பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா – சிறுகதை

ஜம்முக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இருக்கிறது இந்த ஊர். இங்கு பெருமளவில் எதுவும் தீவிரவாத செயல்கள் நடைபெறுவதில்லை. இருப்பினும், இது தீவிரவாதிகளின் உறைவிடம்.

இங்கு இருந்துதான் எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். அதனால் இங்கு இருக்கும் அனைத்து படைப்பிரிவுகளும் மிகவும் கவனமாக இருக்கும்படி உத்தரவு.

கரிகாலன் மற்றும் அவனது 7 பேர் கொண்ட போலீஸ் படை பிரிவுக்கு, இந்த ஊரில் போஸ்டிங் போட்டார்கள். ஒரு ஒருவருக்கும் ஒரு ஒரு வேலை.

கரிகாலனுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும் என்பதால், உளவுத் தகவல்களை தொகுத்து ஆங்கிலத்தில் டைப் செய்து, அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இதுதான் வேலை.

 

அந்த தகவல்களை தருவதற்கு, ஏற்கனவே ஆள் இருக்கிறான். அவன் பெயர் ரஞ்சன் சிங். ஹரியானாவை சேர்ந்தவன்.

அவனுக்கு இந்த ஊர் அத்துப்படி. இங்கு பழம் தின்னு கொட்டை போட்டவன். பட்டாலியன் வரும் போகும், வீரர்கள் வருவார்கள் போவார்கள், ரஞ்சன் சிங் மட்டும் இந்த ஊரில் நிரந்தரம்.

உளவு தகவல்களை பெறுவதில் அவன் கில்லாடி. அவனுக்கு நிகர் இதுவரை யாரும் இல்லை.

அவன் சாதாரண சிப்பாய் தான். அதிகம் படிக்காததால், பதவி உயர்வும் அடையவில்லை. ஆனால் அவனுக்கு டிஜிபி வரை, ஏன் உள்துறை அமைச்சகம் வரை செல்வாக்கு உண்டு.

ஆனால் கேம்பில் அவனுக்கு கெட்ட பெயர் நிறைய. அவன் அதிகாரிக்கு ஜால்ரா கொட்டுபவன் என்றும், இங்கு நடக்கும் எல்லாவற்றையும் அதிகாரிகளுக்கு சொல்லி, வேலைக்கு வேட்டு வைப்பவன் என்றும், யாரும் அவனிடம் நெருக்கம் காட்டுவதில்லை.

கரிகாலனுக்கு அவனைப் பார்ப்பதில், பேசுவதில் ஒரே ஆச்சரியம். கரிகாலன் எப்போதும் இதுபோல, வித்தியாசமான ஆட்களை தேடி வலியச் சென்று பழகுவான்.

ரஞ்சன் சிங்கும் அவ்வளவு சீக்கிரம் யாரையும் அருகே சேர்த்துக் கொள்ள மாட்டான். எப்படியோ கரிகாலனும், ரஞ்சன் சிங்கும் நல்ல நட்பாக இருக்க ஆரம்பித்தார்கள். அது போகட்டும்.

 

விஷயம் என்னவென்றால், இந்தக் கேம்புக்கு, ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவிலும், ஒரு சினிமா தியேட்டர் உண்டு. கரிகாலனும் அவரது 7 நண்பர்களும் சினிமா பைத்தியங்கள்.

இப்போது அந்த சினிமா தியேட்டரில் பிரியங்கா சோப்ரா படம் ஓடுகிறது.

பிரியங்கா சோப்ரா மயங்கி, கிறங்கி, பார்க்கும் ஒரு பட போஸ்டரை கேம்ப் வாசலிலேயே ஒட்டி சென்றுவிட்டார்கள்.

அதை பார்த்ததிலிருந்து அந்த படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கேட்டை விட்டு வெளியே போனால், எப்படியாவது தெரிந்து விடும். அப்படி தெரிந்தால் சஸ்பென்ஷன் நிச்சயம்.

ரஞ்சன் சிங்கை தவிர யாரும் இதை சொல்ல மாட்டார்கள். ஆகவே ரஞ்சன் சிங்கை, கையில் எடுப்பது தான் இவர்கள் திட்டம்.

அதன்படி கரிகாலனின் நட்பை வைத்துக் கொண்டு ரஞ்சன் சிங்கை வழிக்குக் கொண்டு வந்து, சினிமாவுக்கு போவது. அதுவும் பத்து மணி ஆட்டம் பார்ப்பது, யாருக்கும் தெரியாமல் திரும்பி வந்து தூங்கிவிடுவது என சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

 

ரஞ்சன் சிங் ஒத்து கொள்ளவில்லை, மறுத்தான்.

