பூமி – பிரமிப்பூட்டும் தகவல்கள்

சில மாதங்களுக்கு முன்னர் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு நினைவு வந்தது.

நான் படுத்திருக்கும் பூமியின் இந்தப் பகுதியின் ஆழத்தில் என்ன இருக்கும் என எண்ணத் தொடங்கினேன்.

மண் – கல் – தண்ணீர் – கச்சா எண்ணெய் – நெருப்பு – இது மையப் பகுதி. அதனையடுத்து… என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டேன்.

மீண்டும் கச்சா எண்ணெய் – தண்ணீர் – கல் – மணல் – பசிபிக் கடல் மீன்கள் கப்பல்கள் என்று கற்பனை விரிந்தது. அஃதாவது நாமிருக்கும் பகுதிக்கு மறுபுறம் உள்ள பூகோள அமைப்பில் மகா சமுத்திரம் இருக்கிறது என்ற உண்மையைக் கற்பனையில் கண்ட அன்று தூக்கம் போய் விட்டது.

இருந்த இடத்தில் ஒரு துவாரம் போட முடிந்தால், பசிபிக் கடல் தண்ணீர் வந்துவிடும் என்று நினைத்தாலே, வியப்பாகி விட்டது; தூக்கம் கொள்ளவில்லை; எழுந்து புவியின் அமைப்புத் தொடர்பான புத்தகங்களைத் தேடினேன்.

பூமியின் வரலாறு

சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாயுக்களும், தூசிகளும் சூரியனைச் சுற்றிக் காணப்பட்டன. காலப் போக்கில், தூசிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து துண்டுகளாக உடைந்து, பின் குளிர்ந்து பூமி உட்பட பல கோள்கள் பிறந்தனவாம். இதுதான் நாம் இருக்கும் பூமியின் வரலாறு.

பூமியின் மேற்பகுதியைத் தோண்டினால் மணல், பாறைகள் மற்றும் நீர் வருகின்றன. இப்படியே தோண்டிக் கொண்டு போனால், அதன் நடுப்பகுதியில் என்னவிருக்கும்?

இந்தக் கேள்விக்கு முழுமையான பதில் கூற முடியாது. ஆனால், ஓரளவு விபரங்கள் அறிந்திருக்கிறார்கள், நம் அறிவியல் அறிஞர்கள்.

 

பூமி அமைப்பு

பூமியின் மேல் ஓடு, பாறையாக அமைந்துள்ளது. இந்த மேல் ஓட்டின் அடர்த்தி 10 முதல் 30 மைல் வரை உள்ளது. இதனை ‘லிதோஸ்பியர் என்று கூறுகிறார்கள்.

மேல் ஓட்டின் உயரமான பகுதி கண்டங்களாகும். அதன் தாழ்வான பகுதி கடல்கள், ஆறுகள், ஏரிகளாகவும் உள்ளது. நீர் நிறைந்த மொத்தப் பகுதிகளையும் சேர்த்து ‘ஹைட்ரோஸ்பியர் என்று அழைக்கின்றனர்.

இந்த மேல் ஓடாக அமைந்துள்ள பாறையின் வெளிப்புறத்தையே நாம் ஆராய முடிந்திருக்கிறது. ஆனால், புவியின் உட்புறத்தை ஆராய்வது மிகவும் கடினமான காரியமாகும்.

கிணறு தோண்டுகிறோம்; சுரங்கம் வெட்டுகிறோம்; ஆழமாகப் போகப் போக வெப்பம் வேகமாகக் கூடுகிறது. புவியின் மேற்பரப்பில் இருந்து 2 மைல்தொலைவு ஆழத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கும் அளவுக்கு வெப்பம் உள்ளது.

விஞ்ஞானிகள் நில நடுக்கங்களை ஆராய்ந்து, அவற்றின் வாயிலாகப் பூமியின் உட்புறத்தைப் பற்றி ஒருவாறு தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பூமியின் மேல் ஓட்டிற்கு அடியில் வெப்பம் வேகமாக மிகுவது போலப் பூமியின் மிகுந்த ஆழத்தில் வெப்பம் மிகுதியாவது இல்லை என்பதும், பூமியின் மத்திய பகுதியின் மையக் கருவில், பத்தாயிரம் டிகிரிக்கும் கூடுதலாக வெப்பம் இருக்கும் என்பதும் அறிவியலாரின் நம்பிக்கை. இந்த வெப்பம் சாதாரண வெப்பமா? 2200 டிகிரி வெப்பத்திலேயே பாறைகள் உருகி விடுகின்றன.

பூமி மேல் ஓட்டில் இரு அடுக்குகள் உள்ளன. மேலே உள்ள அடுக்குத்தான் கண்டங்களாக அமைந்துள்ளது. இது கருங்கல்லாகும்; அதற்கு அடுத்து மிகவும் கடினமான பாறைப் பகுதி. அதை ‘பசால்ட்’ என்கிறார்கள்.

பூமி நடுப்பகுதியில் மிகவும் ஆழத்தில் ஒரு மாபெரும் இரும்புப் பந்து உருகிய நிலையில் இருப்பதாக அறிவியலறிஞர்கள் கருதுகிறார்கள். இந்த இரும்புப் பந்தின் விட்டம் சுமார் 4 ஆயிரம் கல்தொலைவு இருக்குமாம்.

மத்தியில் உள்ள இரும்புப் பந்திற்கும் பாறைமயமான பூமியின் மேலோட்டிற்குமிடையே 2 ஆயிரம் கல்தொலைவு அடர்த்தி உள்ள ஓர் ஓடு உள்ளது. இதை மேல் ஓடு மாண்டில் என்று கூறுகிறார்கள். இதுவும் ஒருவகைப் பாறைதான். புவியின் விட்டம் சுமார் 8000 கல்தொலைவு ஆகும்.

புவியின்மேல் காற்று மண்டலம் உள்ளது. புவி, தனது ஈர்ப்பு விசையினால் ஆன மேற்பரப்பில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்குக் காற்றைத் தக்க வைத்துள்ளது. நாம் வானத்தை நோக்கி 20 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால், சுவாசிப்பதற்குக் காற்று இருக்காது.

புவியின் உட்பகுதிகளிலுள்ள அடுக்குகள், உள்ளே மோதல் நிகழ்த்தினால், கட்டிடங்களும் நாமிருக்கும் நகரங்களும் நடுநடுங்கும். அதற்குப் பெயர் பூகம்பமாம்; அதனால், கடல் நமது ஊருக்குள் வருமாம்; அதற்குப் பெயர் சுனாமியாம்.

இவ்வளவு செய்திகள் அடங்கியுள்ள இந்தப் பூமியின் மேல் தளத்தில்தான் நாம் எல்லோரும் வாழுகிறோம் எனபதை நினைக்கும்போது, மிகவும் வியப்பாக இருக்கிறது.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

 

Comments are closed.