கலியனூர் கிராமம்,
“கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது? இன்னும் குழந்தை இல்லையா? என்னவா பிரச்னை?”
“பையனுக்கு பிரச்சனையா? இல்ல அந்த பொண்ணுக்கு பிரச்சனையா? “
“நான் நெனச்சேன். அவ மேனா மினிக்கி மாதிரி ரொம்ப பிகு பண்ணுவா? அதான் இப்படி குழந்தை இல்லமா இருக்கா?”
“எனக்கு தெரியும். அந்த பையன் யாரையும் மதிக்க மாட்டான் . ரொம்ப கர்வமா இருப்பான். அதான் இப்படி அப்பா ஸ்தானம் ஆக முடியாம நிக்கிறான்!“ என்று ஊரில் உள்ள தங்களுக்கு பழக்கமான மற்றும் சொந்த பந்தங்களிடம் இந்த மாதிரி பேச்சை கேட்டு கேட்டு சலித்து போனார்கள் பிரியாவும் வினோத்தும்.
பிரியா வினோத் திருமணமாகி ஏழு வருடங்கள் கடந்து விட்டன. குழந்தை இல்லை.
பிரியாவின் உடல்நிலையில் குழந்தை பெற்று கொள்ள பிரச்னை இருப்பதாக ட்ரீட்மென்ட் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஊரே பேசினாலும் இன்று காலை வினோத்தின் அம்மாவும் பிரியாவின் அம்மாவும் அதை பற்றி பேசி கவலைப்பட ஆரம்பித்தனர்.
“சம்மந்தி மன்னிச்சிருங்க. நான் சொல்றேன்னு தப்ப நெனைக்காதிங்க. உங்க பொண்ணுக்கு தான் குழந்தை பெத்துக்கிறதுல பிரச்சனைன்னு சொன்னங்க.
அவளால எங்க குடும்ப வாரிசு தரமுடியாதுன்னு தெரிந்த பிறகு என்ன பண்றதுன்னு நீங்க தான் அவகிட்ட கேட்டு சொல்லணும். வருசங்கள் போய்க்கிட்டே இருக்கு!“ என்று வினோத்தின் அம்மா சரளா பிரியாவின் அம்மா மீனாட்சியிடம் கூறினாள்.
“நீங்க சொல்றது புரியுது சம்மந்தி. உங்க பையனுக்கு வேற கல்யாணம் பண்றது பத்தி கேட்கிறிங்க. அத என் பொண்ணுட்ட சொல்லி சம்மதம் வாங்கி தர சொல்றீங்க. புரோக்கர் வேலை பார்க்க சொல்றிங்க!“ என்று கவலையுடன் கூடிய வலியில் பேசினாள் மீனாட்சி.
“நான் தப்பா ஏதும் பேசல. அடுத்த நடவடிக்கை என்ன என்பது தெரியனும்?“ என்று கேள்வி கேட்டாள் சரளா.
“உங்க வேதனையும் புரியுது. கண்டிப்பா நீங்க எதிர் பார்க்கிற முடிவ தான் நான் சொல்ல போறேன். என் மகளால உங்க குடும்ப மரியாதை ஒன்னும் போக கூடாது. நீங்க இந்த முடிவதான் எடுப்பீங்கன்னு நான் கொஞ்ச காலமா யோசனை பண்ணிகிட்டு தான் இருந்தேன்!” என்று மீனாட்சி கூறினாள்.
“சம்மந்தி நீங்க பேசுறத பார்த்தா நான் என்னமோ உங்க மகளை கொடுமை பண்ண மாதிரி பேசுறிங்க. இதுவரை அவள ஒரு வார்த்தை நான் கேட்டது இல்லை.
இருந்தாலும் எங்க குடும்ப வாரிசு வேணும்னு தான். என் பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு கேக்கிறேன்.
அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு. எனக்கு இப்போ முடிவு தெரியனும்!“ என்று சரளா கண்டிப்பான குரலில் பேசினாள்.
கண்களில் கண்ணீருடன் “நான் என் கையாலாகாத பொண்ண சம்மதிக்க வைக்கிறேன்!” என்று ப்ரியாவை அழைத்தாள் மீனாட்சி.
இருவரின் பேச்சை கேட்டு கொண்டு கண்களில் கண்ணீருடன் பிரியா ‘இதற்கு சம்மதிக்கவில்லை’ என்று தலையாட்டி மறுத்தாள்.
பிரியாவின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த வினோத் கோவமாக பேச வர, அவனை தடுத்து நிறுத்தினாள் பிரியா.இருந்தாலும் வினோத்தின் கோவத்தை அடக்க முடியவில்லை.
தன் அறைக்கு சென்று மருத்துவ அறிக்கை ஒன்றை எடுத்து அவர்கள் முன் வீசினான்.
அதனைப் பார்த்து சரளா மற்றும் மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார்கள்.
“இந்த ரிப்போர்ட்ல பிரியாவுக்கு எந்த குறையும் இல்லை. எனக்கு தான் குறை. என்னால தான் குழந்தை பெத்துக்க முடியாது, அதற்கு தான் ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டு இருக்கேன்.
ஆனா வெளியில சொன்னா என்னைய அசிங்கமா நெனைப்பாங்கன்னு தான் பிரியா தன் மேல குறை இருப்பதா அவ சொன்னா. நான் எவ்வளோ சொல்லியும் அவ கேக்கல.
என்னை யாரும் கேவலமா பார்க்க கூடாதுன்னு அவ அசிங்கப்பட்டுகிட்டு இருக்கா. ப்ரியா ரொம்ப நல்லவ, என்பிரியமானவள். சொல்லபோனா அவ தான் இன்னொரு கல்யாணத்தை பற்றி யோசிக்கணும்!” என்று அதிர்ச்சியை கொட்டினான் வினோத்.
“அப்படி பேசாதீங்க , குழந்தை பெத்துக்கிறது மட்டும் தான் கல்யாண வாழ்க்கையா? கடைசி வரை இருவரும் ஒண்ணா பாசம் குறையாம , விட்டுகொடுத்து அன்போட இருக்கணும். குழந்தையை தத்தும் எடுத்துக்கலாம்“ என்று பிரியா கூறினாள்.
ப்ரியா மற்றும் வினோத்தின் பேச்சு சரளாவை யோசிக்க வைத்தது. தவறாக பேசி விட்டோம் என்பதை உணர்ந்து கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது சரளாவிற்கு.
குழந்தை இன்மை என்பதை குறையாக பார்த்து அவர்களை காயப்படுத்த வேண்டாம்.
அவர்களின் வலி அவர்களுக்கே தெரியும். நாம் ஆறுதல் கூறுவதாக நினைத்து ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.
எல்லாம் நன்மைக்கே!

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!