“உங்களுக்கு இந்த இடம் பற்றி எதுவும் தெரியாது. உங்கள் யாருக்கும் தியேட்டரில் போய் படம் பாக்கிற வயசும் இல்லை. பொறுப்புள்ள அதிகாரிகள் இப்படி படம் பார்க்கப் போவது எல்லாம் தப்பு. இது பெரிய ஆபத்து” என்று சொல்லி மறுத்து விட்டான்.

கரிகாலன் நட்பு ஆயுதத்தை இறக்கினான்.

“இல்லை ரஞ்சன், உங்கள் பேச்சை மறுக்க எங்களுக்கு தகுதியில்லை. நீ அனுபவத்தில் பெரியவன். இருந்தும் நமது நட்பின் பொருட்டு நீ உதவி செய்வாய் என இவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். நம்பி கிளம்பி வேறு வந்துவிட்டோம்.” என்றான்.

பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் ஹிந்தியில் தேடி பிடித்து பேசி ரஞ்சன் சிங்கை ஓர் அரை மனதோடு ஒத்து கொள்ள வைத்துவிட்டு, ‘இதெல்லாம் ஒரு பிழைப்பா?’ என நொந்து கொண்டான்.

 

மிஷன் சக்சஸ். பிரியங்கா சோப்ரா நடித்த படம் பார்க்க‌ டிக்கெட்டும் எடுத்தாகி விட்டது. வரிசையாக உட்கார்ந்து ஏக சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.

தியேட்டரில் பெரும் கூட்டம் இல்லை. நாலைந்து பெண்கள் உட்பட மொத்தமே ஒரு 50 பேர்கள் தான் இருந்தார்கள்.

படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் வில்லன் வந்துவிட்டான்; திரையில் அல்ல வெளியில்… ஆம், ரஞ்சன் சிங் தியேட்டருக்கு வந்து, தோள் பட்டை மீது கை வைத்தான்.

“உடனே எழுந்து வாருங்கள் நிலைமை சரி இல்லை” என காதருகே சொன்னான்.

யாருக்கும் எழுந்து வர மனதில்லை.

“என்ன விஷயம்? இங்கேயே சொல்.” என்றார்கள்.

“முடியாது உடனே வெளியே வரவும். வெளியே வரவில்லை என்றால், நான் உயர் அதிகாரிக்கு சொல்லப் போகிறேன்” என்றான்.

வெளியே வந்து விட்டார்கள்.

அவன் மிக அவசரமாக இருந்தான்.

“இந்த படத்தை, இந்த தியேட்டரில் போட ஏற்கனவே நிறைய எதிர்ப்பு. எதிர்ப்பை மீறி படம் திரையிடப்படுவதால், தியேட்டரில் சிறிய அளவில் குண்டு வெடிப்பு நடத்தப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களின் வயர்லெஸ் மெசேஜை வழிமறித்து கேட்ட நிலையில் இந்த இன்புட் கிடைத்துள்ளது. எனவே நீங்கள் உடனடியாக கேம்ப்புக்கு திரும்பி விடுங்கள்.” என்று கூறி விட்டு போய் விட்டான்.

 

கரிகாலன் குழு, காற்று போன பலூனை போல் வாடி நின்றது.

திட்டிக்கொண்டே திரும்பினார்கள்.

“எதுவும் இல்லை, இவன் பொய் சொல்கிறான், நாம் படம் பார்ப்பது பிடிக்கவில்லை. அவன் ஒரு சாடிஸ்ட்” என்று அவன் குலம், கோத்திரம், குடும்பம் எல்லாவற்றையும் கிழித்து தொங்க விட்டார்கள்.

“அவன் ஒரு சாதாரண சிப்பாய் நம்மளை எப்படி கண்ட்ரோல் செய்ய முடியும்? இதெல்லாம் ரொம்ப மோசம். கரிகாலன் நீயும் ஒரு ஜால்ராதான். அவனை மிஞ்சிய ஜால்ரா” என்று கரிகாலனுக்கும் திட்டு விழுந்தது.

