்று முழுமையாக தெரியாமல் டென்ஷனில் ஏதேதோ செய்து விடுகிறோம். அப்படி செய்யாதீர்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் கோபப்படாமல், பதறாமல், பொறுமையுடன் கேளுங்கள். நீங்கள் கோபப்படும் போது, பொறுமை இழக்கும் போது, எந்த விஷயத்தையும் உங்களால் உள்வாங்க முடியாது.
2. உங்களிடம் வந்த செய்தியை (பிரச்சினையை) முழுமையாக காது கொடுத்து கேளுங்கள்.
3. அந்த தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
4. எந்த நபர்களிடமிருந்து பிரச்சினை வந்துள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துங்கள்.
5. நீங்கள் தெளிவான முடிவெடுப்பவர்களாக இருந்தால் அந்த நேரத்தில் சமயோஜித புத்தி கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக, உறுதியாக இரண்டு அல்லது மூன்று முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
6. உங்களால் தெளிவான முடிவு எடுக்க முடியாது போனால், உங்களது நம்பிக்கைக்குறிய அபிமானிகளிடம் சென்று என்ன செய்யலாம் என்பதை தீர்மானித்து முடிவெடுத்து பின் களத்தில் இறங்குங்கள்.
7. பிரச்சினைகளுக்கான அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதை தெரிய முற்படுங்கள்.
8. இவர் இப்படித்தான், இவருடைய குணம் இப்படித்தான் இருக்கும் என்ற பிறரைப்பற்றிய அனுமானம் ஒவ்வொரு நபர்களிடமும் இருக்கும்.
அதன் அடிப்படையில், நமது அனுமானத்தின் சில புரிதல்களில் தவறுகள் இருக்கலாம். எனவே, பிறரைப் பற்றி அனுமானங்கள் சில, பல நேரங்களில் தவறான நட்புக்கு காரணமாகிவிடும்.
9. பிரச்சனைகளை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் தொலைநோக்கு சிந்தனையோடு நோக்குங்கள்.
எதுவுமே நிரந்தரம் இல்லாத உலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?
கவலையை விடுங்கள்!
வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்!
வாழ்க்கை வாழ்வதற்கே!
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408