பிரண்டைப் பொடி

பிரண்டைப் பொடி செய்வது எப்படி?

பிரண்டைப் பொடி சுவையான ஆரோக்கியமான பொடி ஆகும். பிரண்டை மூலிகை வகையைச் சார்ந்தது. பிரண்டையைப் பயன்படுத்தி துவையல், சூப் ஆகியவற்றைச் செய்து ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். தற்போது பிரண்டை கொண்டு பொடி செய்து பதிவிடுகிறேன்.

பொதுவாக மழை பெய்ததும் பிரண்டை தளிர் விடும். இவ்விளம் பிரண்டைத் தண்டையே நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். தளிர் விட்ட சிறிது நாட்களில் பிரண்டைத் தண்டு முற்றி விடும். அதனை நாம் உபயோகிக்க முடியாது.

ஆதால் இளம் பிரண்டைத் தண்டு கிடைக்கும் காலங்களில், அதனைக் கொண்டு பிரண்டைப் பொடி தயார் செய்து, காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொண்டால் நாம் அதிக நாட்களுக்கு பிரண்டையை பொடி வடிவில் உபயோகிக்கலாம்.

இனி சுவையான பிரண்டைப் பொடி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பிரண்டைத் தண்டு – 1 கப் (பொடியாக நறுக்கியது)

கருப்பு உளுந்து பயறு – 1 கப்

கடலைப் பருப்பு – ‍ 3/4 கப்

துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கொத்த மல்லி விதை ‍- 1&1/2 டேபிள் ஸ்பூன்

சீரகம் ‍- 3/4 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் ‍- 1/4 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 4 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (பெரியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புளி – சிறிய கோலிக்குண்டு அளவு

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கப் பொடியாக நறுக்கிய பிரண்டைத் தண்டிற்கு இரண்டு கட்டு பிரண்டை தேவைப்படும்.

பிரண்டைத் தண்டிலிருந்து வெளிப்படும் திரவம் கையினை அரிக்கும். ஆதலால் நல்ல எண்ணெயை கைகளில் குளிர பூசிக் கொண்டு பிரண்டையை சுத்தம் செய்யவும்.

பிரண்டையின் மேல்தோலினை சீவி எடுத்துக் கொள்ளவும்.

அதனைப் பொடியாக சதுரத் துண்டுகளாக்கி உலர்ந்த சுத்தமான துணியில் ஒருமணி நேரம் உலர விடவும்.

கறிவேப்பிலையை அலசி நிழலில் காய விடவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பிரண்டைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி விடவும்.

பிரண்டையைச் சேர்த்ததும்

பிரண்டை பாதி வெந்ததும், காம்பு நீக்கிய மிளகாய் வற்றலைச் சேர்த்து கிளறவும்.

மிளகாய் வற்றலைச் சேர்த்ததும்

பிரண்டையின் நிறம் மாறியதும், மிளகாய் வற்றலையும் பிரண்டையையும் வெளியே எடுத்து விடவும்.

பிரண்டை வெந்ததும்

வாணலியில் சிறிதளவு எண்ணெய் மீதமிருக்கும். அதில் கறுப்பு உளுந்தினைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

கருப்பு உளுந்தினை வறுக்கும் போது

அதே வாணலியில் கடலைப் பருப்பை சேர்த்து வறுக்க‌வும்.

கடலைப் பருப்பு கால் பாகம் வெந்ததும், துவரம் பருப்பினை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பினை வறுக்கும் போது

அதே வாணலியில் கொத்த மல்லி விதை, மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.

அரை நிமிடத்திற்குப் பின்பு அதனுடன் தேவையான கல் உப்பினைச் சேர்த்து வறுக்கவும்.

சீரகமும் உப்பும் படபடவென பொரிந்ததும் அதனைத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மல்லி,மிளகு,சீரகம்,உப்பினை வறுக்கும்போது

அதே வாணலியில் கறிவேப்பிலை மற்றும் புளியைச் சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை வறுபட்டதை அறிய கையால் கறிவேப்பிலையைத் தொடும்போது உடையும்.

கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வறுக்கும்போது

வெள்ளைப்பூண்டினை தோல் நீக்காமல் அதே வாணலியில் வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளைப்பூண்டினை வறுக்கும்போது

வறுத்த எல்லாப் பொருட்களையும் நன்கு ஆற விடவும்.

மிக்ஸியில் வறுத்த பிரண்டைத் தண்டு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, புளி, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகப்பொருட்கள், பருப்புகளைத் தவிர ஏனையப் பொருட்களை சேர்த்ததும்

அதனுடன் உளுந்தம் பயறு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், கொத்தமல்லி, வெந்தயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

மிளகு, சீரகப்பொருட்கள், பருப்புகளைச் சேர்த்ததும்

சுவையான பிரண்டைப் பொடி தயார்.

பிரண்டைப் பொடி
பிரண்டைப் பொடி

பிரண்டைப் பொடி இட்லி, தோசை ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள ஏற்றது. இதனை சுடுசாதத்தில் சேர்த்து நெய் விட்டு பிசைந்து உண்ணலாம்.

ஆரோக்கியமான இப்பொடியை அவசியம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பிரண்டைப் பொடி தயார் செய்யும்போது, சிறிதளவு மண்டை வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பிரண்டைப் பொடிக்கு நான்கு பக்கங்களைக் கொண்ட நாற்பிரண்டையைப் பயன்படுத்தவும்.

தேவையான காரத்திற்கு ஏற்ப மிளகாய் வற்றல் மற்றும் மிளகின் அளவினைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.