கரிகாலன் எல்லோரையும் சமாதானப்படுத்திக் கொண்டே வந்தான். ஒருவழியாக எல்லோரும் படுத்து உறங்க ஆரம்பித்தார்கள். சரியாக இரவு 11 மணிக்கு பெரிய விசில் அடித்தது. எல்லோரும் எழுந்து வெளியில் கூடி நின்றார்கள்.

 

“பக்கத்து தியேட்டரில் பத்தரை மணிக்கு குண்டு வெடித்து விட்டது. வேறு ஒரு பெட்டாலியன் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நீங்கள் அனைவரும் தயாராக இருக்கவும். நாளை காலை உயர் அதிகாரி மீட்டிங்.” எனக் கூறிவிட்டு கேம்ப் இன்ச்சார்ஜ் சென்றார்.

பத்தே கால் மணிக்குதான் கரிகாலன் குழு, அந்த தியேட்டரை விட்டு வெளியே வந்து இருந்தார்கள். பத்தரை மணிக்கு குண்டு வெடித்துள்ளது. கரிகாலனுக்கு அந்த குளிரிலும் வேர்த்தது. மற்றவர்களுக்கும் அஃதே நிலைதான்.

இரவு முழுதும் உறக்கம் போய்விட்டது. கொஞ்சம், கொஞ்சமாக விடிய தொடங்கியது.

மீடியாக்காரர்கள் வந்து விட்டார்கள். மோப்பநாய், இத்தியாதி, இத்தியாதி எல்லாம் வந்து இறங்கி விட்டது.

கரிகாலன் அவன் நண்பர்களுடன் அங்கே போய் பார்த்தான். இவர்கள் எங்கே வரிசைகட்டி அமர்ந்திருந்தார்களோ, அந்த வரிசை சீட் முழுவதும் சாம்பலாய் கிடந்தது.

10 பேர் அங்கேயே இறந்து விட்டார்கள் என்றும், மற்றவர்களை மருத்துவமனைக்குச் சேர்த்திருக்கிறோம் என்றும், தியேட்டர் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கரிகாலனுக்கு ஒரு கணம் உதறல் எடுத்தது. 15 நிமிஷத்தில் நிலைமையே தலை கீழாக போயிருந்திருக்கும்.

 

ரஞ்சன் சிங்கை தேடினான். அவன் உயர் அதிகாரியுடன் இருந்தான்.

கேம்பில் மீட்டிங் போட்டார்கள். உயர் அதிகாரி பேசினார்.

“தியேட்டருக்கு அருகிலேயே நமது கேம்ப் இருந்தாலும் நமது வீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரொம்ப பொறுப்பாக நடந்து கொண்டு உள்ளீர்கள். இதேபோல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, கரிகாலன் இரவு முழுவதும் எனக்கு பொறுப்பாக ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டு இருந்தார்” என்றெல்லாம் பேசினார்.

கரிகாலனுக்கு மட்டும் ரஞ்சன் சிங் காரி துப்புவது போல் தோன்றியது.

அன்றிலிருந்து ரஞ்சன் சிங்கை யாரும் திட்டுவதில்லை. அவன் பேச்சை அப்படியே கேட்க ஆரம்பித்தார்கள்.

அவன் சிப்பாய் அல்ல; தெய்வமென நம்பினார்கள்.

முனைவர் க. வீரமணி
சென்னை
9080420849

 


Comments

“பிரியங்கா சோப்ரா – சிறுகதை” அதற்கு 6 மறுமொழிகள்

  1. பாரதிசந்திரன்

    மனதை உருக்கும் சிறுகதை. சிறுகதையின் இலக்கணம் வெளிப்பாடு. இது சிறப்பாக சிறுகதையில் கையாளப்பட்டுள்ளது.

    ஆசிரியர் இன்னும் நிறைய சிறுகதைகள் எழுத தமிழ் வளரும்; தமிழ் உயரும்.

  2. அருமையான கதை.

    கண்டிப்பும் பாசம்தான் என்பதைக் கதை மிகத் தெளிவாக உணர வைத்தது.

  3. அருமை.

  4. சிறப்பான கதை…

    வாழ்த்துகள்..

  5. Kavinraj Krishnamoorthy

    மீண்டும் ஒரு அற்புதமான முயற்சி…. கோபமுள்ள மனதில் தான் குணம் குடியிருக்கும் போன்ற பல தத்துவங்களை உட்புகுத்தியிருப்பது பாராட்டுக்குரியது…. நன்றி… காத்திருப்பு தொடரும்…

  6. Dr. S. Theerthamalai

    Super this story I understand didn’t blame to others